எம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்

mgr-copy

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன்.

அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

– தகவல் : சு .திருநாவுக்கரசர் ( புதிய தலைமுறை )

எம்.ஜி.ஆர் சமாதியில் வணங்கும் பாட்டி

எம்.ஜி.ஆர் இந்த மூன்று எழுத்து மந்திரம் நம் தமிழக மக்களின் இரத்ததோடு கலந்து ஒன்று. ஒரு சாதாரண மேடை நடிகராக இருந்து திரைப்பட நடிகராக மாறி, அரசியலுக்கு வந்து முதல்வர் பதவியில் அமர்ந்த பின்பும் மனிதனாகவே வாழ்ந்து மறைந்ததால், மக்களுக்கு கடவுளாக தெரிந்தார்.

அவர் மறைந்தாலும் மக்கள் உள்ளத்தில் என்றுமே இறையாக உள்ளார் என்பதற்கு அவருடைய சமாதியில் வணங்கி எழுகின்ற இந்த முதியவளே சாட்சி.

 

மக்கள் திலகத்தை மறக்காத மலேசியா தமிழன்

மக்கள் திலகத்தை இந்த ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள். ஆறாவது முறையாக பதவியேற்றிருக்கும் ஜெயலலிதா கூட எம்.ஜி.ஆரை மறந்துவி்டடார். ஜெயலலிதாவுக்கு தேர்தலின் போது மட்டுமே எம்.ஜி.ஆரின் ஞாபகம் வருகிறது. அதுவும் மக்கள் மத்தியில் எழுச்சியாக பேசும்போது மட்டுமே. இத்தனை வருட ஆட்சியில் எம்.ஜி.ஆர் பெயரில் ஒரு நல்லத்திட்டங்கள் கூட அறிமுகம் செய்யப்படவில்லை. குறைந்த பட்சம் சில நினைவிடங்களையாவது உருவாக்கியிருக்கலாம். அதனையும் செய்யவில்லை. சிலைகளை நிறுவவில்லை. பேருந்து நிலையங்களுக்கோ, அரசு கட்டிடங்களுக்கோ கூட எம்.ஜி.ஆர் பெயர் இல்லை.

திமுக தலைவரான கருணாநிதி இந்த முறை ஆட்சிக்கு வந்தால் “அம்மா உணவங்கள்” அண்ணா உணவங்கள் என்ற பெயரில் இயங்கும் என்று தெரிவித்தார். தலைவரை மதிப்பவர்கள் செய்யும் உயரிய செயல் அது. ஜெயலலிதாவுக்கு எப்போதுமே தன்னுடைய பெயரிலேயே அத்தனையும் இருக்க வேண்டும் என்ற எண்ணம், அழிவை நோக்கியே பயணப்பட வைக்கும். அடுத்ததாக அதிமுக தலைவர்கள் முதல்வரானால் அவர்கள் நிச்சயம் ஜெயலலிதா பெயரில் ஒரு திட்டத்தையும் கொண்டுவர மாட்டார்கள். எம்.ஜி.ஆரை இன்று அதிமுக மறந்துள்ள நிலை அவருக்கு வரும்.

அதிமுக என்ற அடித்தளத்தை மக்கள்திலகம் அமைக்க காரணமாக இருந்தவர்கள் அவரது ரசிகர்களும், மக்களுமே. அதனை எம்ஜிஆர் என்றுமே மறந்ததில்லை. அதனால் மக்களாலும் எம்.ஜி.ஆரை மறக்கவில்லை. அதற்கு சிறந்த உதாரணங்களை இன்றும் நாம் காண்கிறோம்.

ராஜேந்திரன் இவர் மலேசியாவில் வசிக்கின்ற தமிழர். அதுவும் ஐந்து தலைமுறைகளாக மலேசியாவில் வசிக்கின்றவர். அங்கு மகிழுந்து ஓட்டுனாக பணியாற்றும் இவர், எம்.ஜி.ஆர் ரசிகர். தன்னுடைய மகிழுந்தில் எம்.ஜி.ஆரின் படத்தினை கண்ணாடிக்கு அருகே தொங்கவிட்டுள்ளார். மலேசியாவில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் வைத்திருக்கும் ராஜேந்திரனை பாராட்டுவோம்.

 

நன்றி – கலைவானர் மகனார் நல்லதம்பிக்கும், அவரது நற்பேரனுக்கும்.

முதலமைச்சராகியதும் எம்.ஜி.ஆரின் முதல் செய்தி

First_news

தமிழக முதல்வரின் சிறப்பு செய்தி

என்னை வாழவைக்கும் தெய்வங்களே!

அமரர் அம்ணாவின் சீரிய கொள்கைகளான ஊழலற்ற, லஞ்சக் கொடுமைகளற்ற, “எல்லோரும் ஓர் குலம்”, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “எல்லோரும் ஓர் நிலை, எல்லோருக்கும் ஓர் விலை” என்ற அறவழியில் நல்லாட்சி அமைய உங்கள் ஆசியுடன் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கிறேன். உயர்திரு ஓமந்தூரார், மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா போன்ற மேதைகள் இருந்து ஆட்சி செய்த இடத்தில் உங்களை மட்டும் நம்பியே அமருகிறேன்.

அமரர் அண்ணாவின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் என்னை இதுவரை ஆதரித்துத் துணைநின்றது போல் இந்த மாபெரும் பொறுப்பினை நிறைவேற்றும் போதும் எனக்குத் துணை நிற்க வேண்டுமாய் தமிழகத்து மக்களாகிய உங்களைக் கைகூப்பி வேண்டுகிறேன்.

அன்பன்,
எம்.ஜி.ராமச்சந்திரன் 30-06-1977

 

*****

எனது முகநூல் நண்பர் நல்லதம்பி என்.எஸ்.கே அவர்கள் பிரபலங்களான என்.எஸ்.கே பற்றியும், எம்.ஜி.ஆர் பற்றியும் அவ்வப்போது பலரும் அறிந்திராத செய்திகளை பகிர்ந்து கொள்வார். சில நாட்கள் முன்பு அவர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக அமர்ந்ததும் தன்னை முதலமைச்சாராக்கிய தமிழக மக்களுக்கு வெளியிட்ட சிறப்பு செய்தியை பகிர்ந்திருந்தார். அவருக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

 

அதன் பிரதியைப் படித்த போது எம்.ஜி.ஆர் புதிய கட்சியொன்றை ஆரமித்து மக்கள் செல்வாக்கால் முதலமைச்சார் ஆகியிருந்த போதும், செருக்கின்றி காங்கிரஸ் தலைவரான ராஜாஜியும், ஓமந்தூரார் பற்றியும் குறிப்பிட்டுயுள்ளார். மக்களை தனக்கு துணையாக நிற்க வேண்டுமென கைகூப்பி வேண்டுகிறார். சிற்றூரில் தாசில்தாராக இருப்பவர்களே மக்களை மதியாமல் தன்னிச்சையாக தான் என்ற மமதையுடன் செயல்படுகின்ற காலத்தில், முதலமைச்சாரக உயர்ந்த போதும் அடக்கத்துடன் மக்களை மதித்து எம்.ஜி.ஆர் எழுதிய கடிதத்தினை படிக்கும் போது இப்படியெல்லாம் கூட மனிதர்கள் வாழ்ந்துள்ளார்களே என்றே வியப்பு மேலேழும்புகிறது. அதனால்தான் மக்கள் எம்.ஜி.ஆர் மரணிக்கும் வரை மன்னனாகவே வைத்துப் பார்த்துள்ளார்கள். இனி வரும் காலங்கள் இத்தகைய மனம் கொண்டோரை நாம் காணமுடியுமா என்றே தெரியவில்லை.

 

அன்புடன்

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

எம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலை அன்றும் இன்றும்

எம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலை

எம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலை

இரட்டை இலை –

எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்தரத்தின் முகவரி இரட்டை இலை. V for Victory என்று வெளிநாடுகளில் வாழும் தலைவர்கள் இருவிரல்களை காண்மித்து தங்களின் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள். தமிழ்நாட்டினை பொறுத்தவரை இரட்டை விரல்கள் இரட்டை இலையாத்தான் குறிக்கும். எம்.ஜி.ஆருக்கு சாகும் வரை வெற்றி வெற்றி என வெற்றியின் சின்னமாக இருந்த இரட்டை இலையின் வரலாறு உங்களுக்கு தெரியுமா?.

இரட்டை இலை அதிமுக சின்னமாகிய வரலாறு –

எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற கட்சியை தொடங்கிய ஒருவருட காலத்திற்குள்ளாகவே காலங்களிலேயே திண்டுக்கல் தொகுதியில் பாராளுமன்ற இடைத்தேர்தல் வந்தது. திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிந்துவந்த எம்.ஜி.ஆருக்கு தன்னுடைய வலிமையையும், மக்கள் செல்வாக்கினையும் காட்டியாக வேண்டிய காலக்கட்டம். அதிமுக என்ற குழந்தையை முதலில் சந்திக்கப் போகும் தேர்தல் என்பதால் ஊடகங்களும், மக்களும், அரசியல் தலைவர்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தார்கள். திரையுலகில் இருந்து வந்தாலும் அரசியலில் சாதியின் வலிமையை எம்.ஜி.ஆர் உணர்ந்திருந்தார். திண்டுக்கல் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் ஜெயித்துவிடலாம் என்ற நிலையிருந்தும். திண்டுகலில் அதிகம் வசித்த தேவர் சாதியில் மாயாண்டித் தேவர் (மாயத்தேவர்) என்ற வழக்கறிஞரை வேட்பாளராக தேர்வு செய்தார்.

அதிமுகவின் முதல் வேட்பாரளான மாயத்தேவர் தேர்தலுக்கு சின்னங்களை தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது. டிஜிட்டல் பேனர்களோ, தொலைக்காட்சிகளோ, போஸ்டர்களோ புழக்கம் இல்லாத காலத்தில் மதிநுட்பம் வாய்ந்த தேவர் தேர்ந்தெடுத்துதான் இரட்டை இலை சின்னம். தேவர் சிந்தனை செய்தது சுவர் விளம்பரங்களுக்கு ஏற்ற எளிமையான சின்னம் வேண்டும் என்பதையும், மக்களுக்கு எளிதில் நினைவில் நிற்கும் வகையான சின்னம் வேண்டும் என்பதுதான். எம்.ஜி.ஆர் ஆலோசனையும், தலையீடலும் இன்றி கட்சியின் வேட்பாளர் தேர்ந்தெடுத்த சின்னத்தை எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொண்டார் என்றால் அதல் தேவரின் சிந்தனையும், எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையும் இருக்கிறது.

எம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலை –

அன்று –

நமது எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு, அவருடைய உடல் பெரும் மக்கள் வெள்ளத்திற்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இறுதியாக அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது. அவ்விடம் 24-12-1987-ல் அரசுடைமையாகப்பட்டது. அன்றைய தேதியிலிருந்து படிப்படியாக செதுக்கப்பட்டு 24-12-1992 அன்று மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 33,371 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நினைவிடமானது, அழகிய கட்டிட வடிவமைப்புகளால் ஆனது. எம்.ஜி.ஆர் சமாதியை சுற்றி தாமரை இதழ்கள் விரிந்தது போல அமைப்பு, அருகிலேயே நடுநாயகமான நினைவுத்தூண், அங்கு செல்லும் இருவழிப் பாதையில் நான்குதூண் மண்டபங்கள், முன்பக்கத்தில் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை என்று அமைந்துள்ளது. மக்களால் பெரிதும் விரும்ப பட்ட இரு கரங்களை கூப்பியது போல இருக்கும் வரவேற்பு வளைவு சற்று அதியமானது. கூர்ந்து நோக்கும் போது அது இரட்டை இலை சின்னம் தலைகீழாக இருப்பது தெரியும்.

இன்று –

mgr death

சமாதி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும், அதனை மாறி மாறி வரும் கழக ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளததாலும் சமாதியின் நிலை மோசமாக இருந்தது. டாக்டர் எம்.ஜி.ஆர் மீயூசியம் என்ற பெயரில் சமாதிக்குள்ளேயே எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருள்களும், அவருடைய சமகாலத்தில் வாழ்ந்தவர்களுடன் எடுத்த புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கு சென்ற போது, எம்.ஜி.ஆரின் மீயூசியத்திற்குள் சரிவர வெளிச்சம் இல்லை. அங்கிருந்த புகைப்படங்களுக்கு கீழே அடிக்குறிப்புகளும் இல்லை. ஏதோ கடமைக்கென்று கட்டப்பட்டதாகவும், கட்டப்பட்டதால் பெயருக்கு பராமரிக்கப்படுவதாகவும் தெரிந்தது. இடையே அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டதும், எம்.ஜி.ஆர் சமாதியை புதுப்பிக்க சில கோடிகள் ஒதுக்கப்பட்டதை கேட்டு மகிழ்வு பிறந்தது.

புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சமாதியை எம்.ஜி.ஆரின் நினைவு நாளான டிசம்பர் 24ம் தேதி, ஜெயலலிதா திறந்து வைப்பார் என்று நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். நானும் அதையேத்தான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் எப்போதும் நினைவுநாளில் மலர்வளையம் வைத்து வணங்கி செல்ல ஏகப்பட்ட மக்களும், தொண்டர்களும், அரசியல் கட்சியினரும் வருவார்கள் என்பதால், 10-12-2012 அன்றே முதல்வர் ஜெயலலிதா புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சமாதியை திறந்து வைத்துவிட்டார்.  முகப்பில் தலைகீழாக நின்று துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்த இரட்டை இலை சின்னம் இப்போது கம்பீரமாக நிற்கிறது. அருகே பறக்கும் குதிரையொன்று இரண்டுகால்களை தூக்கி வானத்தில் பறக்க தயாராக இருக்கிறது. இருந்தும் இரட்டை இலை சின்னம் குறித்து பலருக்கும் பலவித அபிமானங்கள் இருக்கலாம்.

எனக்கென்னவோ, பழைய இரட்டை இலை சின்னமே அதீதமாக பிடிக்கிறது. மிகவும் அழகாக இருந்த முகப்பு இப்போது இல்லை. மீண்டும் அதே அமைப்பு வேண்டும் அடமெல்லாம் செய்ய இயலாது. ஆட்சியாளர்கள் கைகளில் ஆண்டவர்களின் இடங்கள் படாதபாடு படுவதை நம்மால் வேடிக்கைதான் பார்க்க இயலுகிறது. கோடிகள் செலவழித்து செய்துள்ளதை படங்களைப் பார்த்து முடிவெடுக்க இயலவில்லை. டாக்டர் எம்.ஜி.ஆர் மீயூசியத்துற்குள் என்ன மாற்றம் நடந்துள்ளதை என்பதையெல்லாம் நேரில் சென்று பார்த்த பிறகு இங்கு பதிக்கிறேன். நன்றி.

எம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

– என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
ஆதாரம் –
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

முதல்வரானதும் எம்.ஜி.ஆர் ஆற்றிய முதல் உரை

எம்.ஜி.ஆர் பதவியேற்கும் போது

எம்.ஜி.ஆர் பதவியேற்கும் போது

14 பேர் கொண்ட மந்திரிசபை தமிழக முதல் அமைச்சராக அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜுன் 30 ந்தேதி பதவி ஏற்றார். 1977 சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அதைத்தொடர்ந்து, மந்திரிசபை அமைக்க எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பட்வாரி அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, கவர்னரை எம்.ஜி.ஆர். சந்தித்து, அமைச்சர்களின் பட்டியலை கொடுத்தார். அமைச்சர்களின் பெயர்களும், இலாகா விவரமும் வருமாறு:-

 • 1. எம்.ஜி.ஆர் முதல் அமைச்சர்.
 • 2. நாஞ்சில் மனோகரன் நிதி.
 • 3. நாராயணசாமி முதலியார் சட்டம்.
 • 4. எட்மண்ட் உணவு
 • 5. பண்ருட்டி ராமச்சந்திரன் பொதுப்பணி.
 • 6. ஆர்.எம்.வீரப்பன் செய்தி, பொதுமக்கள் தொடர்பு
 • 7. அரங்கநாயகம் கல்வி.
 • 8. பெ.சவுந்தரபாண்டியன் அரிஜன நலம்.
 • 9. காளிமுத்து ஊராட்சி.
 • 10. ராகவானந்தம் தொழிலாளர் நலம்.
 • 11. பொன்னையன் போக்குவரத்து.
 • 12. பி.டி.சரசுவதி சமூக நலம்.
 • 13. ஜி.குழந்தைவேலு விவசாயம்.
 • 14. கே.ராஜா முகமது கைத்தறி.

(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)

பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8.15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள். கூடியிருந்தவர்கள் “எம்.ஜி.ஆர். வாழ்க” என்று குரல் எழுப்பினர். 9.15 மணிக்கு கவர்னர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

கவர்னர் வந்ததும், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்ற மந்திரிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். கவர்னர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து கவர்னருக்கு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் கவர்னர் கை குலுக்கினார். காலை 9.15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

கவர்னர் பட்வாரி, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார்.

அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி பத்திரங்களில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டார். பின்னர், அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் பட்வாரி அமைச்சர்களுடன் “போட்டோ” படம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு கவர்னர் புறப்பட்டுச் சென்றார்.

பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் வந்திருந்தார். மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினரும் வந்திருந்தார்கள். ராஜாஜி மண்டபத்திலிருந்து திறந்த வேனில் அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மீது நின்று எம்.ஜி.ஆர். கைகூப்பி வணங்கினார். அப்போது, கூடியிருந்தவர்கள் “புரட்சித் தலைவர் வாழ்க” என்று குரல் எழுப்பினர். அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசினார். அவர் கூறியதாவது:-

அன்புக்குரிய தாய்மார்களே, மரியாதைக்குரிய பெரியவர்களே, ரத்தத்தின் ரத்தமான அன்புக்குரிய உடன் பிறப்புக்களே! நமது இதய தெய்வமான பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அங்கே நடந்தது அரசாங்க விழா. அது தவிர்க்க முடியாதது. இங்கு உங்களின் கட்டளையை எதிர்பார்த்து “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று அண்ணா சொன்னது போல் உங்கள் முன்பு நாங்கள் அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கிறோம்.

அமைச்சர்கள் சார்பாகவும், அண்ணா தி.மு.க. சார்பாக வும் தமிழ் மக்களுக்கும் பல நாடுகளில் பல மாநிலங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நான் இங்கு ஒரு செய்தியை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

மக்களின் எண்ணத்தையும், விருப்பத்தையும் சட்டமாக்கவும், தேவையை நிறைவேற்றவும்தான் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்த்தி இருக்கிறார். ஆகவே, லஞ்சமற்ற, ஊழலற்ற, நிர்வாக தலையீடு இல்லாத, நீதிமன்றத்தில் குறுக்கீடு இல்லாத “உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்” என்ற லட்சியங்களில் உயிரை கொடுத்தாலும் , வசதியை இழந்தாகிலும், எதிர்ப்புகளை எதிர்த்து நின்று கடமைகளை நிறைவேற்றுவோம் என்பதை அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன். எங்களது பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள். அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

முதல் அமைச்சர் அறையில்… பின்னர், அரசு தலைமைச் செயலகம் உள்ள கோட்டைக்கு எம்.ஜி.ஆர். காரில் சென்றார். 11.15 மணிக்கு, முதல் அமைச்சருக்கான அறைக்குச் சென்றார். அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்றார். அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்ந்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.

எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும். ஜேப்பியார் “நெருக்கடி நிலை”யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது “மிசா”வில் கைது செய்யப்பட்டார்.

மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலையானபோது, அவரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது. 1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்.