என்னைப் பற்றி

ரத்தத்தின் ரத்தங்களே,

மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவன் நமது புரட்சித் தலைவன் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் பரப்ப ஏகப்பட்ட இணைய வலைப்பூகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரு ரசிகனாக தொகுக்கும் முயற்சிதான் இது.

ஏதேனும் ஆட்சோபனை இருந்தால் சொல்லவும்,.

என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றேன். நேரமிருப்பின் வருகைத் தாருங்கள்.

– அன்புடன்,

ஜெகதீஸ்வரன்.

Advertisements

24 comments on “என்னைப் பற்றி

 1. Surendran சொல்கிறார்:

  ஜெகதீஸ்வரன்… நல்ல முயற்ச்சி.. பாராட்டுக்கள்.

 2. aravarasan சொல்கிறார்:

  ஜெகா,மிகுந்த சந்தோசம் புரட்சிதலைவரின்ஆசி நிச்சயம்உனக்கு உண்டு.வாழ்க!வளர்க!!

 3. BaalHanuman சொல்கிறார்:

  ஜெகதீஸ்வரன்,

  நல்ல முயற்சி… வாழ்த்துக்கள்……

  எம்.ஜி.ஆர் பற்றி பல சுவையான சுட்டிகளை உங்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்…..

 4. aayiraththiloruvan சொல்கிறார்:

  எம்.ஜி.ஆரின் புகழ் பரப்பும் ரத்தத்தின் ரத்தமே நீவீர் பல்லாண்டு வாழ்க….
  எம்.ஜி.ஆர்.பக்தர்களில் ஆயிரத்தில் ஒருவன் (மணி)

 5. Vijay சொல்கிறார்:

  மறக்க முடியாத மாமனிதன்
  இறந்தும் இறவாப்புகளுடையவர்
  அவர்க்கு இம்மண்ணில் இணை யார் ?

  வாழ்த்துக்கள் நண்பா,
  கண்டிப்பாக நீவீர் மென்மேலும் வளருவீர்

  விஜய்

 6. MUTHU MOHAN சொல்கிறார்:

  Can you create a PDF file out of your posts?

 7. kksamy சொல்கிறார்:

  சகோதரன் வலைப்பூ பிடிச்சிருக்கு.
  அதுல தெரிஞ்சிக்க நிறைய விசயம் இருக்கு. ஆனா இந்த பிளாக் ல,
  செத்தவரை பத்தி இதுவரைக்கும் தெரிஞ்சது போதும். இதுக்குக்கு மேல தெரிஞ்சிக்கறது வெட்டி வேலை.
  நான் தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   சகோதரன் வலைப்பூ உங்களுக்கு பிடித்திருக்கிறதா. அதற்கு நன்றி.

   ஆனால் இறந்தவரைப் பற்றி அறிந்து கொள்ளாமல், அவர் சாதனைகளையும், அனுபவங்களையும் எடுத்துக்கொள்ளாமல் நீங்கள் செல்கின்றீர்கள். நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் நிறைய இழந்து போகின்றீர்கள் என்பதைத் தவிற.

 8. NAGAN சொல்கிறார்:

  புரட்சிதலைவரை பற்றி ஆச்சரியமான தகவல் தேவை

 9. athithya சொல்கிறார்:

  thank you very much

 10. BaalHanuman சொல்கிறார்:

  பத்திரிகையாளர் கௌதம நீலாம்பரனின் பார்வையில் எம்.ஜி.ஆர்

  சரித்திரக் கதைகள் எழுதுவதில் சரித்திரம் படைத்து வருபவர் பிரபல எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள், இவருடைய இயற்பெயர் பி.கைலாசநாதன். தீபம் இலக்கிய மாத இதழில் துவங்கி அலைஒசை, கலைமகள், அமுதசுரபி, கணையாழி, கல்கி, விகடன், குமுதம், இதயம் பேசுகிறது, சாவி, குங்குமம், முத்தாரம், ஞானபூமி, குங்குமச் சிமிழ் என்று பிரபலமான தமிழ்ச் பத்திரிகைகளில் இவரது இலக்கியப் படைப்புகளும், கதைகளும், கட்டுரைகளும், சரித்திரக் கதைகளும் பிரசுரமாகியுள்ளன. வானொலி, தொலைக்காட்சிகளிலும் நாடகங்களை எழுதியிருக்கிறார். 40 ஆண்டு காலமாய் பத்திரிகை உலகில் பவனி வந்து கொண்டிருப்பவர். சேது பந்தனம், விஜயா நந்தினி, பாண்டியன் உலா, பல்லவ மோகினி, ஈழவேந்தன் சங்கிலி மன்னன் , மாடத்து நிலவு, வெற்றி மகுடம், வெற்றித் திலகம் போன்ற இவரது சரித்திரக் கதைகள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது. இவருடைய சரித்திரக்கதை ஒன்றை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் விரும்பி படமாகவே எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். அவர் நம் மக்கள் திலகத்தைப் பற்றி கூறும் போது –

  எம்.ஜி.ஆர் இந்த மூன்றெழுத்தின் மகத்துவம் மக்கள் அறிந்ததுதான். என் பள்ளிப் பருவத்தில் எம்.ஜி.ஆர் என்ற பெயர்ச்சொல்; ஒரு வலிமை வாய்ந்த மந்திர முழக்கம் போலவே மக்களால் உச்சரிக்கப்பட்டது. இளைஞர்;கள் மனத்தில் அந்தப் பெயர் உண்டாக்குகிற உத்வேகத்தை உற்சாகத்தை வேறு எந்த நடிகரின் பெயரும் உண்டாக்கியதில்லை என்பதே நான் கண்ட உண்மை.

  நாடோடி மன்னன், அலிபாபா, குலேபகாவலி, சக்கரவர்த்தித் திருமகள், மன்னாதி மன்னன், ராஜா தேசிங்கு, ராணி சம்யுக்தா, ஆயிரத்தில் ஒருவன் போன்ற எம்.ஜி.ஆர் நடித்த சரித்திரப் பாணி படங்களை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. அவற்றை எப்போது பார்த்தாலும் எனக்குப் புது அனுபவமாகவே இருக்கும். அந்தப் படங்கள் என்னுள் ஏற்படுத்திய விவரிக்க இயலாத உணர்வுகள் காரணமாகவோ என்னவோ நான்சரித்திரக் கதைகள் வாசிப்பில் அதிக ஆர்வம் காட்டினேன். கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், அகிலன், நா.பார்த்தசாரதி, கோவி.மணிசேகரன் என்று யார் எழுதிய சரித்திரப் புதினமானாலும் சரி, அதன் கதாநாயகனாக நான் எம்.ஜி.ஆரையே மனதில் கற்பனை செய்வேன்.

  என் கதைகள் கலைமகள், அமுத சுரபி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாக ஆரம்பித்தன. மெல்லமெல்ல என் மீது வரலாற்றுக் கதைகள் எழுதுபவன் என்கிற முத்திரையும் பதியலாயிற்று. நிறையச் சரித்திரக் கதைகள் எழுதினேன். பண்டைய தமிழ் மன்னர்களையும், அவர்களின் வீரதீர வாழ்க்கைச் சம்பவங்களையும் எழுதத் தீர்மானித்த போது என் மனக்கண்ணில் அந்தக் கதாபாத்திரமாக எம்.ஜி.ஆர் தான் தோன்றினார்.

  மணியன் அவர்கள் ஆனந்த விகடனிலிருந்து விலகி இதயம் பேசுகிறது இதழை ஆரம்பித்ததே எம்.ஜி.ஆர் ;அளித்த ஆதரவினால் தான். மணியன் அடிக்கடி எங்களிடம் எம்.ஜி.ஆர் பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். நான் மணியனிடம் மிக நெருக்கமான ஊழியனாக இருந்தேன். புரூப் லீடராகப் பணிபுரிந்த என்னை உதவிய ஆசிரியர் பதவிக்கு உயர்த்தியதோடு என் பெயரையும் இன்பிரிண்டில் சேர்த்து வெளியிட்டுக் கவுரவித்தார்.மணியன் ஒருநாள் ஒரு பெரிய எம்.ஜி.ஆர் படத்தை கோல்டு கலர் பிரேமிட்டு அவர் அறையில் மாட்டச் செய்தார். அங்கு வேறு எந்தப் படமும் இல்லை. எதற்கு சார் இந்தப் படம் என்று கேட்டேன். அதற்கு அவர் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவது முடியாது காரியம் போல் தோன்றியது. எம்.ஜி.ஆரிடம் போய் நேற்று இதுபற்றிச் சொன்னேன். தொழிலாளர்களுக்கு சம்பளம் தரக்கூட வழியில்லை என்றேன். அவர் நிறைய ஆறுதல் கூறினார். பத்திரிகை ஆரம்பத்தவுடன் பெரிய சர்க்குலேஷன் எல்லாம் போகாது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள், போகப்போக வளர்ச்சி நிச்சயம் என்று கூறி தொழிலாளர்களுக்கான மூன்று மாதச் சம்பளத்தை மொத்தமாக என்னிடம் தந்தார்.அதில் தான் இந்த மாதம் உங்களுக்கு ஊதியம் தரப்போகிறேன். அதனால் தான் எம்.ஜி.ஆர் படத்தை என் அறையில் மாட்டச் சொன்னேன். அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு வெற்றி மீது நம்பிக்கை வருகிறது என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

  1978 ஆம்ஆண்டு ஜனவரி முதல் வாரம் இதயம் பேசுகிறது இதழ் ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவது இதழிலேயே எம்.ஜி.ஆரின் அட்டைப் படம் தான். தைப் ;பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் எம.ஜி.ஆர் வீட்டில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆயிரக்கணக்கான பேருக்கு பொங்கல் விருந்து படைப்பார் எம்.ஜி.ஆர். அந்த ஆண்டு அதை ஸ்பெஷல் கவரேஜ் செய்து இதயம் பேசுகிறது இதழில் அட்டைப்பட கட்டுரையாக வெளியிட்டார் மணியன். அப்போது கூட மணியன் அவர்களோடு நானும் எம்.ஜி.ஆர் இல்லம் சென்றிருக்கலாம். ஆனால் ஆசிரியர் இட்ட வேறு பணிகளைச் செய்வது என் கடமையாக இருந்ததால் என் ஆசை நிராசையானது.

  கமலஹாசன் நடித்த ராஜபார்வை படத்தின் 100வது நாள் விழாவை அவருடைய ராஜ்கமல் பட நிறுவனத்துடன் சேர்ந்து இதயம் பேசுகிறது வார இதழ் மிகச்சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டது. இவ்விழா அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில் ஏவி.எம்.ஸ்டூடியோவில் நிகழ்ந்தது.

  அந்த விழாவில் நான் ஆசிரியர் மணியன் இட்ட கட்டளைகளை ஏற்று அங்கும் இங்கும் ஒடியாடிச் செயல்பட்டேன் என்மீது எம்.ஜி.ஆரின் பார்வை பலமுறை பட்டது. முதல்வர் என்பதற்கான பாதுகாப்புக் கெடுபிடிகள் ஏதும் இல்லை. கமலை வாழ்த்திப் பேசிய எம்.ஜி.ஆர் சத்யா மூவீஸ் சார்பில் அங்கே கமலை வைத்துப் படம் தயாரிக்கப் போகும் எண்ணத்தை வெளியிட்டார்.

  நான் எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்தும் அவரை அருகில் பார்த்தும் பேச முடியாது போன போதும் நான் எழுதிய கதை ஒன்று எம்.ஜி.ஆர் மனதைத் தொட்டது. அதை அவர் திரைப்படமாக எடுக்கவும் எண்ணினார். என் துரதிருஷ்டம் அதுவும் நிகழாமல் போயிற்று. ஆயினும் அந்த சம்பவம் என்னால் என்றுமே மறக்க முடியாதது.

  1983ம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நிகழத் துவங்கி நாள்தோறும் அந்த மக்கள் அகதிகளாக ராமேஸ்வரம் கரையில் வந்து குவியத் துவங்கியிருந்தார்கள். பத்திரிகைச் செய்திகள் கண்டு நான் மனம் பதறினேன். அங்கே தமிழ் இனம் படும் இன்னல்களால் விவரிக்க இயலாத வேதனை உணர்வுகளால் உந்தப்பட்ட ஒரே இரவில் ஈழவேந்தன் சங்கிலி என்னும் வரலாற்று நாடகம் ஒன்றை எழுதினேன். அதை மறுநாள் மணியன் சாரிடம் கொடுத்தேன். கதையைப் படித்துவிட்டு கலங்கா என் கண்கள் உன் கதை படித்துக் கலங்கின என்றார். என் கதை அவர் மனத்தை மிகவும் உலுக்கி விட்டது. உடனே அவர் அதை மேடை நாடகமாக நடத்த விரும்பினார். கலைமாமணி ராதுவின் பொறுப்பில் ஸ்ரீகவி அவர்கள் நாடகத்தை இயக்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

  இலங்கை சம்பந்தப்பட்ட வரலாறு என்பதால் இலங்கை தமிழ்த் தலைவர் அ.அமிர்தலிங்கம் முன்னிலையில் தழிழக முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில் நாடகம், சென்னை கலைவாணர் அரங்கில் அரங்கேறுவதாக இருந்தது. ஆனால் அந்த நாடகம் குறிப்பிட்டபடி மேடையேறவில்லை. காரணம் எம்.ஜி.ஆர் மணியனை அழைத்து அது என்ன கதை என்று விசாரித்திருக்கிறார். மணியனும் உணர்வுபூர்வமாக அந்தக் கதையை முதல்வரிடம் விவரித்திருக்கிறார். அது வீரபாண்டிய கட்ட பொம்மன் வரலாற்றுக்கு இணையான கதை.

  காலத்தால் ஈழவேந்தன் சங்கிலியின் வீர வரலாறு, கட்ட பொம்மன் வரலாற்றுக்கு முன்பே நிகழ்ந்தது. போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சங்கிலி மன்னனைத் தந்திரமாகச் சிறை பிடித்துக் கப்பலில் ஏற்றிக் கோவாவுக்குக் கொண்டு சென்று தூக்கலிட்டுக் கொன்று விட்டனர் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட மாபெரும் புரட்சி வீரனான சங்கிலி மன்னனின் கதை எம்.ஜி.ஆரின் மனதைத் தொட்டு விட்டது. ஆனால் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் அதை மேடையேற்றினால் பிரச்சினைகள் ஏற்படும் என்று கருதிய எம்.ஜி.ஆர் , இப்போது இந்த நாடகத்தைப் போட வேண்டாம் என மணியனிடம் கூறிவிட்டார். உடனே எல்லா முயற்சிகளும் கைவிடப்பட்டன.

  நான் மிகவும் உடைந்து போனேன். எம்.ஜி.ஆர் தலைமையில் அதுவும் தழிழக முதல்வர் என்ற நிலையில் அந்த நாடகம் அரங்கேறியிருந்த தால் என் நிலை எவ்வள வோ உயர்வு பெற்றிருக் கும். எம்.ஜி.ஆரின் பாராட்டைப் பெற்று மகிழ்ந்திருப்பேன். ஆனால் என் கனவுகள் ஈடேறாமல் போயின.

  மிகுந்த கவலையில் இருந்தேன் நான். அப்போது மணியன் அவர்கள் சொன்ன ஒரு தகவல் என் கவலைகளை மாற்றிக் களிப்பில் மூழ்கச் செய்தது.

  எம்.ஜி.ஆர் உன்னைப் பார்க்க விரும்புகிறார். நேரில் அழைத்துக் கொண்டு வரச் சொன்னார். அந்த நாடகத்தை இப்போது நடத்த வேண்டாம். பிரச்சனைகள் வரும். மத்திய அரசு தடை செய்ய நேரலாம் என்றார். ஆர்.எஸ்.மனோகர் குழு மூலம் பிறகு மேடையேற்றலாம் என்றார். முதல்வர் எம்.ஜி.ஆர் பேச்சை மீறி நான் என்னப்பா செய்ய முடியும்…? என்று ஆசிரியர் மணியன் கூறியதும் நான் வாயடைத்துப் போனேன்.

  எம்.ஜி.ஆர் அந்தக் கதையைப் பிறகு சினிமாவாக எடுக்கலாம் என்றும் மணியனிடம் கூறினாராம். அதில் சங்கிலி மன்னனாக ரஜினியை நடிக்க வைக்கலாம் என்றும் எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். சங்கிலி மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னர் ரகுநாத நாயகர் வேடத்தில் நடிகர் சிவகுமாரை நடிக்க வைக்கலாம் என்றாராம். இன்னும் சில பாத்திரங்களுக்கு இன்னின்ன நடிகரைப் போடலாம் என்றும் எம்.ஜி.ஆர் கூறியதாக மணியன் குறிப்பிட்டார். அத்துடன் நாடகத்தை உடனே இதயம் பேசுகிறது வார இதழில் தொடராக வெளியிட வேண்டுமென்றும் அது மக்களிடம் பேசப்பட்ட பிறகு மேடையேற்றினால் அதிக பிரச்சினை ஏழாது. மேலும் நாடகம் சிறப்பாக செல்வாக்குப் பெறும் என்றும் எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார்.

  அவர் கட்டளையிட்டவாறே மணியன் ஈழவேந்தன் சங்கிலி என்ற அந்த நாடகத்தை இதயம் பேசுகிறது வார இதழில் தொடராக வெளியிட்டார். அதற்காக ஒரு பெரிய கட்அவுட் கூட இலங்கைத் தீவு வடிவில் அமைக்கப்பட்டு சங்கிலி மன்னன் வீரவாளுடன் நிற்பது போன்று ஜெமினி மேம்பாலம் அருகே வைக்கப்பட்டது.

  பிறகு அது மேடையேறவில்லை. திரைப்படமாக் கப்படவும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் என் கதை ஒன்று மக்கள் திலகம் எம.ஜி.ஆரின் இதயம் தொட்டது. அவர் அதைப் படமாக்கவும் எண்ணினார் என்கிற மகிழ்வு ஒன்றே என் வாழ்நாள் முழுக்க என் மனத்தில் இனிக்கும். மகுடம் சூடிய மகிழ்வையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 11. BaalHanuman சொல்கிறார்:

  “மதுரை வீரன்”- பாண்டியநாட்டு மக்களின் காவல் தெய்வமாகக் கொண்டாடப்படும் மதுரை வீரன் கதை நாடக உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.

  வீரமும் தீரமும் நிறைந்த அந்த வரலாற்றை படமாக்க முடிவு செய்த லேனா செட்டியார் அதன் கதாநாயகனாக எம். ஜி. ஆர் அவர்களை தேர்ந்தெடுத்தார்.

  படத்தை ஒப்புக்கொள்ள சற்று தயங்கினார் எம். ஜி. ஆர். காரணம் – மதுரை வீரன் ஒரு காவல் தெய்வம். அவர் சார்ந்திருந்த திராவிட இயக்க கொள்கைகளுக்கு நேர்மாறான பாத்திரங்களை ஏற்று நடிக்க எம்.ஜி. ஆரிடம் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் படத்துக்கு கதை வசனம் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். அவரும் அப்போது திராவிட இயக்கத்தில் தான் ஈடுபட்டிருந்தார். ஆகவே அந்தப் படத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளை வலியுறுத்தும் வண்ணம் சில மாறுதல்கள் செய்யப்பட எம்.ஜி. ஆர். நடிக்க சம்மதித்தார். அதுவும் தவிர மக்கள் மனத்தில் பரவலாக நிலைபெற – குறிப்பாக பாமர மக்கள் மனதில் தான் ஒரு “மாஸ் ஹீரோவாக” நிலைபெற – இப்படிப் பட்ட வேடங்கள் கை கொடுக்கும் என்பதால் சம்மதித்தார் அவர்.

  பி, பானுமதி, பத்மினி, டி.எஸ். பாலையா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஆகியோர் நடித்த படத்துக்கு இசை அமைக்கும் பொறுப்பை ஜி. ராமநாதனுக்கு அளித்தார் லேனா செட்டியார்.

  நாடக மேடையில் பிரபலமான கதைக்கு அதே நாடக மேடையில் இருந்து வந்த ராமநாதன் இசை அமைப்பது படத்தின் வெற்றியை உறுதி செய்யும் என்று கருதினாரோ என்னவோ? அந்தக் கணிப்பு வீண் போகவில்லை.

  மகத்தான வெற்றிபெற்ற மதுரை வீரன் படம் அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

  ஒரு நடிகராக இருந்த எம்.ஜி. ஆர். அவர்களை “மக்கள் திலகமாக” மாற்றிய பெருமை மதுரை வீரன் படத்துக்கு உண்டு.

  அந்தக் காவல் தெய்வத்தின் வேடத்தை ஏற்று திறம்பட நடித்த அவர் லட்சோப லட்சம் மக்களின் இதய தெய்வமாக நிலை பெற அடித்தளம் அமைத்துக்கொடுத்த படம் மதுரை வீரன் தான்.

  ஒரிஜினல் கதைப்படி சிவபக்தியில் திளைத்திருந்த மதுரை வீரனை திராவிட இயக்க புரட்சியாளனாக உருமாற்றினாலும் படத்தில் அந்தக் குறையே தெரியாதபடி கண்ணதாசன் கதை அமைக்க – எம்.ஜி. ஆர். நடிக்க – திறம்பட இயக்கி இருந்தார் இயக்குனர் திரு.யோகானந்த் அவர்கள்.

 12. BaalHanuman சொல்கிறார்:

  ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து ….
  —————————————————————–
  ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள்.

  உங்களைத் தொட்டுப் பார்க்க நினைத்து, தொட முடிந்த தூரம் வந்தும் தொட முடியாமல் நின்றேன்.

  எம்.ஜி.ஆருக்கே மரணமா?

  எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது.

  காற்று – சமுத்திரம் – வானம் – எம்.ஜி.ஆர்

  இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு.

  அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது.

  47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா?

  இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன்.

  நீண்டநேரம் என்னை அங்கே நிற்க அனுமதிக்கவில்லை.

  ஜனத்திரள் என்னைப் பிதுக்கியது.

  சட்டென்று நகர்ந்து ராஜாஜி ஹாலின் ராட்சதத் தூண் ஒன்றை அடைக்கலம் பற்றி, கூட்டத்தை நோட்டமிட்டேன். அங்கங்கே அரசாங்க விதிகளுக்கு உட்பட்டுச் சிலர் அழுது கொண்டிருந்தார்கள். நிஜக்கண்ணீர் வடித்தவர் பலர் ; நீலிக்கண்ணீர் வடித்தவர் சிலர். வருத்தக் கண்ணீர் வடித்தவர் பலர்.

  வாடகைக் கண்ணீர் வடித்தவர் சிலர். உயிரைக் கண்ணீராய் ஒழுக விட்டவர் பலர் ; மிகப் பலர்.

  என்னால் அழ முடியவில்லை.

  அழுகை வரவில்லை.

  மனிதல் மட்டும் சோகப் பனிமுட்டம்.

  “நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா ! உனக்கா மரணம்?”என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது.

  அங்கே கூடியிருந்த அரசியல்வாதிகளில் பலர் நாளைகளைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்க- நானோ உங்கள் நேற்றுகளை நினைத்தே விக்கித்துக் கொண்டிருந்தேன்.

  கண்டியோ வடவனூரோ எங்ககேயோ பிறந்தீர்கள் ; தமிழ்நாட்டுக்குள் பிழைக்க வந்தீர்கள் ; தமிழ்நாட்டில் பல பேரைப் பிழைக்க வைத்தீர்கள். கும்பகோணம் யானையடிப் பள்ளி வறுமையில் கழிந்த வால்டாக்ஸ் ரோடு முகம் பார்க்க முடியாமல் முதல் மனைவியின் மரணம் – கோடையில் எப்போதாவது படபட வென்று பொழிந்து ஏமாற்றிவிட்டுப்போகும் மேகம் மாதிரி படவுலகில் அவ்வப்போது சின்னச்சின்ன வாய்ப்புகள்.

  ஒரே ஒரு’க்ளோஸ்-அப்’ போடக்கூடாதா என்று மூத்த இயக்குனர்களிடம் முறையீடு – கதருக்குள் இருந்து கொண்டு கலைஞர் மீது காதல் – வந்து சேர்ந்த வாய்ப்புகளைச் சிதறாமல் பயன்படுத்திக் கொண்ட செம்மை – முப்பது வயதுக்கு மேல் வாழ்க்கையில் சந்திரோதயம், நாற்பதுக்கு மேல் சூரியோதயம் – படபடவென்று வளர்ச்சி – மனிதநேயம் என்னும் மாட்சி காட்சியிலிருந்து கட்சி – கட்சியிலிருந்து ஆட்சி – அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி !

  அயல் வீட்டுக்காரருக்கு அறிமுகமில்லாத ஒரு வாழ்க்கையோடு தொடக்கமானீர்கள்; அரசாங்க மரியாதையோடு அடக்கமானீர்கள்.

  அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது – ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.

  ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் …….

  இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;

  எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.

  கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.

  உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.

  உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.

  நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.

  ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.

  பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.

  “மன்னனல்ல மார்த்தாண்டன”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.

  பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.

  நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.

  என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.

  இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.

  உடலும் உயிரும் மாதிரி காதலும் விரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.

  காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.

  பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.

  இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சக்தியில் சிக்கவைக்கப்பட்டான்.

  அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.

  அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.

  இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.

  நீங்கள் கனவுகளைத்தான் வளர்த்தீர்கள் ; ஆனால் கனவுகள் தேவைப்பட்டன.

  வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்

  என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.

  நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.

  உங்கள் தாய்மொழி மலையாளம் என்பதை மறக்கடிப்பதற்கும் நீங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் கரைந்து போனவர் என்று காட்டிக் கொள்வதற்கும் நீங்கள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றி பெற்றன.

  மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.

  உங்கள் தமிழ் உச்சரிப்பின் எந்த ஒரு வார்த்தையிலும் மலையாளத்தின் பிசிறு ஒட்டாமல் சுத்தமாய்த் துடைத்தெடுத்தீர்கள்.

  ‘மருதநாட்டு இளவரசி’யின் ஒப்பந்தப் பத்திரத்தின் உச்சியில் ‘முருகன் துண’என்றுதான் எழுதியிருக்கிறீர்கள். (முருகன் அவர்கள் தமிழ்க் கடவுள் என்று கருதப்படுகிறவர் என்பது கவனிக்கத்தக்கது)

  நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த “நாடோடி மன்னனில்” தொடக்கப் பாடலாக “செந்தமிழே வணக்கம்” என்று தான் ஆரம்பித்தீர்கள். இப்படி…..இப்படியெல்லாம் அந்நியத்தோலை உரித்து உரித்துத் தமிழ்த் தோல் தரித்துக் கொண்டீர்கள்.

  உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.

  ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.

  நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.

  தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.

  பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.

  தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க’டொக்’என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்” என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.

  வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா”? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.

  நீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் “வியர்வை முத்துக்கள்”என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.

  “வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார்? எதற்குப் போனார்? எப்படிப் போனார்? என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.

  என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.

  தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.

  இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.

  உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.

  உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-

  நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.

  உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.

  ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.

  உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.

  எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.

  நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.

  ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.

  ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.

  உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.

  உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.

  “உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;

  ஒரே ஒரு சந்திரன் தான் ;
  ஒரே ஒரு சூரியன் தான் ;
  ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ;

  நன்றி : வைரமுத்துவின் “இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்” நூலிலிருந்து.

 13. gjg சொல்கிறார்:

  அருமையான பதிவு.நன்றி

 14. Chandramohan Periasamy சொல்கிறார்:

  This is the first time I read about M G R life very very elaborately. You have done an excellent job in collecting more incidents that are not known to many people. I very much appreciate your efforts. The book about making of Nadodi Mannan is very interesting. Will meet you again. Thanks a lot.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s