சகாயமாக சாதித்த சந்திரபாபு

சந்திரபாபுவுடன் அமர்ந்திருக்கும் எம்.ஜி.ஆர்

சகாயம்! இந்தப் பெயரின் கருத்தே உதவி என்பதுதான். உதவியில் பலவகையுண்டு. ஆனால் இந்தப் பெயரினால் கிடைத்திருக்கும் உதவி சாமான்யமானதல்ல. கதையின் குறிப்பிடத்தக்க பாத்திரமாக இருக்கும் “நாடோடி”க்கு உதவி செய்வதில் சில நேரங்களில் ஆபத்தையே ஏற்படுத்திக் கொடுப்பவர் சாகயம். ஆனால், அதனால் ஏற்படும் விளைவு நன்மையாகவே இருக்கும். தனது தேவை முதலில் – அதே நேரத்தில் பிறரைக் கண்டு அனுதாபம். எதைக்கண்டாலும் திகைப்பு; ஆனால், எதனைப் பற்றியும் அலட்சியம், எதிலும் பயம்; ஆனால், எதிலும் விருப்பம்; காதலும் வேண்டும், அது கஷ்டமின்றியும் கிடைக்க வேண்டும். இப்படிக் குழப்பமான குணம் படைத்த பாத்திரம் தான் “சகாயம்” . இதனை ஏற்று நடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, சந்திரபாபு அவர்களின் திறமைக்கு இதுபோன்ற எந்தப் பாத்திரமும் மிகச் சாதாரணம் என்ற வகையில் நிறைவேற்றியிருக்கிறார்.

நடிகர்கள், பாத்திரத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் செய்கைகளைப் புதிய விதமாகச் செய்ய வேண்டும் (நடிக்க வேண்டும்) என்றுதான் டைரக்டரோ, கதையாசிரியரோ விரும்புவார்கள். ஆனால், சந்திரபாபு அவர்கள் நடிக்கும்போது மட்டும் புது மாதிரியாகச் செய்கிறேனென்று சந்திரபாபு அவர்கள் சொல்லாமலிருக்க வேண்டும் என்பதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள். அவ்வளவு ஆர்வத்தோடு நடிப்பவர் சந்திரபாபு. நடிப்பதில் எத்தகையதாயிருந்தாலும் தனக்கெனத் தனிச்சிறப்பு ஏற்படுத்திக் கொள்ளத் தயங்காதவர். அதற்காகத் தனக்கு எந்த ஆபத்துவரினும் பொருட்படுத்தாதவர்.

இதனால் தான் இவரைப் பற்றி நாங்களெல்லோரும் பயந்து கொண்டேயிருப்போம். ஆனால் என்னோடு பழகிய வரையில் அவருக்குத் தன் விருப்பத்தைத் தடுப்பது பிடித்தமில்லாததாயிருப்பினும், மறுத்துக் கூறாமல் நடித்துக் கொடுத்தார் அவர். மேலேயருந்து குதிப்பேன் என்பார்… எனக்கு நன்கு தெரியும், அவரால் சரிவரக் குதிக்க முடியும் என்று. ஆனால் சில சமயம் புதுவிதமாகக் குதிப்பதாகச் சொல்லி, திடீரென்று ஆபத்து நேரும் விதத்தில் குதித்துவிடுவார். மரக்கிளை ஒடிந்துவிழும் காட்சியில் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தார். கடைசியில் அந்தக் காட்சியே வேண்டாமென்று சொல்லிவிடலாமா என்ற நிலைக்கு வந்த பிறகு, மெள்ள விழுவதாக ஒப்புக்கொண்டார். ஆயினும் எனக்குப் பயம்தான்…. இப்படி அவரைப் பொறுத்தவரையில் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிடுவாரோ என்ற அச்சத்திற்கு மாறாக, பொறுப்பை நல்ல முறையில் நிறைவேற்ற வேண்டுமென்ற கடமை உணர்ச்சியினால் அவருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாதே என்று கலங்கியப்படியே இருக்க வேண்டும்.

ஒருநாள் வெளிப்புறக்காட்சி எடுத்துக் கொண்டிருந்தேன். சந்திரபாபு அவர்களும் நடிக்கவேண்டிய கட்டம். குதிரைகள் போகும் காட்சியைப் படமாக்கும்போது ஒரு குதிரை சொன்னபடி கேட்காமல் தொல்லை கொடுத்தது. சிறிதுநேரம் அதை ஒட்டி ஒழுங்குக்குக் கொண்டு வந்து குறிப்பிட்ட நடிகரிடம் கொடுத்து ஓட்டச் செய்து படமெடுத்து முடித்தேன். அதற்கள் சந்திரபாபு அவர்கள் தயாராகிவிட்டதால், அவர் சம்பந்தப்பட்ட ஷாட்டுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். பாபுவும் வந்தார்; ஏற்பாட்டைக் கண்டார். பத்து நிமிடங்களாவது ஆகும் என்றிருந்தார்; முரட்டுத்தனம் செய்து அடங்கியிருந்த குதிரை மீது ஏறப்போனார். நான் தடுத்தேன். அந்தக் குதிரை சரியல்ல என்று. சிறிதுநேரம் இங்கேயே சுற்றுகிறேன் என்றார். நான் குதிரைக்காரனிடம் எச்சரித்து, குதிரையுடனேயே லகானைப் பிடித்தபடி போகச் சொல்லிவிட்டு வந்தேன். ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. சிலர் ஓடி வந்து, “பாபு அடிப்பட்டுக் கீழே விழுந்து விட்டார். எம்.ஜி.ஆரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி மயக்கமடைந்துவிட்டார்” என்றனர். என்னால் எதுவும் கற்பனை செய்யவே முடியவில்லை….

எப்படியோ பழைய சந்திரபாபு அவர்களாவே இருக்கிறார் நலனோடு. அவரிடம் ஒருநாள் என் மனம்விட்டுச் சொன்னேன். இந்த வார்த்தை அவருக்கு மட்டுமல்ல; தென்னக கலைஞர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்க் கலைஞர்களுக்கு மிகமிகத் தேவையான விளக்கம் என்று கருதுவதால் அதை இங்குக் குறிப்பிடுவது சரியென்று கருதுகிறேன் : “சந்திரபாபுவின் திறமையை மக்கள் போற்றுகிறார்கள், புகழுகிறார்கள், என்றால், அந்தச் சந்திரபாபு தன்னிடமிருக்கும் கலைத் திறனை எத்தனை தொல்லைகளுக்கிடையில், எத்தனை எதிர்பார்ப்புகளுக்கிடையில் தெரிந்து கொண்டிருப்பார்.

அதற்காகப் பாடுபட்ட நாட்கள், மாதங்கள், வருடங்கள் எத்தனை எத்தனையோ ! அவைகளை எல்லாம் – ஒரே நாளில் நினைத்ததும் பெறமுடியாத அந்த மகத்தான கலைத் திறமையெல்லாம் – ஒரே வினாடியில் இழந்துவிடும் நிலைக்கு மக்களைக் கொண்டு வருவது மக்களுக்குச் செய்யும் மகத்தான துரோகமாகும்” என்றேன், “மக்களுக்கு மகிழ்ச்சியை மட்டும்தான் கொடுக்கிறோம் ; அறிவை அல்ல” என்று வாதிப்பவர்களும் கூட இந்த இழப்பை விரும்ப மாட்டார்கள்…. “கலைஞர்கள் இல்லையே என்று ஏங்கும் மக்களுக்கு இருக்கும் கலைஞர்களையும் இல்லாமற் செய்வது சரியல்ல” என்றேன்.

இதை அவர் நன்குணர்ந்தார் என்பதற்கு அவர்விட்ட கண்ணீரே சாட்சியாக இருந்தது. “எனக்கு நீ என்ன உபதேசம் செய்வது? ” என்று அவரால் கேட்கமுடியும் – கேட்கக்கூடியவரும் கூட. ஆனால் என்னிடம் கேட்கவில்லை…இதில் மட்டும் என்று எண்ணிவிடாதீர்கள் ; தொழிலிலும் கூட…. உதாரணத்திற்கு அவர் சொன்ன சொல்லையே இங்கு உபயோகப்படுத்துகிறேன். “இதுவரையில் நீங்கள் சொன்னபடியே நடித்து வந்தேன். படமோ முடியப்போகிறது. இன்று ஒரு நாளாவது என் இஷ்டப்படி செய்யவிடுங்களேன்….என்றார்.இப்படி ஒற்றுமை உள்ளத்துடன் பணியாற்றி அவர் நாடோடி மன்னன் படத்தில் வேறு எவரும் செய்ய முடியாத – செய்ய விரும்பாதவைகளையெல்லாம் செய்து இருக்கிறார் ! கோழிக்குஞ்சு வாய்க்குள்ளிருந்து வரவேண்டும் – அதை வாயில் வைத்து அடைத்துக் கொண்டு, காட்சியில் வாயைத் திறந்த குஞ்சு வெளிவரச் செய்ய வேண்டும். குஞ்சு தன் கூரிய நகங்களால் தொண்டையைப் பிறாண்டிவிடுவது எளிதில் நடக்ககூடிய காரியம். அதை அறிந்தும் அதைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கலைப்படாமல் அந்த காட்சியிலே நடித்தார். சரியாக அமைந்திராவிட்டால் என்ன செய்வதென்று மீண்டும் ஒருமுறை எடுக்கும்படி வற்புறுத்தி எடுக்கச் சொன்னார். நான் சரியாகவே இருக்கிறது, போதும் என்று சொன்னேன்; மேலும் எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாதே என்ற எண்ணத்தால்.

இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் எடுத்துக் கொள்ளுகிறவர்கள் சிலர் தானிருக்கிறார்கள். புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை அக்கறை காட்டுவது என்பது இயற்கை. புகழ்பெற்ற பின்னும், நல்ல விளம்பரம் கிடைத்த பின்னும் இவ்வாறு தொழிலில் அக்கறை காண்பிப்பது மிகக் குறைவே…. ஆகவேதான் திரு.பாபு அவர்களைப் பற்றி இத்தனை எழுத வேண்டி வருகிறது. கலையை ரசிக்கும் தன்மையும் அதிகம் பெற்றிருப்பவர் திரு.பாபு. யாராயிருந்தாலும் சரி, அவரிடம் கலைத் திறமையைக் கண்டு விட்டால் பாபுவால் பேசாமலிருக்க முடியாது. அந்தக் கலைஞரைப் பாராட்டிப் புகழ்ந்து மகிழ்ச்சியடைவதிலே அவருக்கிணை அவரேதான். அவருடைய முழுத்திறமையையும் கலை உலகம் இன்னும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் இயற்கைக்குப் பொருத்தமற்ற, ஆனால் மக்களை மூடநம்பிக்கையுள்ளவர்களாக ஆக்கிவிடாத நகைச்சுவைக்காக மட்டுமே எடுக்கப்பட்ட முட்டைகளைத் தின்று, குஞ்சு வெளிவரும் காட்சியிலிருந்து… “சாப்பாட்டிற்கு மனுஷனுக்குக் கொள்ளுகூட இல்லே…குதிரைக்கு முட்டை கொடுக்கறீர்கள”. என்று வேடிக்கையாக, ஆனால் பெரிய தலைவர்கள் முதல் உலக நடப்பு ஒன்றுமே அறியாத பாமர மக்கள் வரை சிந்திக்கச் செய்யும் அவருடைய இயற்கையான நடிப்பு அவருடைய நுண்ணிய கலைத்திறமையை எடுத்துக் காட்டுவதாகும். நாடோடி மன்னன் – நகைச்சுவைப் பகுதியிலே அவர் கையாண்டிருக்கும் முறை அவருக்கெனத் தனியாக அவர் உருவாக்கியிருக்கும் அமைப்புக்குப் பெரியதொரு வெற்றியென்று யாரும் எளிதில் ஏற்றுக்கொள்வார்கள்.

நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் –

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

3 comments on “சகாயமாக சாதித்த சந்திரபாபு

 1. […] சகாயமாக சாதித்த சந்திரபாபு […]

 2. aayiraththiloruvan சொல்கிறார்:

  படம் எடுத்து முடித்து வெற்றிகரமாக நூறு நாள் ஓடிய வரை எம்.ஜி.ஆருடன் இருந்தது போல் ஒரு அனுபவம்…
  எம்.ஜி.ஆருககுள் இருந்த எழுத்தாளர் என்னை மலைக்க செய்து விட்டார்….

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அவர் எல்லா துறைகளிலும் வல்லவர் என்பதே இதற்கான காரணம். குழந்தையை உருவாக்குவது போலவே இந்தப் படத்தின்மீது மிகவும் கவணம் கொண்டு செயல்பட்டார் என்றால் மிகையல்ல,.

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s