எம்.ஜி.ஆரின் கதாநாயகிகள் – பானுமதி

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் “ராஜ குமாரி” (1947). அதன் பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். என்றாலும் அவருடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வசூல் மன்னன் என்ற பெயரை வாங்கித்தந்த படம் “மலைக் கள்ளன்.”

கோவை பட்சிராஜா ஸ்டூடியோவில், ஸ்ரீராமுலு நாயுடு டைரக்ஷனில் உருவான இப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி பானுமதி. 22_7_1954_ல் வெளிவந்த இந்தப்படம், மகத்தான வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது.

எம்.ஜி.ஆரும், பானுமதியும் இணைந்து நடிப்பதற்கு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. எனவே “மதுரை வீரன்”, “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்”, “தாய்க்குப்பின் தாரம்” முதலான படங்களில் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடித்தார்கள். எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்த “நாடோடி மன்னன்” படத்திலும், பானுமதிதான் கதாநாயகி.

பானுமதியுடன் எம்.ஜி.ஆர்

கலைஞர் கருணாநிதி வசனம் எழுத, மேகலா பிக்சர்ஸ் தயாரித்த “காஞ்சித் தலைவன்” படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் இணைந்து நடித்தனர். இந்தப் படத்தின் தொடக்க விழாவில் அறிஞர் அண்ணா பேசுகையில், “நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் பானுமதி” என்று குறிப்பிட்டார்.

சிவாஜிகணேசனும், பானுமதியும் இணைந்து நடித்த முதல் படம் “கள்வனின் காதலி.” இது, “கல்கி” எழுதிய கதை. 1955_ல் வெளிவந்த படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது என்றாலும், சிவாஜி, பானுமதி இருவரும் போட்டி போட்டு நடித்தனர்.

இதன்பின், பானுமதியின் சொந்தப் படமான “மணமகன் தேவை”யில் சிவாஜி நடித்தார். தொடர்ந்து, “மக்களைப் பெற்ற மகராசி”, “ராணி லலிதாங்கி” முதலிய படங்களில் சிவாஜியும், பானுமதியும் நடித்தனர்.

அறிஞர் அண்ணா எழுதிய கதையான “ரங்கூன் ராதா”வை, மேலகா பிக்சர்ஸ் படமாக எடுத்தது. வசனத்தை கலைஞர் கருணாநிதி எழுதினார்.

இந்தப்படத்தில் கொடுமைக்கார கணவனாக சிவாஜிகணேசனும், சித்திரவதை அனுபவிக்கும் மனைவியாக பானுமதியும் நடித்தனர். `நடித்தனர்’ என்பதைவிட, அந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினர் என்பதே சரியாகும். அந்த ஆண்டின் சிறந்த நடிகராக சிவாஜியும், சிறந்த நடிகையாக பானுமதியும் இப்படத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது பெற்றனர்.

சிவாஜி _ பானுமதி இணைந்து நடித்த இன்னொரு நல்ல படம் “அம்பிகாபதி.” இது ஏ.எல்.எஸ். தயாரிப்பு. படம் மிகப்பெரிய வெற்றி பெறாவிட்டாலும், நடிப்பும், பாடல்களும் சிறப்பாக இருந்தன. “சதாரம்”, “கட்டிலா தொட்டிலா” உள்பட சில படங்களில், ஜெமினிகணேசனுடன் பானுமதி நடித்துள்ளார்.

பானுமதியின் நடிப்பு உன்னதமாக அமைந்த படங்களில் ஒன்று ஏவி.எம். தயாரிப்பான “அன்னை.” 1962_ல் வெளிவந்த இந்தப் படத்தை கிருஷ்ணன் _பஞ்சு டைரக்ட் செய்தனர். வசனம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

பானுமதி, குழந்தை இல்லாத தாயாக நடித்தார். இப்படத்தில் பானுமதியின் தங்கை சவுகார் ஜானகி. அவருடைய குழந்தையை பானுமதி எடுத்து வளர்ப்பார். தான்தான் அசல் தாய் என்பதை எந்த சமயத்திலும் வெளியிடக்கூடாது என்று சவுகார்ஜானகியிடம் சத்தியம் வாங்கிக்கொள்வார். பையன் பெரியவனான பிறகும், பானுமதியைத்தான் தாய் என்று நினைத்துக்கொண்டிருப்பான்.

பையனுடைய அசல் தந்தை இறந்து விடுவார். அந்த சமயத்தில், உண்மை வெளிப்பட்டு விடுமோ என்று பானுமதி தவியாய் தவிப்பார். தாய்ப்பாசம் என்ன என்பதை எடுத்துக்காட்டும் வகையில், பானுமதியின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. படம் பெரிய வெற்றி பெற்றது.

இதே கதையை, ஏவி.எம். இந்தியில் “லாட்லா” (செல்லமகன்) என்ற பெயரில் இந்தியில் எடுத்தார். பானுமதி நடித்த வேடத்தில் நிரூபாராய் நடித்தார். அந்தப்படம் தோல்வி அடைந்தது. காரணம் பானுமதியைப்போல் நிரூபாராயால் நடிக்க முடியவில்லை!

ஆரூர்தாஸ் கதை_ வசனம் எழுதிய “பத்துமாத பந்தம்” என்ற படத்தில், பானுமதியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர். நடிகைகளில் சொந்த ஸ்டூடியோ நடத்தியவர் பானுமதிதான். மகன் பரணி பெயரால் இந்த ஸ்டூடியோ இயங்கி வந்தது.

பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகிய தமிழக சூப்பர் ஸ்டார்கள் 5 பேருடன் இணைந்து நடித்தவர், பானுமதி ஒருவர்தான்.

திரை உலகில் மிகப்பெரும் சாதனையாளராக விளங்கி வரும் பானுமதி, “டாக்டர்” பட்டம் பெற்றவர். தமிழக அரசின் இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்துள்ளார். 1969_ல், மத்திய அரசு இவருக்கு “பத்மஸ்ரீ” விருது வழங்கியது.

தெலுங்கில் சிறந்த எழுத்தாளராகவும் பானுமதி விளங்கினார். “அத்தை காரு” என்ற இவருடைய நாவல் மிகப் புகழ் பெற்றது. பானுமதியின் குரல் மிகவும் இனிமையானது. தென்னாட்டு நடிகைகளில், கடைசி வரை பாடி நடித்தவர் பானுமதிதான்.

பானுமதியின் ஒரே மகனான பரணி, டாக்டராக அமெரிக்காவில் சில காலம் பணியாற்றினார். அப்போது அவரைக்காண அமெரிக்கா சென்ற ராமகிருஷ்ணா, அங்கு காலமானார். வடபழனியில் இருந்த பரணி ஸ்டூடியோ, இப்போது மருத்துவமனையாக மாற்றப்பட்டு விட்டது. அதை பரணி நிர்வாகிக்கிறார்.

நடிப்பு, பாட்டு, படத்தயாரிப்பு, டைரக்ஷன், கதை_வசனம் என்று பல துறைகளிலும் திறமை பெற்ற பானுமதி, அஷ்டாவதானி என்று போற்றப்படுகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s