ஜானகியுடன் எம்.ஜி.ஆரின் காதலும் கல்யாணமும்

1950_ம் ஆண்டு வெளிவந்த “மருதநாட்டு இளவரசி”யைத் தொடர்ந்து, வி.என்.ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக எம்.ஜி.ஆர். ஏற்றார். “ராஜகுமாரி”க்குப்பிறகு, “அபிமன்யூ” என்ற படத்தை ஜுபிடர் பிக்சர்சார் தயாரித்தனர். இந்தப் படத்தில் எஸ்.எம். குமரேசனும், அவருடைய ஜோடியாக யு.ஆர்.ஜீவரத்தினமும் நடித்தனர்.

அபிமன்ïவின் தந்தை அர்ஜூனனாக எம்.ஜி.ஆர். நடித்தார். படத்தின் பிற்பகுதியில்தான் அவர் வருவார். எனினும், நடிப்பு சிறப்பாக இருந்தது. மற்றும் நரசிம்மபாரதி, எம்.ஜி. சக்ரபாணி, நம்பியார், கே.மாலதி, எம்.ஆர்.சந்தான லட்சுமி ஆகியோரும் நடித்தனர்.

“அபிமன்யு”வின் வசனங்களை கருணாநிதிதான் எழுதினார். என்றாலும், படத்தில் அவர் பெயர் இடம் பெறவில்லை. திரைக்கதை_ வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது. இந்தப் படத்தை எம்.சோம சுந்தரமும், ஏ.காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர்.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்து, லண்டனில் உள்ள பிரிவுகவுன்சில் (வெள்ளையர் ஆட்சியின்போது உச்சநீதி மன்றம்) வரை சென்று விடுதலையான எம்.கே.தியாகராஜ பாகவதர், “ராஜமுக்தி” என்ற படத்தை தயாரித்தார். படப்பிடிப்பு புனா நகரில் நடந்தது.

இதில் பாகவதரும், வி.என்.ஜானகியும் ஜோடியாக நடித்தனர். பாகவதருக்கு அடுத்த வேடத்தில், தளபதியாக எம்.ஜி.ஆர். நடித்தார். வில்லி போன்ற வேடத்தில் பி.பானுமதி நடித்தார். அவர் நடித்த முதல் தமிழ்ப்படம் இதுதான்.

ஜானகி ராமச்சந்திரன்! என்னே ஒரு பெயர் பொருத்தம்!

இந்தப்படத்தில் நடிக்கும்போது, எம்.ஜி.ஆரும், வி.என். ஜானகியும் முதன் முதலாக நேரில் சந்தித்துக் கொண்டனர். ஜானகியை எம்.ஜி.ஆர். ஏற்கனவே படத்தில் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணி போல ஜானகி இருந்தது அவருக்கு வியப்பளித்தது. நேரில் சந்தித்தபோது அசந்தே போனார். பார்கவியின் அசல் அச்சு போலவே ஜானகி காட்சி அளித்தார்.

இதன் காரணமாக, இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஒருவர் மனதில் ஒருவர் இடம் பெற்றனர். இதே சமயத்தில், ஜுபிடரின் “மோகினி” படத்தில் எம்.ஜி. ஆரும், ஜானகியும் ஜோடியாக நடித்தனர்.

1948 அக்டோபர் 9_ந்தேதி “ராஜமுக்தி”யும், அதே மாதம் 31_ந்தேதி “மோகினி”யும் ரிலீஸ் ஆயின. இதில் “ராஜமுக்தி” தோல்வி அடைந்தது. “மோகினி” வெற்றி பெற்றது.

பின்னர், கோவிந்தன் கம்பெனி தயாரித்த “மருதநாட்டு இளவரசி”யில், எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் இணைந்து நடித்தனர். மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, சி.கே.சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். கதை, வசனத்தை மு.கருணா நிதி எழுதினார். ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்தில் வி.என். ஜானகி மருதநாட்டின் இளவரசி. அவர், சாதாரண இளைஞனான எம்.ஜி.ஆரை காதலிப்பார். அவர் இளவரசி என்று எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. அதனால் அவரும் காதலிப்பார். எம்.ஜி.ஆருக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார், ஜானகி!

அரசருக்கு எதிராக, அரசனின் இளைய மனைவியின் சகோதரன் திட்டம் தீட்டுவான். அதை எம்.ஜி.ஆரும், ஜானகியும் சேர்ந்து முறியடிப்பார்கள். இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். ஒரு வேட்டி மட்டும் அணிந்து சாதாரண குடிமகனாக நடிப்பார். படம் முழுவதும் இந்த ஒரே உடைதான்!

கருணாநிதியின் வசனம் அருமையாக அமைந்தது. எம்.ஜி. ஆரும், ஜானகியும் சிறப்பாக நடித்திருந்தனர். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டைகள் ரசிகர்களைக் கவர்ந்தன. படம் வெற்றி பெற்றது.

மருதநாட்டு இளவரசி 1950_ல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, ஜானகியை தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்க எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். அதற்கு முன் மனைவியின் சம்மதத்தைப் பெற எண்ணினார்.

ஜானகியை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று, மனைவி சதானந்தவதியிடம் அறிமுகம் செய்து வைத்தார். சதானந்தவதியை, “அக்கா” என்றே அழைத்தார், ஜானகி. இருவரும் சகோதரிபோலவே பழகினார்கள்.

நாளடைவில், எம்.ஜி.ஆர். மனதில் ஜானகி இடம் பெற்றிருப்பதை சதானந்தவதி தெரிந்து கொண்டார். கணவரை ஒரு நாள் அழைத்து, “வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருந்து வருகிறேன். என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. என் தங்கையை (ஜானகி) நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

இதைக்கேட்டு எம்.ஜி.ஆர். கண்கலங்கினார். “நீ மனப் பூர்வமாகத்தான் சொல்கிறாயா?” என்று கேட்டார். “மனப்பூர்வமாகத்தான் கூறுகிறேன். ஜானகியை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஆனால், நானும், ஜானகியும் ஒரே வீட்டில் இருக்கவேண்டாம். அவளுக்குத் தனி வீடு பார்த்து குடிவையுங்கள்” என்றார், சதானந்தவதி.

மனைவியின் பூரண சம்மதத்துடன், ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார், எம்.ஜி.ஆர். பாகவதர்_ சின்னப்பா காலத்தில் பெரிய பாடல் ஆசிரியராகத் திகழ்ந்த பாபநாசம் சிவனின் அண்ணன் பி.ஆர். ராஜகோபாலய்யரின் மகள்தான் வி.என்.ஜானகி. (வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கமே வி.என்.ஜானகி)

எம்.ஜி.ஆர். சாதாரண வேடங்களில் நடித்து வந்த காலக்கட்டத்திலேயே அவர் கதாநாயகியாக புகழ் பெற்று விளங்கினார். எம்.ஜி.ஆரை விட அதிக சம்பளம் வாங்கி வந்தவர். எனினும், எம்.ஜி.ஆரை மணந்தபின் நடிப்பதை நிறுத்திவிட்டார். கணவரின் சாதனைகளுக்கு துணை நின்றார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s