கருணாநிதிக்கு முதல்வர் பதவியை கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் கலைஞர் நட்புடன் உரையாடும் படம், கலைஞரின் கையெழுத்துடன்

வள்ளல் எம்.ஜி.ஆரின் அனைத்து செயல்பாடுகளும், நிகழ்த்திய அற்புதங்களும் ஓர் அவதாரத்தின் தன்மையாகவே திகழ்ந்தன.

வள்ளலிடம் ஒருவன் பசி என்று வந்துவிட்டால், அவனின் பசியைப் போக்கிப் பரவசம் அடைவார். ஒருவன் அணிந்து கொள்ள ஆடை வேண்டி வந்தால், அவனுக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பார்.

இப்படி பொன் கொடுத்து, பொருள் கொடுத்து, கேட்டவர்க்கு கேட்டதைக்கொடுத்து, கேட்காதவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்த வள்ளலிடம், வாழ்நாளில் யாருமே தன்னிடம் இதுவரை கேட்காத ஒன்றை ஒருவர் கேட்கிறார். கேட்டவர் வேறு யாருமல்ல. இன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்தான். அப்படி என்னதான் கேட்டார் கலைஞர்?

1967-ல் பேரறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்துக்குள் மறைந்து விடுகிறார். இந்த நிலையில் தேர்தலே இல்லாமல் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி எழுகிறது. செயற்குழுவும், பொதுக்குழுவும், கட்சியின் அனைத்து அமைப்புகளும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை முதல்வராக்க முடிவெடுத்தது.

இந்த நிலையில் தன்னுடைய பேச்சால், எழுத்தால் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கும் கலைஞர், தனக்குத் தான் முதல்வர் நாற்காலி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நடந்தது வேறாகிவிட்டது.

கீழ்க்கோர்ட்டில் அளித்த தீர்ப்பு, மேல் கோர்ட்டில் மாற்றி அமைக்கப்படும் என்கிற சூட்சும்ம் தெரிந்த அரசியல் சாணக்கியர் கலைஞர், உடனே மூதறிஞர் ராஜாஜி அவர்களைச் சந்திக்கிறார். அவரிடம் தனக்கு இருக்கிற தகுதிகளையும், அதன் விளைவாக எழுந்த எண்ணத்தையும் எடுத்துச் சொல்கிறார்.

அதற்கு இராஜாஜி அவர்கள், ‘உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் எம்.ஜி. இராமச்சந்திரனைப் போய் பார்’ என்று அனுப்பி வைக்கிறார்.

இராஜாஜியின் இராஜதந்திரப்படிக் கலைஞர் வள்ளலைச் சந்தித்து, “எனது பேச்சும் மூச்சும்-தமிழ், தமிழ. என்றுதானே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனது மனைவி மக்களை மறந்து , இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன். அது மட்டுமில்லாமல் நான் நிலச்சுவான்தார்களின் பிடியில் சுழன்று கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்திருக்கிறேன். எனவே, அந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக முதல்வர் நாற்காலியில் ஒரே ஒரு நாள் நான் அமர்ந்தால், பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கே பெருமையல்லவா?” என்று கலைஞர் வள்ளலிடம் சொல்கிறார்.

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட மக்கள் திலகம், எவர் கேட்டு இல்லையென்று சொல்லியிருக்கிறேன். இன்று நீ கேட்டா மறுக்கப் போகிறேன். ஆனால் நீ கேட்டது பொன்னோ பொருளோ அல்ல; அள்ளிக் கொடுத்து விட! நீ கேட்டது கர்ணனின் கவச குண்டலம் அல்லவா!” – இப்படி வள்ளல் ஒருநிமிடம் யோசித்தார்.

அடுத்த விநாடியே, “நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்…” என்று கலைஞருக்கு வாக்குக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார் வள்ளல்.

அதற்குப்பிறகு, அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுக்குப்போன் செய்து, “ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு…” என்று சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

மக்கள் திலகம் சாப்பிட அழைத்தாலோ அல்லது தான் சாப்பிட வருகிறேன் என்றுசொன்னாலோ – அதில் ஒரு சரித்திர நிகழ்வு புதைந்து கிடக்கும். இதைப்புரிந்து வைத்திருப்பவர் இலட்சிய நடிகர்.

வள்ளல் தன் வீட்டிற்குச் சாப்பிட வருவதைத் தன் தாயிடம் தெரிவித்து, வள்ளலுக்குப்பிடித்ததைச் செய்யச் சொல்கிறார் இலட்சிய நடிகர்.

சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு இலட்சிய நடிகரின் இல்லம் வருகிறார் வள்ளல். இலை போட்டுவிட்டு – இன் முகத்துடன் இலட்சிய நடிகரின்தாய், சமையல் கட்டிலிருந்து பதார்த்தங்களை ஒவ்வொன்றாக எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைக்கிறார்.

இந்த நேரத்தில் இலட்சிய நடிகர் – வள்ளலிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு
நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்…. என்னன்னு சொல்லுவாங்க….!” என்றார்.

அப்பொழுதுதான் இலட்சிய நடிகரிடம், “கலைஞர் முதல்வர் நாற்காலியல் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று வள்ளல் விளக்குகிறார்.

அதற்கு இலட்சிய நடிகர் நிறைய விளக்கம் அளித்து, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

‘இந்த விளக்கமெல்லாம் எனக்குத் தேவையில்லை! எனக்காக இதைச் செய்கிறாயா? இல்லையா?’ என்று கடிந்தும் கேட்காமல், இலட்சிய நடிகர் எதைச் சொன்னால் இளவகுவார் என்கிற இங்கிதம் தெரிந்த வள்ளல், “நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா” என்கிற தமிழ்க் கலாசார வஜ்ராயுத்த்தைப் பிரயோகிக்கிறார். அவ்வளவு தான்; இலட்சிய நடிகர் வீழந்து விடுகிறார்!

“சரி நீங்க சாப்பிடுங்க..” கவிதையாய் ஒப்புதல் அளித்தார் இலட்சிய நடிகர்.

அதற்குப் பிறகு முதல்வராகக் கலைஞர் பொறுப்பேற்கிறார். “நண்பா, இது உன்னால் மட்டுமே சாத்தியமாயிற்று” என்று கலைஞர் உருக, “நம் நட்பே சாத்தியமாக்கியது” என கலைஞரை அனைத்துக்கொண்டார் வள்ளல் எம்.ஜி.ஆர்.

நன்றி –
தமிழ் தேசம்

2 comments on “கருணாநிதிக்கு முதல்வர் பதவியை கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர்

  1. k.kuberanarayanan சொல்கிறார்:

    M.G.R. the great leader, I am his follower.I got my life oppertunity in his regim.Further my father in-law is an M.LA. IN HIS GOVERNMENT. Sir Your service is historical evidence for the future generations. well done

  2. k.kuberanarayanan சொல்கிறார்:

    M.G.R. the great leader, I am his follower.I got my life oppertunity in his regim.Further my father in-law is an M.LA. IN HIS GOVERNMENT. Sir Your service is historical evidence for the future generations. well done

பின்னூட்டமொன்றை இடுக