காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள் – எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் வைரமுத்து

இப்போதைய தி.மு.கவின் அறிவிக்கப்படாத அரசவைக் கவிஞன் வைரமுத்து. கலைஞர் என உருகி ஓடினாலும், எம்.ஜி.ஆரின் தாக்கத்தினை அவருடைய மரணத்தில் உணர்ந்து சிந்தித்தமையை “இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்” நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வரிகள் அப்படியே இங்கே@!.

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

கருப்பு தமிழன் வைரமுத்து

ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள்.

உங்களைத் தொட்டுப் பார்க்க நினைத்து, தொட முடிந்த தூரம் வந்தும் தொட முடியாமல் நின்றேன்.

எம்.ஜி.ஆருக்கே மரணமா?

எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது.

காற்று – சமுத்திரம் – வானம் – எம்.ஜி.ஆர்

இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு.

அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது.

47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா?

இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன்.

நீண்டநேரம் என்னை அங்கே நிற்க அனுமதிக்கவில்லை.

ஜனத்திரள் என்னைப் பிதுக்கியது.

சட்டென்று நகர்ந்து ராஜாஜி ஹாலின் ராட்சதத் தூண் ஒன்றை அடைக்கலம் பற்றி, கூட்டத்தை நோட்டமிட்டேன். அங்கங்கே அரசாங்க விதிகளுக்கு உட்பட்டுச் சிலர் அழுது கொண்டிருந்தார்கள். நிஜக்கண்ணீர் வடித்தவர் பலர் ; நீலிக்கண்ணீர் வடித்தவர் சிலர். வருத்தக் கண்ணீர் வடித்தவர் பலர்.

வாடகைக் கண்ணீர் வடித்தவர் சிலர். உயிரைக் கண்ணீராய் ஒழுக விட்டவர் பலர் ; மிகப் பலர்.

என்னால் அழ முடியவில்லை.

அழுகை வரவில்லை.

மனிதல் மட்டும் சோகப் பனிமுட்டம்.

“நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா ! உனக்கா மரணம்?”என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது.

அங்கே கூடியிருந்த அரசியல்வாதிகளில் பலர் நாளைகளைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்க- நானோ உங்கள் நேற்றுகளை நினைத்தே விக்கித்துக் கொண்டிருந்தேன்.

கண்டியோ வடவனூரோ எங்ககேயோ பிறந்தீர்கள் ; தமிழ்நாட்டுக்குள் பிழைக்க வந்தீர்கள் ; தமிழ்நாட்டில் பல பேரைப் பிழைக்க வைத்தீர்கள். கும்பகோணம் யானையடிப் பள்ளி வறுமையில் கழிந்த வால்டாக்ஸ் ரோடு முகம் பார்க்க முடியாமல் முதல் மனைவியின் மரணம் – கோடையில் எப்போதாவது படபட வென்று பொழிந்து ஏமாற்றிவிட்டுப்போகும் மேகம் மாதிரி படவுலகில் அவ்வப்போது சின்னச்சின்ன வாய்ப்புகள்.

ஒரே ஒரு’க்ளோஸ்-அப்’ போடக்கூடாதா என்று மூத்த இயக்குனர்களிடம் முறையீடு – கதருக்குள் இருந்து கொண்டு கலைஞர் மீது காதல் – வந்து சேர்ந்த வாய்ப்புகளைச் சிதறாமல் பயன்படுத்திக் கொண்ட செம்மை – முப்பது வயதுக்கு மேல் வாழ்க்கையில் சந்திரோதயம், நாற்பதுக்கு மேல் சூரியோதயம் – படபடவென்று வளர்ச்சி – மனிதநேயம் என்னும் மாட்சி காட்சியிலிருந்து கட்சி – கட்சியிலிருந்து ஆட்சி – அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி !

அயல் வீட்டுக்காரருக்கு அறிமுகமில்லாத ஒரு வாழ்க்கையோடு தொடக்கமானீர்கள்; அரசாங்க மரியாதையோடு அடக்கமானீர்கள்.

அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது – ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.

ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் …….

இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;

எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.

கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.

உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.

உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.

நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.

ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.

பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.

“மன்னனல்ல மார்த்தாண்டன”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.

பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.

நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.

என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.

உடலும் உயிரும் மாதிரி காதலும் விரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.

காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.

பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.

இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சக்தியில் சிக்கவைக்கப்பட்டான்.

அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.

அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.

இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.

நீங்கள் கனவுகளைத்தான் வளர்த்தீர்கள் ; ஆனால் கனவுகள் தேவைப்பட்டன.

வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்

என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.

நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.

உங்கள் தாய்மொழி மலையாளம் என்பதை மறக்கடிப்பதற்கும் நீங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் கரைந்து போனவர் என்று காட்டிக் கொள்வதற்கும் நீங்கள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றி பெற்றன.

மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.

உங்கள் தமிழ் உச்சரிப்பின் எந்த ஒரு வார்த்தையிலும் மலையாளத்தின் பிசிறு ஒட்டாமல் சுத்தமாய்த் துடைத்தெடுத்தீர்கள்.

‘மருதநாட்டு இளவரசி’யின் ஒப்பந்தப் பத்திரத்தின் உச்சியில் ‘முருகன் துண’என்றுதான் எழுதியிருக்கிறீர்கள். (முருகன் அவர்கள் தமிழ்க் கடவுள் என்று கருதப்படுகிறவர் என்பது கவனிக்கத்தக்கது)

நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த “நாடோடி மன்னனில்” தொடக்கப் பாடலாக “செந்தமிழே வணக்கம்” என்று தான் ஆரம்பித்தீர்கள். இப்படி…..இப்படியெல்லாம் அந்நியத்தோலை உரித்து உரித்துத் தமிழ்த் தோல் தரித்துக் கொண்டீர்கள்.

உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.

ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.

நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.

தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.

பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.

தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க’டொக்’என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்” என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.

வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா”? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.

நீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் “வியர்வை முத்துக்கள்”என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.

“வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார்? எதற்குப் போனார்? எப்படிப் போனார்? என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.

என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.

தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.

இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.

உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.

உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-

நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.

உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.

ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.

உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.

எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.

நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.

ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.

ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.

உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.

உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.

“உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;

ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ;

சாகும் வரை எம்.ஜி.ஆரை மறக்க மாட்டேன் – கலைஞர் கருணாநிதி

எம்.ஜி.ஆரைப் பற்றி அவரது நண்பரும், சக அரசியல்வாதியுமான தற்போதைய முதல்வர் கருணாநிதி பொதுக் கூட்டங்களிலும், முக்கிய நிகழ்வுகளிலும் மறக்காமல் சொல்லவார். சட்டமன்ற கட்டிடம் புதியதாக கட்டப்பட்ட பிறகு, பழைய சட்டமன்ற கட்டிட வளாகத்தில் இறுதிக் கூட்டத்தொடரில் எம்.ஜி.ஆர் தான் என்னை தி.மு.கவின் தலைவராக்கியவர். முதல்வராக அமர்த்தியவர் அவரே என்றும், அதனால் நன்றி மறவாமல் சாகும் வரை அவரை நினைத்துக்கொண்டிருப்பேன் எனவும் கருணாநிதி கூறினார்.

அந்தப் பேச்சு இங்கே,..

முதல்வரும் எம்.ஜி.ஆரின் நண்பருமான கருணாநிதி

எ‌ன்னை தி.மு.க. தலைவர் ஆக்கியதற்கும் முதலமைச்சர் ஆக்கியதற்கும் எ‌ம்.‌ஜி.ஆ‌ர் ஒரு முக்கிய காரணம் எ‌ன்று‌ம் அந்த நன்றிக்காக எம்.ஜி.ஆரை கடைசிவரை மறக்க மாட்டே‌ன் எ‌ன்று‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடர் புதிய சட்டமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று‌ம் முதலமைச்சர் சூசகமாக தெரிவித்தார். சட்டமன்றத்தில் இன்று தற்போதைய சட்டமன்றத்தின் வரலாறு குறித்து முதலமைச்சர் கருணாநிதி உருக்கமான உரையாற்றினார். அப்போது அவர் இந்த சட்டமன்றத்தின் வரலாறுகளையும் அதன் பெருமைகளையும் விரிவாக எடுத்துரைத்து பேசினார்.

தொடர்ந்து பே‌சிய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, இந்த சட்டமன்றத்தில் கடைசியாக நடைபெறும் கூட்டத்தொடர் இது. ஒரு இடத்திலிருந்து வெளியேறி புதிய இடத்தில் குடியேறும்போது கடந்த கால வரலாறுகளை திரும்பிப் பார்ப்பதுபோல இந்த சட்டமன்றத்தின் நிகழ்வுகளை திரும்பிப் பார்த்து நல்லவற்றை எடுத்துக்கொண்டு விரும்பத்தகாத நிகழ்வுகளை மறந்து புதிய இடத்தில் மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும்.

புதிய சட்டமன்ற வளாகப் பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருவதை அறிவீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் இங்கே பேசிவிட்டு சென்றபோது கடைசியாக எம்.ஜி.ஆர் பாடிய ஒரு பாட்டை பாடிவிட்டு சென்றார். அவர் பேசியதற்கெல்லாம் நான் பதில் அளிக்க விரும்பவில்லை. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற பாட்டை எம்.ஜி.ஆர் என்னை மனதில் வைத்துத்தான் பாடினார்.

ஒரு தலைவன் இருக்கிறார் மயங்காதே என்றுதான் கூறினாரே தவிர தலைவி என்று எம்.ஜி.ஆர் கூறவில்லை. எனவே தலைவன் என்று அவர் என்னை கூறியதாகத்தான் நான் கருதுகிறேன். எம்.ஜி.ஆர் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர். என்னை தி.மு.க தலைவர் ஆக்கியதற்கும், முதலமைச்சர் ஆக்கியதற்கும் அவர் ஒரு முக்கிய காரணம். அந்த நன்றிக்காக எம்.ஜி.ஆரை நான் கடைசிவரை மறக்க மாட்டேன் என்று கருணாநிதி கூ‌றினா‌ர்.

நன்றி –

வெப்துனியா

கருணாநிதிக்கு முதல்வர் பதவியை கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் கலைஞர் நட்புடன் உரையாடும் படம், கலைஞரின் கையெழுத்துடன்

வள்ளல் எம்.ஜி.ஆரின் அனைத்து செயல்பாடுகளும், நிகழ்த்திய அற்புதங்களும் ஓர் அவதாரத்தின் தன்மையாகவே திகழ்ந்தன.

வள்ளலிடம் ஒருவன் பசி என்று வந்துவிட்டால், அவனின் பசியைப் போக்கிப் பரவசம் அடைவார். ஒருவன் அணிந்து கொள்ள ஆடை வேண்டி வந்தால், அவனுக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பார்.

இப்படி பொன் கொடுத்து, பொருள் கொடுத்து, கேட்டவர்க்கு கேட்டதைக்கொடுத்து, கேட்காதவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்த வள்ளலிடம், வாழ்நாளில் யாருமே தன்னிடம் இதுவரை கேட்காத ஒன்றை ஒருவர் கேட்கிறார். கேட்டவர் வேறு யாருமல்ல. இன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்தான். அப்படி என்னதான் கேட்டார் கலைஞர்?

1967-ல் பேரறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்துக்குள் மறைந்து விடுகிறார். இந்த நிலையில் தேர்தலே இல்லாமல் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி எழுகிறது. செயற்குழுவும், பொதுக்குழுவும், கட்சியின் அனைத்து அமைப்புகளும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை முதல்வராக்க முடிவெடுத்தது.

இந்த நிலையில் தன்னுடைய பேச்சால், எழுத்தால் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கும் கலைஞர், தனக்குத் தான் முதல்வர் நாற்காலி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நடந்தது வேறாகிவிட்டது.

கீழ்க்கோர்ட்டில் அளித்த தீர்ப்பு, மேல் கோர்ட்டில் மாற்றி அமைக்கப்படும் என்கிற சூட்சும்ம் தெரிந்த அரசியல் சாணக்கியர் கலைஞர், உடனே மூதறிஞர் ராஜாஜி அவர்களைச் சந்திக்கிறார். அவரிடம் தனக்கு இருக்கிற தகுதிகளையும், அதன் விளைவாக எழுந்த எண்ணத்தையும் எடுத்துச் சொல்கிறார்.

அதற்கு இராஜாஜி அவர்கள், ‘உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் எம்.ஜி. இராமச்சந்திரனைப் போய் பார்’ என்று அனுப்பி வைக்கிறார்.

இராஜாஜியின் இராஜதந்திரப்படிக் கலைஞர் வள்ளலைச் சந்தித்து, “எனது பேச்சும் மூச்சும்-தமிழ், தமிழ. என்றுதானே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனது மனைவி மக்களை மறந்து , இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன். அது மட்டுமில்லாமல் நான் நிலச்சுவான்தார்களின் பிடியில் சுழன்று கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்திருக்கிறேன். எனவே, அந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக முதல்வர் நாற்காலியில் ஒரே ஒரு நாள் நான் அமர்ந்தால், பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கே பெருமையல்லவா?” என்று கலைஞர் வள்ளலிடம் சொல்கிறார்.

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட மக்கள் திலகம், எவர் கேட்டு இல்லையென்று சொல்லியிருக்கிறேன். இன்று நீ கேட்டா மறுக்கப் போகிறேன். ஆனால் நீ கேட்டது பொன்னோ பொருளோ அல்ல; அள்ளிக் கொடுத்து விட! நீ கேட்டது கர்ணனின் கவச குண்டலம் அல்லவா!” – இப்படி வள்ளல் ஒருநிமிடம் யோசித்தார்.

அடுத்த விநாடியே, “நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்…” என்று கலைஞருக்கு வாக்குக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார் வள்ளல்.

அதற்குப்பிறகு, அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுக்குப்போன் செய்து, “ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு…” என்று சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

மக்கள் திலகம் சாப்பிட அழைத்தாலோ அல்லது தான் சாப்பிட வருகிறேன் என்றுசொன்னாலோ – அதில் ஒரு சரித்திர நிகழ்வு புதைந்து கிடக்கும். இதைப்புரிந்து வைத்திருப்பவர் இலட்சிய நடிகர்.

வள்ளல் தன் வீட்டிற்குச் சாப்பிட வருவதைத் தன் தாயிடம் தெரிவித்து, வள்ளலுக்குப்பிடித்ததைச் செய்யச் சொல்கிறார் இலட்சிய நடிகர்.

சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு இலட்சிய நடிகரின் இல்லம் வருகிறார் வள்ளல். இலை போட்டுவிட்டு – இன் முகத்துடன் இலட்சிய நடிகரின்தாய், சமையல் கட்டிலிருந்து பதார்த்தங்களை ஒவ்வொன்றாக எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைக்கிறார்.

இந்த நேரத்தில் இலட்சிய நடிகர் – வள்ளலிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு
நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்…. என்னன்னு சொல்லுவாங்க….!” என்றார்.

அப்பொழுதுதான் இலட்சிய நடிகரிடம், “கலைஞர் முதல்வர் நாற்காலியல் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று வள்ளல் விளக்குகிறார்.

அதற்கு இலட்சிய நடிகர் நிறைய விளக்கம் அளித்து, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

‘இந்த விளக்கமெல்லாம் எனக்குத் தேவையில்லை! எனக்காக இதைச் செய்கிறாயா? இல்லையா?’ என்று கடிந்தும் கேட்காமல், இலட்சிய நடிகர் எதைச் சொன்னால் இளவகுவார் என்கிற இங்கிதம் தெரிந்த வள்ளல், “நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா” என்கிற தமிழ்க் கலாசார வஜ்ராயுத்த்தைப் பிரயோகிக்கிறார். அவ்வளவு தான்; இலட்சிய நடிகர் வீழந்து விடுகிறார்!

“சரி நீங்க சாப்பிடுங்க..” கவிதையாய் ஒப்புதல் அளித்தார் இலட்சிய நடிகர்.

அதற்குப் பிறகு முதல்வராகக் கலைஞர் பொறுப்பேற்கிறார். “நண்பா, இது உன்னால் மட்டுமே சாத்தியமாயிற்று” என்று கலைஞர் உருக, “நம் நட்பே சாத்தியமாக்கியது” என கலைஞரை அனைத்துக்கொண்டார் வள்ளல் எம்.ஜி.ஆர்.

நன்றி –
தமிழ் தேசம்

எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக நடித்த ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசனுடன் எம்.ஜி.ராமச்சந்திரன்

எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்த ஒரே படம் “முகராசி”. இதில், எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக ஜெமினி நடித்தார். 1965_ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “வல்லவனுக்கு வல்லவன்” படத்தில் ஜெமினிகணேசன் நடித்தார். வெற்றிகரமாக ஓடிய படம் இது.
ஜெமினி நடித்த “வீரஅபிமன்யு” பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம். இதில் ஜெமினிகணேசன் கிருஷ்ணனாகவும், ஏவி.எம்.ராஜன் அபிமன்யுவாகவும் நடித்தனர். தந்திர காட்சிகள் இதன் சிறப்பு அம்சம். கவிஞர் கண்ணதாசனின் “பார்த்தேன் ரசித்தேன்” என்ற பாடலுக்கு கே.வி. மகாதேவன் இசை மெருகூட்டியது.
ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடிக்க ஜெமினி நிறுவனம் தயாரித்த படம் “வாழ்க்கைப்படகு”. முதலில் வைஜயந்திமாலா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு கால்ஷீட் ஒத்து வராததால் பிறகு தேவிகா நடித்தார். நல்ல கதை அமைந்திருந்ததால் 100 நாள் ஓடிய வெற் றிப்படம்.
1965_ல் இந்தியா _பாகிஸ்தான் போர் நடந்தது. யுத்த நிதி திரட்டினார், பிரதமர் சாஸ்திரி. சென்னைக்கு வந்திருந்த அவரை ஜெமினிகணேசனும், சாவித்திரியும் சந்தித்தனர். சாவித்திரி, தான் அணிந்திருந்த நகைகளை யெல்லாம் கழற்றி சாஸ்திரியிடம் கொடுத்தார். சாவித்திரியின் தாராள மனப்பான்மையைப் பாராட்டினார், சாஸ்திரி.
தேவர் பிலிம்ஸ்சின் “முகராசி” படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் நடித்தார். இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான். நூறு நாள் ஓடிய படம்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் வேடத்தில் ஜெமினிகணேசன் வருவார். ஜெயலலிதா கதாநாயகி. சின்னப்பதேவர் தயாரித்த இப்படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கினார். இசை கே.வி.மகாதேவன். வசனம் ஆர்.கே.சண்முகம்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய “சித்தி” படத்தில் ஜெமினி நடித்தார். குடும்ப சித்திரம். முத்துராமன், பத்மினி, எம்.ஆர்.ராதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். இது 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
ஜெமினிகணேசன் _கே.ஆர்.விஜயா இணைந்து நடிக்க ஏவி.எம். உருவாக்கிய படம் “ராமு”. எம்.முருகன்_ குமரன் _ சரவணன் தயாரித்த இப்படத்தை ஏ.சி.திருலோக சந்தர் டைரக்ட் செய்தார். ஜாவர் சீதாராமன் வசனம் எழுத, எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைத்தார்.

எனக்கு குழந்தை இல்லையே – வருத்தம் கொண்ட எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் புகழுக்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த வலைப்பூவை தமிழ்மணம் நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டு தமிழ் மணத்தில் இணைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்@.

– சகோதரன் ஜெகதீஸ்வரன்.

குழந்தைகளுடன் எம்.ஜி.ஆர்

தனக்குக் குழந்தை இல்லை என்ற குறை, எம்.ஜி.ஆரின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. ஒரு சிலரிடம் மட்டும் அவர் மனம் விட்டுப் பேசுவார். அவர்களில், வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருவர். “அன்பே வா”, “பெற்றால்தான் பிள்ளையா”, “வேட்டைக்காரன்”, “தாய் சொல்லைத் தட்டாதே” உள்பட எம்.ஜி.ஆர். நடித்த 14 படங்களுக்கு வசனம் எழுதியவர்.

எம்.ஜி.ஆர். தன்னிடம் கூறியதை, பின்னர் ஒரு கட்டுரையில் ஆரூர்தாஸ் எழுதியுள்ளார். ஆரூர்தாஸ் குறிப்பிட்டிருப்பதாவது:-

“ஒரு நாள், ஒப்பனை அறையில், நாங்கள் தனித்திருந்த வேளையில் எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார்: “பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான்! அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கிறேன். இதெல்லாம் கடந்த காலத்தில். இப்போது, புகழின் உச்சியில் இருக்கிறேன். வசதிக்கு பஞ்சம் இல்லை. தினமும் என் வீட்டில் மூணு வேளையும் குறைஞ்சது அம்பது அறுபது இலைங்க விழுது. ஆனாலும் ரெண்டே ரெண்டு குறைங்களை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது.

முதலாவது, குழந்தை வாரிசு இல்லாத குறை! ”

அப்போது நான் இடைமறித்து, “ஏன்? பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க _வாரிசு இல்லை. அதனால் ஒரு குறையும் இல்லையே” என்றேன்.

“அப்படி இல்லை. நீங்க சொல்றது சரி இல்லை. காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்துனால குழந்தை இல்லை. ஆனா, எனக்கு ரெண்டு மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தைகூட பிறக்கலியே. `எந்த ஒரு புண்ணியவதியாவது என் குழந்தையை அவவயித்துல பத்து மாசம் சுமந்து பெத்து, என் கையிலே கொடுக்கமாட்டாளா அப்படிங்குற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.

ஜோதிடக் கலையில் நிபுணர்களான இரண்டு மூன்று பேர் ஒரே கருத்தைச் சொன்னார்கள். “இது பலதார ஜாதகம்! உங்கள் வாழ்க்கையில் பல பெண்கள் குறுக்கிடுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க. ஆனா அவங்க யாரும், உங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் கொடுக்கமாட்டாங்க. கொடுக்கவும் முடியாது” என்றார்கள்.

தன்னை குழந்தையை பாவிச்சிக்கும்படி `ஜானு’ (வி.என்.ஜானகி) எனக்கு ஆறுதல் சொல்லிச்சு. குழந்தையைப் பெத்துக்குடுக்க வேண்டிய மனைவியை, குழந்தையா நினைச்சுக்க முடியுமா என்ன?

என் அண்ணனுக்கு அத்தனை குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு எனக்கு ஒரே ஒரு குழந்தையைக்கூட குடுக்க மனசு வரலே பாத்திங்களா? என் உடம்புல ஓடுற அதே ரத்தந்தானே அவர் உடம்புலேயும் ஓடுது! பின்னே ஏன் இப்படி?

போகட்டும். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!

என்னுடைய இரண்டாவது குறை என்னன்னா, ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்துல கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியா பெரிசா ஒண்ணும் நான் படிச்சுத் தெரிஞ்சிக்கலே. அதுக்கு எனக்கு இளமையிலே வறுமையின் காரணமா வசதியும் வாய்ப்பும் இல்லாமல் போயிடுச்சி.

மத்தவங்க ஆங்கிலத்துலேயும், நல்ல தமிழ்லேயும் சரளமாகப் பேசி அரிய பெரிய கருத்துக்களை எடுத்துச் சொல்றதைக் கேக்கும் போதும், அண்ணா, கிருபானந்த வாரியார் இவங்களோட சொற்பொழிவைக் கேட்கும் போதும், என்னால அவங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைத்து எனக்கு நானே வருத்தப்படுவேன்.

ஆனாலும் எப்படியோ பேசிச் சமாளித்து, மத்தவங்களைச் சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும், குறை குறைதானே! அதிலேயும் பூர்த்தி செய்ய முடியாத குறை!

அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா, அதுலேயாவது, நான் பெரிய புள்ளைக்குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!”

இவ்வாறு எம்.ஜி.ஆர்.கூறியதாக ஆரூர்தாஸ் குறிப்பிட்டுள்ளார். எண்ணற்ற தமிழ் மக்கள் குழந்தையோடு மகிழ்ச்சியாக பொழுது கழிக்க நடித்தவரும், சரியான சட்டங்களை இயற்றி மகிழ்ச்சியை நிலை கொள்ள செய்தவருமான நமது எம்.ஜி.ஆரின் குறையை இறைவன், அடுத்தப் பிறவியில் நிச்சயம் நீக்கியிருப்பான்.

எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்!- எம்.ஆர்.ராதா கைது – மாலைமலர் செய்தி

“பெற்றால்தான் பிள்ளையா” படத்தொடர்பான தகராறில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். அவரை சுட்டு விட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்ட எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டார்.

1966_ம் ஆண்டில் அன்பே வா, நான் ஆணையிட்டால், முகராசி, நாடோடி, சந்திரோதயம், தாலி பாக்கியம், தனிப்பிறவி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய 9 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

“அன்பே வா” ஏவி.எம். தயாரித்து, மகத்தான வெற்றி கண்ட படம். இதில் அவருக்கு ஜோடி சரோஜாதேவி. முகராசி, தனிப்பிறவி ஆகிய இரண்டு படங்களும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டு படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.

ஆகஸ்ட் 18_ந்தேதியன்று “முகராசி”யும், செப்டம்பர் 16_ந்தேதி “தனிப்பிறவி”யும் வெளியாயின. அதாவது, ஒரு மாத இடைவெளியில், இரண்டு எம்.ஜி.ஆர். படங்களை சின்னப்ப தேவர் வெளியிட்டு, சாதனை படைத்தார். “முகராசி”க்கு ஆர்.கே.சண்முகம், “தனிப் பிறவி”க்கு ஆரூர்தாசும் வசனம் எழுதினர்.

முகராசியில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார். “நாடோடி”, பி.ஆர்.பந்துலு தயாரித்த படம். இதில் எம்.ஜி. ஆருக்கு ஜோடி சரோஜாதேவி.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய “நான் ஆணையிட்டால்…” பாடலையே தலைப்பாக வைத்து சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் படம் எடுத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. வசனத்தை வித்துவான் வே.லட்சுமணன் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். படத்தை சாணக்யா டைரக்ட் செய்தார்.

எம்.ஜி.ஆர். மாறுபட்ட வேடத்தில் நடித்த படம் “பறக்கும் பாவை”. இதில் சர்க்கஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடித்தார். ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி. ஆரின் ஜோடி சரோஜாதேவி. வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுத, ராமண்ணா டைரக்ட் செய்தார்.

ஸ்ரீமுத்துக்குமரன் பிக்சர்ஸ் சார்பில் வாசு தயாரித்த “பெற்றால்தான் பிள்ளையா” 6_12_1966_ல் ரிலீஸ் ஆயிற்று. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்த படம். கதை_ வசனத்தை ஆரூர்தாஸ் எழுத, இசை அமைத்தது எம். எஸ்.விஸ்வநாதன். டைரக்ஷன்: கிருஷ்ணன் பஞ்சு.

“பெற்றால்தான் பிள்ளையா” படத்தில், எம்.ஜி.ஆர். ஓர் அனாதை; குடிசையில் வசிப்பவர். அசோகன் வில்லன். அவர் சவுகார் ஜானகியை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி, குழந்தை பிறந்ததும் கைவிட்டு விடுவார். கேட்பாரற்று கிடந்த குழந்தையை எம்.ஜி.ஆர். எடுத்து வளர்ப்பார்.

எம்.ஆர்.ராதாவும் சிவாஜியும்

எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எதிர் வீட்டில், எம்.ஆர்.ராதா வசிப்பார். அவர் ஒரு வித்தைக்காரர். அவருடைய தங்கை சரோஜாதேவி. எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் காதல் ஏற்படுகிறது. கே.ஏ.தங்கவேலு, பொம்மை வியாபாரி. தன் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி, இவரிடம் சவுகார் ஜானகி கேட்டுக்கொள்வார். தங்கவேலுவும், போலீஸ்காரர் டி.எஸ்.பாலையாவும் சிரமப்பட்டுத் தேடி குழந்தையைக் கண்டு பிடித்து விடுவார்கள். ஆனால், குழந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட எம்.ஜி.ஆர்., அதைக் கொடுக்க மறுத்துவிடுவார்.

இதற்கிடையே அசோகன் ஒரு விபத்தில் கால் இழந்து, மனம் திருந்தி, சவுகார் ஜானகியிடம் போய்ச்சேருவார். குழந்தை யாருக்குச் சொந்தம் என்ற விஷயம், கோர்ட்டுக்கு போகும். “குழந்தை, பெற்றோருக்குத்தான் சொந்தம்” என்று கோர்ட்டு தீர்ப்பு கூறும்.

குழந்தையை, பெற்றோரிடம் எம்.ஜி. ஆர். கொடுக்கும்போது துயரம் மிகுதியால் கண்ணீர் வடிப்பார். குழந்தையைப் பெற்றுக்கொண்டு சவுகார் ஜானகி புறப்படும்போது, குழந்தை “அப்பா!” என்றபடி, எம்.ஜி.ஆரை நோக்கி தாவும். _ இதுதான் “பெற்றால்தான் பிள்ளையா” படத்தின் கதை. இந்தப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

12_1_1967 அன்று தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான “தாய்க்கு தலைமகன்” ரிலீஸ் ஆனது. இதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். வசனம் ஆரூர்தாஸ். இசை: கே.வி.மகா தேவன். டைரக்ஷன்: எம்.ஏ. திருமுகம்.

அன்று மாலை, “எம்.ஜி. ஆரை எம்.ஆர்.ராதா சுட்டு விட்டார்” என்ற செய்தி, எரிமலை வெடித்தது போல் வெளியாகியது. தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீ போல் இச்செய்தி பரவியது. மக்கள் உறைந்து போனார்கள்; சினிமா தியேட்டர்களும், கடைகளும் மூடப்பட்டன. பஸ்களும், ரெயில்களும் ஓடவில்லை. தமிழ்நாடே ஸ்தம்பித்தது.

நன்றி-

மாலைமலர்

ராஜகுமாரி – எம்.ஜி.ஆர் கதைநாயகனாக நடித்த முதல் படம்

ஜூபிடர் நிறுவனம் “ராஜகுமாரி” என்ற படத்தை தொடங்கியது. மாலதி, தவமணி தேவி ஹீரோயின்கள். சோமசுந்தரம், மொய்தீன் இணைந்து தயாரித்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி, வசனம் எழுதி இயக்கி இருந்தார். உதவி வசனம், முதல்வர் கருணாநிதி. ஹீரோவாக நடித்தது யார் தெரியுமா?

எம்.ஜி.ஆர்தான்.

முதன் முதலாய் கதாநாயகன்

ஜூபிடர் நிறுவனம் தயாரித்த பல படங்களில் சிறு வேடங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். தொடர்ந்து சிறு வேடங்களிலேயே நடிக்கிறோமே என அவர் வருத்தப்பட்டதில்லை. என்றாவது ஒருநாள் நாமும் கவனிக்கப¢படுவோம். மக்களால் அங்கீகரிக்கப்படுவோம் என எம்.ஜி.ஆர். நம்பினார். சினிமா மீதான ஆர்வம், தனது பணியில் கடும் உழைப்பு, நேர்மை இவைகள்தான் அவரை திடீர் ஹீரோவாக்கியது. பறக்கும் குதிரை பற்றிய
வித்தியாசமான படமிது. “ராஜகுமாரி” ரிலீசானபோது இயக்குநர், தயாரிப்பாளர்களைவிட எம்.ஜி.ஆர். படபடப்பாக இருந்தார். படம் மக்களுக்கு பிடிக்குமா? தன்னை ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்களா என பயந்தபடி இருந்தார். “ராஜகுமாரி” படம் ஹிட்டானது. எம்.ஜி.ஆருக்கு நல்ல பெயரை படம் பெற்றுத் தந்தது. ஆனாலும் அவருக்கு ஹீரோ வேடங்கள் தொடர்ந்து கிடைக்கவில்லை.

காந்தி மீது மிகுந்த பக்தி கொண்டவர் ஏ.கே.செட்டியார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காந்தியுடன் பழகிய அவர், பல்வேறு மாநிலங்களுக்கு காந்தி சென்றபோது அதை படம் பிடித்தார். காந்தியின் ஒரு லட்சம் மைல் பயணத்தை அவர் 100 கேமராமேன்களை கொண்டு படம் பிடித்தார். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கேமராமேன் விதம், அவர் இதை செய்தார். மூன்று ஆண்டுகளாக தயாரான டாக்குமென்ட்ரி படமிது. 50 ஆயிரம் அடியில் இந்த படம் உருவாகி இருந்தது. இதை 10 ஆயிரத்து 500 அடியாக ஏ.கே.செட்டியார் குறைத்தார். “அகிம்சா யுத்தம்” என்ற பெயரில் 1948ம் ஆண்டு நவம்பரில் இப்படத்தை ரிலீஸ் செய்தார். தா.நா.குமாரசாமி வசனங்களை எழுதியிருந்தார். ஏ.கே.செட்டியார், இயக்கம். டாக்குமென்ட்ரி படம் என்பதால் ரசிகர்களை இது கவரவில்லை.

சூப்பர் ஹீரோ - பாகவதர்

பாகவதர் நடித்து, தயாரித்து வந்த “ராஜமுக்தி” ரிலீசுக்கு தயாராகி வந்தது. இதில் பாகவதருடன் சேர்ந்து பின்னணி பாடியது எம்.எல்.வசந்தகுமாரி. இவர் நடிகை ஸ்ரீவித்யாவின் அம்மா. இளம் வயதிலேயே பல கச்சேரிகளில் பாடியவர். அவரது குரலை கேட்டு ரசித்த பாகவதர், அவரை பின்னணி பாட வைத்தார். இதில் ஹீரோயினாக நடித்தது பானுமதி. வி.என்.ஜானகி, செருகளத்தூர் சாமா, எம்.ஜ¤.ஆர்., பி.எஸ். வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி ஆகியோரும் நடித்தனர். இதில் பாகவதரின் நண்பரான என்.எஸ்.கே. ஏன் நடிக்கவில¢லை என பலரும் கேள்வி எழுப்பினர். வழக்கமாக பாகவதரின் அனைத்து படங்களிலும் அவர் இடம்பெறுவார். இதில் இல்லை. அதற்கு காரணம், “சந்திரலேகா” படத்துக்கு ஏற்கெனவே கால்ஷீட் ஒதுக்கியிருந்தார் என்.எஸ்.கே. அதனால் இதில் நடிக்க முடியவில்லை. பட ஷூட்டிங் நடக்கும்போதே பாகவதருக்கு வேண்டாதவர்கள் புரளியை கிளப்பிவிட்டனர். அதாவது, பாகவதரின் குரல் மாறிவிட்டது. பழைய இனிமை இல்லை என்பதுதான் அது.

ஆனால், இதையே படத்தின் விளம்பரத்துக்காக எதிர்மறையாக யோசித்தார் ஏவி.மெய்யப்ப செட்டியார். அவர் தயாரிக்காவிட்டாலும் இப்படத்தின் பாடல்களை வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார். வழக¢கமாக படம் ரிலீசாகும்போதுதான் அப்போது கிராம்போன் ரெக்கார்டுகள் வெளியாகும். ஆனால், “ராஜமுக்தி” ரிலீசுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே அதன் பாடல் ரெக்கார்டுகளை செட்டியார் வெளியிட்டார். பாகவதரின் குரலில் இருந்த இனிமை, துளியும் மாறவில்லை. பாடல் ரெக்கார்டுகள் விற்பனை சூடு பிடித்தது. பாடல்கள் ஹிட்டும் ஆனது. அதுவே படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டியது. ஆனால், கதை சரியில்லாததால் ஒரு மாதம் கழித்து ரிலீஸான இப்படம் ஓடவில்லை.

கே.ஜி. புரொடக்ஷன்ஸ் சார்பில் கிருஷ்ண கோபால் தயாரித்து இயக்கிய படம், இது நிஜமா? கதை மற்றும் இசை, வீணை எஸ்.பாலசந்தர். அப்போது பாலசந்தர் வீணை கற்றதில்லை. வெறும் பாலசந்தர் என்றுதான் அழைக்கப்படுவார். இதில் ஹீரோவாக நடித்ததும் அவரே. இரட்டை வேடம். அண்ணன், தம்பியாக நடித்தார். அவர் பணியாற்றிய முதல் படமிது. பிரபலமாக இருந்த இசை கலைஞி ராஜம், ஹீரோயின். டி.கே.பட்டம்மாளும் நடித்திருந்தார். படம் சக்கை போடு போட்டது. பாலசந்தருக்கு பாராட்டுகள் குவிந்தன. அவரது கதையமைப்பு பாணி பலருக்கும் பிடித்திருந்தது. இதனால் மும்பையை சேர்ந்த அஜீத் பிக்சர்ஸ் என் கணவர் படத்துக்கு வீணை பாலசந்தரை ஒப்பந்தம் செய்தது. அவர் மீது இருந்த நம்பிக்கை காரணமாக டைரக்ஷன் பொறுப்பும் பாலசந்தரிடமே ஒப்படைத்தனர். இசை, டைரக்ஷனுடன் எடிட்டிங் பணியும் அவரே மேற்கொண்டார். இதில் அவருக்கு ஜோடியாக நடித்தது இந்தி பட நாயகி நந்தினி. டி.கே. பட்டம்மாளும் நடித்திருந்தார். இந்த படமும் வெற்றி பெற, வீணை பாலசந்தர் பிரபலம் ஆனார்.

இந்த நேரத்தில்தான் தமிழ் சினிமாவின் மகா பட்ஜெட் படம் ரிலீசானது. 5 ஆண்டுகளாக உருவான படம் இது. படப்பிடிப்பு நடக்கும்போதே 3 மில்லியன் டாலர் செலவில் உருவாகும் படம் என விளம்பரம் செய்யப்பட்டது. அதாவது ரூ.30 லட்சம் செலவில். அப்போது எந்த படத்துக்கும் இவ்வளவு செலவு செய்யப்பட்டதில்லை. இந்த படம் பைனான்ஸ் பிரச்னையால் இடையில் ஷூட்டிங் நின்றது. அப்போது தயாரிப்பாளரின் அம்மாதான் படம் முழுமை பெற உதவினார்.