எம்.ஜி.ஆர் – ரஜினி ஒரு ஒப்பீடு – விஜயன்

தமிழகத் திரையுலத்தின் மூலம் எம்.ஜி.ஆரும் ரஜினியும் பெற்ற புகழ் செல்வாக்கு அவர்களது திறமையைத் தாண்டி வந்த ஒன்றாகும். இது பொதுவான ரசிகர்கள் என்ற நிலையிலிருந்து சொல்லப்படுகின்ற கருத்து. திறமையைத் தாண்டி என்றால்…..எம்.ஜி.ஆரும் ரஜினியும் மக்களிடையே நேரடியாகப் பழகும் முறையில் கையாண்ட அணுகுமுறைகளே அவர்களது புகழும் செல்வாக்கிற்கும் காரணம். மற்றொன்று அவர்களிடையே இருந்த எளிமை.

இன்றைக்கும் திரையுலகில் எந்த ஒரு பிரிவிலும் போய் பேசினாலும் எம்.ஜி.ஆரின் அன்பான உபசரிப்பு, விருந்தோம்பல், கொடைத்தன்மை பற்றி நெகிழ்ந்து போய் சொல்பவர்கள் அதிகம். மற்றொன்று சிறியவர், பெரியவர் என்று பேதம் பார்க்காமல் அவர்களுக்கு மரியாதை கொடுத்துப் பேசுவது மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் மற்றவர்கள் முன்னிலையில் அவர்களை டேய் வாடா போடா என்றெல்லாம் எம்.ஜி.ஆர் அழைப்பதில்லை.

இதே குணம்தான் ரஜினிக்கும். நடிப்பவர்களிலிருந்து தொழில் நுட்பக் கலைஞர்கள் அத்தனை போட்டோடமும் நல்ல மனிதர் அன்பானவர், பண்பானவர் என்ற பெயரை ரஜினி பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆரைப் போலவே இவரது பழகும் முறையும் யதார்த்தமானது. பண்டிகை காலங்களில் சினிமாவின் கடைநிலை ஊழியர்களை தேடிச் செல்லும் எம்.ஜி.ஆரின் பணம். தமிழ்ப் பண்டிகை நாட்களில் எம்.ஜி.ஆரை தேடிச் சென்று உதவிகள் பெறும் பழக்கமும் அவர்களுக்கு உண்டு. ரஜினியும் அந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரைப் போலவே.

தொழில் முறை நாடகக் கலைஞர்கள் என்றால் எம்.ஜி.ஆர், ரஜினி இருவருமே அன்பு, அக்கறை காட்டுவார்கள் சற்று அதிகமாகவே. எம்.ஜி.ஆர், அ.தி.மு.க-வைத் தொடங்கி அதற்காக நிதி திரட்டும் முயற்சியில் இருந்தார். மாலையணிவிப்பவர்கள் பணம் தரவேண்டும் என்று ஒரு விதியை ஏற்படுத்தினார். அப்படி அவர் ஈரோடு சென்றிருந்த சமயம் அங்கு தங்கியிருந்த விடுதியில் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் வந்து விட்டார்கள். அவரோடு படமெடுத்துக் கொள்ள அத்தனை பேருக்கும் விருப்பம். எம்.ஜி.ஆரும் உடன்பட்டார் ஒரு நிபந்தனையோடு படமெடுத்துக் கொள்பவர்களெல்லாம் கட்சி நிதியாக பத்து ரூபாய் தர வேண்டும் என்றார். மகிழ்ச்சியோடு ஒவ்வொருவராக பத்து ரூபாய் தந்து எம்.ஜி.ஆரோடு படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் திடீரென்று எம்.ஜி.ஆரின் தோள் மீது கை போட்டு புகைப்படத்திற்கு காட்சி தந்தார். எம்.ஜி.ஆரும் அதைத் தடுக்கவில்லை. ஆனால் பாதுகாப்புக்கு உடனிருந்தவர்களோ அந்த அன்பவரின் செயலை தடுக்க முயன்றார்கள். எம்.ஜி.ஆர். தனது பாதுகாவலர்களிடம் இவர் பணம் தந்து படமெடுத்துக் கொள்கிறார். இந்த சமயத்தில் இவரைப் போன்றவர்களெல்லாம் நமக்கு எஜமானர்களைப் போலவே. அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நாம் கட்டுப்பட்டேயாக வேண்டும். அதனால் அவரவர் விருப்பப்படி படமெடுத்துக் கொள்ளட்டும் என்றார்.

ஊட்டியில் என் கண்ணில் நீர் வழிந்தால் படப்பிடிப்பு மற்ற இடங்களை விட பொட்டானிகல் கார்டனில் ரசிகர்கள் திரண்டு விட்டனர். அதில் ஒரு நடுத்தர வயதுக்காரர் தன் குடும்பத்தோடு படமெடுத்துக்கொள்ள வேண்டுமென்று ரஜினியைக் கேட்டார். ரஜினியும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாமே என்றார். அதன்படி அந்த நடுத்தர வயதுக்காரர் தன் மனைவி, குழைந்தைகளோடு ரஜினியோடு நின்றார்கள். புகைப்படக் கலைஞர் க்ளிக் செய்யும் சமயத்தில் நடுத்தர வயதுக்காரர் திடீரென்று ரஜினியின் தோள் மீது கை போட்டார். அதைப்பார்த்து மற்றவர்களெல்லாம் அதிர்ந்தார்கள் தவிர ரஜினி எவ்வித முகச்சுளிப்பும் காட்டவில்லை. முகத்தில் மேலும் சிரிப்பைக் காட்டியபடி நின்றார். ரஜினியின் வீட்டில் அவ்வப்போது ரசிகர்களோடு போட்டோ செஷன் நடக்கும். அந்த சமயத்தில் ரஜினி ரசிகர்களின் ஆர்வத்திற்கு அணைபோடவே மாட்டார்.

பொது இடங்களில் தன்னைக் காணவரும் ரசிகர்களிடமோ, தொண்டர்களிடமோ விரும்பத் தகாத விஷயங்கள் இருந்தால் அதை எம்.ஜி.ஆர். பகிங்கரமாக கண்டிக்க மாட்டார். கோபத்தை வெளிப்படுத்தவும் மாட்டார். யாராக இருந்தாலும் தனிமையில் அழைத்து அவர்களது தவறை சுட்டிக்காட்டி திருத்த முற்படுவார். ஆரம்ப காலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சமயம் தவிர ரஜினி தன் கோபத்தை பொது இடங்களில் வெளிப்படுத்துவதில்லை. ஓரிரு சமயங்களில் வேண்டாம் என்று கூறியும் அவர் விருப்பத்திற்கு மாறாக யாராவது நடந்து கொள்ள முற்படாமல் கை நீட்டியிருக்கிறார். அதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்புறம் பொது இடங்களில் அவருக்கு கோபம் வந்தாலும் மௌனமாகி விடுவார். அல்லது சிரித்துக் கொண்டு பேசாதிருந்து விடுவார்.

ஆடம்பரமான விழாக்கள் எம்.ஜி.ஆருக்கும் பிடிக்காது. ரஜினிக்கும் பிடிக்காது. ரஜினியின் திருமணம் திருப்பதியில் எளிய முறையில் நடைபெற்றது. சென்னையில் வரவேற்பு நடந்த போதும் கூட அப்படித்தான் வரவேற்பில் அவர் அதிக நேரம் செலவிடாமல் வெளியே போய் விட்டார்.

எம்.ஜி.ஆர் தன் வீட்டு திருமணங்களையெல்லாம் எளிய முறையில் நடத்தியிருக்கிறார். ஆடம்பரமான திருமணங்களில் அவர் கலந்து கொள்வதையே தவிர்த்துவிடுவார்.

எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கும்வரையினும் ரசிகர் மன்ற மாநாடெல்லாம் நடத்தியதில்லை. ரஜினியும் இன்றுவரை மன்ற மாநாடு நடத்தியதில்லை.

படப்பிடிப்பிற்கோ அல்லது கட்சி விஷயமாக வெளியூர்களுக்கோ செல்லும் எம்.ஜி.ஆர் அங்கு இருக்கும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வார். தனக்காக பிரத்தியேக வசதிகள் செய்து கொள்ள மாட்டார். மற்றவர்களை செய்ய அனுமதிக்கவும் மாட்டார். சில சமயங்களில் போட்டோல் அல்லது வேன்லேயே ஓய்வெடுத்துக் கொள்வார்.

ரஜினி ஆரம்பத்திலிருந்து இன்றுவரையிலும் அப்படித்ததான். பணம், வசதி இருக்கிறது என்பதற்காக அவர் ஆடம்பரங்களை சொகுசை விரும்புகிறவரல்ல.
மனித நேயத்தைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர், ரஜினி இருவருமே ஒரே மாதிரியானவர்கள். எம்.ஜி.ஆரிடம் இருந்தது. ரஜினியிடம் இருப்பது கலப்படமற்ற உண்மையான அன்பு மனம். அவர்களை முழுமையாக அறியாதவர்கள் மாற்று கருத்துக்களை கொண்டிருப்பார்கள்.

நன்றி –

தமிழ் சினிமா.
 

பிற்சேர்க்கை –

இந்தக் கட்டுரை எம்.ஜி.ஆர் வலைப்பூவில் வெளியிட்டதன் நோக்கம் ரஜினி அவர்களையோ, எம்.ஜி.ஆர் அவர்களையோ இழிவுப்படுத்த அல்ல. இருவரிடம் இருக்கின்ற நல்ல குணநலன்களை மற்றவர்களுக்கு தெரிவிக்க மட்டுமே. ஆனால், இக்கட்டுரையை காரணமாகக் கொண்டு எழுதப்படும் மறுமொழிகள், இருதரப்பு ரசிகர்களின் மனதினையும் புண்படுத்தும் என்று எண்ணுகிறேன். அதனால் மேலும் அது தொடராமல் இருக்க கட்டுரையில் மறுமொழியிடும் உரிமை வாசர்களுக்கு மறுக்கப்படுகிறது. இது வரை சில நண்பர்கள் எழுதிய மறுமொழிகளும் அழிக்கப்படுகின்றன.

எம்.ஜி.ஆரா ரஜினியா என்று சண்டையிட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள், தயவு செய்து வேறுதளங்களுக்கு சென்று விடுங்கள். நான் இருவரையும் மதிப்பவன், என்னிடம் ஒருவரை புகழ்ந்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் வசைபாடுவதை ஏற்க இயலாது,. மன்னிக்கவும்.

அன்புடன்,
புரட்சித் தலைவனின் ரசிகன்,
ஜெகதீஸ்வரன்.

Advertisements