“மனதை இழக்காத வரையில்…” – மணா

மிழகத்து ஊடகங்களில் பணிபுரிய ஆரம்பித்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அரசியல் வார இதழ், வார இதழ், வாரமிருமுறை இதழ், இலக்கிய இதழ், இணைய இதழ், தொலைக்காட்சி ஊடகங்கள் – என்று பல்வேறு ஊடகங்களில் என்னதான் மனம் ஒன்றிய ஈடுபாட்டுடன் பணியாற்றினாலும் – தமிழகத்தில் பத்திரிகையாளனின் சுதந்திரம் என்பது மிகவும் வரையறுப்பட்டதாகவே இருக்கிறது –  நிறுவனம் சார்ந்து, சமூகம் சார்ந்து, சுற்றியுள்ள அரசியல் சார்ந்து.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலம். அவர் தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்காக மதுரை வந்திருந்தார். வார இதழ் ஒன்றின் நிருபராக அவர் மூன்று நாட்கள் மூன்று நிகழ்ச்சிகளுக்குப் பயணம் செய்தபோது பின்னால் ஒரு வேனில் சென்ற செய்தியாளர்களுடன் நானும் போயிருந்தேன்.
இன்னொரு மாவட்டத்தில் நடந்த விழா துவங்குவதற்கு முன்பு முதல்வரின் உதவியாளர் என்னை அழைப்பதாக இன்னொரு செய்தியாளர் வந்து தகவல் சொன்னார். தனியறையில் இருந்தார் அந்த உதவியாளர். முன்னால் நின்றதும் ”என்ன எழுதுறீங்க.. உங்க பத்திரிகையில்.. தொடர்ந்து எங்க கட்சியைப் பத்தி கண்டதும் வந்துக்கிட்டிருக்கு.. நீ என்னய்யா எழுதுறே? எங்க கட்சியில் அதிருப்தியா எவன் இருக்கான்னு போய்ப் பார்த்து எழுதிக்கிட்டிருக்கீங்களே. என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க.. பார்த்தா சின்ன வயசாத் தெரியுறே.. வேணாம்..  உங்க ஆபிசுக்கும் உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன்..”
– குரலை ஏற்றி இறக்கிப் பேசிக்கொண்டே போனார். கொஞ்சமும் இத்தகைய இறுக்கமான அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை. எதுவும் பேசவும் முடியவில்லை. பேசுவதற்குள் அவரே முந்திக்கொண்டு சொன்னார். ”போ.. இதையாவது பார்த்துக் கவனமா எழுது.. போ.” மனம் பொறுக்காமல் வெளியே வந்ததும் அந்த வார இதழ் அலுவலகத்தைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நடந்ததைச் சொன்னேன். ” சரி.. எழுதி அனுப்புங்க” என்றார்கள்.
நடந்ததை எழுதி அனுப்பிவிட்டு மூன்று நாட்கள் நடந்த விழாக்களைப் பற்றிக் கிண்டலும், கேலியுமாக எழுதி அனுப்பினேன். அடுத்த வாரம் அது வெளிவந்தது. அதன் பிறகு எத்தனையோ மிரட்டல்களும், பூட்டிய அறைக்குள் சிறை வைக்கப்பட்டுத் தாக்குதல் நடத்தியதுமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒருவகையில் பார்த்தால் அம்மாதிரியான மிரட்டல்களும், தாக்குதல்களும் கூட வேலையின் இன்னொரு இயல்பாகி விட்டன.
காட்சி ஊடகங்களில் பணியாற்றும்போது இன்னும் கூடுதலான கவனமும், எச்சரிக்கை உணர்வும் தேவைப்படுகிறது. சமீபத்தில் கூட அதை முழுமையாக உணர முடிந்தது. என்னதான் அந்தர சுத்தியுடன் செய்யும் தொழிலுக்கான நேர்மையுடன் செயல்பட்டாலும் ஊடகங்களைப் பொறுத்தவரை – இங்குள்ள எந்தச் செய்தியாளரும் உயிருள்ள கருவிகள் தான்.. அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலையை அவர்கள் எதிர்பார்க்கிற கோணத்தில் கொடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் கருவி.
யார் யாருடைய பிரச்சினைக்காகவோ குரல் கொடுக்கும் செய்தியாளனால் தனக்கு வரும் சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கும் கைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றித் தெரியாமல் போவது வருத்தமானதுதான்.
ஊடகங்களில் நேர்மையாகப் பணியாற்றும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கணத்தில் இந்த உணர்வை ஆத்மார்த்தமாக உணர்ந்திருப்பார்கள். அம்மாதிரியான சமயங்களில் மனசில் மேகம் திரண்ட மாதிரி வலி வந்துபோகும். அந்த வலியின் அவஸ்தையை சொந்த உறவுகளிடம் கூட வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு வலி அடர்ந்த ஒரு நாளில் எதையாவது வாசிக்க வேண்டும் என்ற வேகம். மனசைத் திசை திருப்ப மறைந்த எழுத்தாளர் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ நாவலை வேகத்துடன் படித்தபோது நெருக்கமாக உணர வைத்தன அந்த நாவலின் இறுதியில் வரும் இரு வரிகள். அதை வாசித்தபோது மனசுக்குள் ஒரு  மூலிகை மருந்தைப் போல உள்ளிறங்கி அந்த எழுத்துக்கள்  ஆற்றுப்படுத்தின.. தோழமை உணர்வுடன் வருடிக் கொடுக்கிற விதத்தில் இருந்தன அந்த செழுமையான வரிகள்.
அந்த  உயிர்ப்பூட்டிய வரிகள் இவை தான்:
மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று எதுவுமே இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை.”

நன்றி –

நட்பூ

2 comments on ““மனதை இழக்காத வரையில்…” – மணா

  1. j shanmugasundaram சொல்கிறார்:

    real superstars mgr & rajini

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s