தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு

அப்போது நான் ‘தாய்’ வார இதழில் உதவி ஆசிரியர். எம்.ஜி.ஆர். அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை அது. அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து. அப்போது எம்.ஜி.ஆர்தான் தமிழகத்தின் முதல்வர். அது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளை. எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு திங்கட்கிழமை. அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். ஆசிரியர் வலம்புரி ஜான் அறையிலிருந்த டெலிபோன் ஒலித்ததும், அவர் வரத் தாமதம் ஆகும் என்பதால் நான் போய் எடுத்துப் பேசினேன்.

எதிர்முனையிலிருந்து ஒரு குரல்

” நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்…ஆசிரியர் இருக்கிறாரா?” அந்த நொடி எனக்குள் லேசான அதிர்ச்சி. சுதாரித்துக் கொண்டு பதில் சொன்னேன்.

” இன்னும் வரலை சார்….”

” நீங்க யார் பேசறது?”

” நான் உதவி ஆசிரியர், கல்யாண்குமார்”

“சரி, கடந்த பொங்கல் தாய் சிறப்பு இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

என்னிடம் அதற்கான பதில் இல்லை. காரணம் நான் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவன். விளம்பர சம்பந்தமான விபரங்களை நான் அறிய வாய்ப்பில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு,

” ஒரு ஐந்து நிமிடம் எனக்கு நேரம் தந்தால் அதுபற்றி முழுவிபரங்களையும் விளம்பர மானேஜர் பத்மானாபனிடம் கேட்டுச் சொல்லிவிடுகிறேன்.. அவர் ஏற்கனவே வந்து விட்டார்..” என்றேன்.

“இல்லை ஆசிரியர் வந்ததும் என்னை அந்த விபரங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.” என்று நான் பதில் வணக்கம் சொல்லுமுன்னே போனை வைத்துவிட்டார்.

ஓ! திரையில் பார்த்துப் பிரமித்த ஒரு மனிதரிடம் போனில் பேசிவிட்டோம்! பிரமிப்பாகத்தான் இருந்தது எனக்கு அந்த வாரம் முழுக்க!

சற்று நேரத்தில் ஆசிரியர் வந்ததும் விபரத்தைச் சொன்னேன். அவரும் உடனடியாக அவர் கேட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு திரும்ப எம்.ஜி.ஆரிடம் பேசினார்.

விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. மறுநாள் அலுவலகம் வந்த ஆசிரியர் இன்னொரு புது விஷயத்தைச் சொன்னார்.

முதல் நாள் என்னோடு பேசுவதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆசிரியர் வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார். ஆனால் அப்போதுதான் ஆசிரியர், அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.

அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:

” ஹலோ.. யாருங்க பேசறது?” இது வேலைக்காரச் சிறுமி.

” நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்”

அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!

“அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க”

“நீங்க யார் பேசறது?”

” நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.”

“உங்க பேரு என்ன?”

“லச்சுமி”

“எந்த ஊரு?”

“தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் “

“இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?”

“மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்”

“அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.”

“உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?”

“ம்ம்ம்… நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க”

“சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?”

“ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..”

“உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?”

“ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.”

“எப்ப ஊருக்குப் போகப்போற?”

“எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..”

“சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு”

“உங்க பேரு என்ன சொன்னீங்க?”

“எம்.ஜி..ராமச்சந்திரன்”

“மறுபடி சொல்லுங்க….”

“எம்.ஜி.ராமச்சந்திரன்”

அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!

இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள். ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.

அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.!

-கல்யாண்குமார்

நன்றி –

உதயம் வலைப்பூ

12 comments on “தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு

 1. தமிழ் சொல்கிறார்:

  அவர் ஒரு வாழ்ந்த தெய்வம் அய்யா

 2. வாத்தியாரிடம் கற்றுக் கொள்ள நிறை இருக்கிறது.

 3. வேந்தன் சொல்கிறார்:

  கொடுக்கும் குணம் நிஜமான வள்ளல்கள் முகத்தையும் பார்க்கமாட்டார்கள்….இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.

 4. rajagopal சொல்கிறார்:

  avar kuduththai veda athai pathevu saitha vetham mega arumai

 5. mariappan சொல்கிறார்:

  He is living god in all tamil people.

 6. m . ravichandran சொல்கிறார்:

  வள்ளலுக்கெல்லாம் வள்ளல் எங்கள் எம்.ஜி.ஆர். என்று அவரின் ரசிகர்களாய் .. என்றென்றைக்கும் நாம் பெருமை கொள்ளலாம் – அவரைப் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றும் அதற்கு சாட்சி…

  காவிரிமைந்தன் kaviri2012@gmail.com http://thamizhnadhi.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s