முதல்வரானதும் எம்.ஜி.ஆர் ஆற்றிய முதல் உரை

எம்.ஜி.ஆர் பதவியேற்கும் போது

எம்.ஜி.ஆர் பதவியேற்கும் போது

14 பேர் கொண்ட மந்திரிசபை தமிழக முதல் அமைச்சராக அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜுன் 30 ந்தேதி பதவி ஏற்றார். 1977 சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அதைத்தொடர்ந்து, மந்திரிசபை அமைக்க எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பட்வாரி அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, கவர்னரை எம்.ஜி.ஆர். சந்தித்து, அமைச்சர்களின் பட்டியலை கொடுத்தார். அமைச்சர்களின் பெயர்களும், இலாகா விவரமும் வருமாறு:-

 • 1. எம்.ஜி.ஆர் முதல் அமைச்சர்.
 • 2. நாஞ்சில் மனோகரன் நிதி.
 • 3. நாராயணசாமி முதலியார் சட்டம்.
 • 4. எட்மண்ட் உணவு
 • 5. பண்ருட்டி ராமச்சந்திரன் பொதுப்பணி.
 • 6. ஆர்.எம்.வீரப்பன் செய்தி, பொதுமக்கள் தொடர்பு
 • 7. அரங்கநாயகம் கல்வி.
 • 8. பெ.சவுந்தரபாண்டியன் அரிஜன நலம்.
 • 9. காளிமுத்து ஊராட்சி.
 • 10. ராகவானந்தம் தொழிலாளர் நலம்.
 • 11. பொன்னையன் போக்குவரத்து.
 • 12. பி.டி.சரசுவதி சமூக நலம்.
 • 13. ஜி.குழந்தைவேலு விவசாயம்.
 • 14. கே.ராஜா முகமது கைத்தறி.

(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)

பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8.15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள். கூடியிருந்தவர்கள் “எம்.ஜி.ஆர். வாழ்க” என்று குரல் எழுப்பினர். 9.15 மணிக்கு கவர்னர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

கவர்னர் வந்ததும், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்ற மந்திரிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். கவர்னர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து கவர்னருக்கு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் கவர்னர் கை குலுக்கினார். காலை 9.15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

கவர்னர் பட்வாரி, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார்.

அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி பத்திரங்களில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டார். பின்னர், அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் பட்வாரி அமைச்சர்களுடன் “போட்டோ” படம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு கவர்னர் புறப்பட்டுச் சென்றார்.

பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் வந்திருந்தார். மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினரும் வந்திருந்தார்கள். ராஜாஜி மண்டபத்திலிருந்து திறந்த வேனில் அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மீது நின்று எம்.ஜி.ஆர். கைகூப்பி வணங்கினார். அப்போது, கூடியிருந்தவர்கள் “புரட்சித் தலைவர் வாழ்க” என்று குரல் எழுப்பினர். அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசினார். அவர் கூறியதாவது:-

அன்புக்குரிய தாய்மார்களே, மரியாதைக்குரிய பெரியவர்களே, ரத்தத்தின் ரத்தமான அன்புக்குரிய உடன் பிறப்புக்களே! நமது இதய தெய்வமான பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அங்கே நடந்தது அரசாங்க விழா. அது தவிர்க்க முடியாதது. இங்கு உங்களின் கட்டளையை எதிர்பார்த்து “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று அண்ணா சொன்னது போல் உங்கள் முன்பு நாங்கள் அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கிறோம்.

அமைச்சர்கள் சார்பாகவும், அண்ணா தி.மு.க. சார்பாக வும் தமிழ் மக்களுக்கும் பல நாடுகளில் பல மாநிலங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நான் இங்கு ஒரு செய்தியை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

மக்களின் எண்ணத்தையும், விருப்பத்தையும் சட்டமாக்கவும், தேவையை நிறைவேற்றவும்தான் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்த்தி இருக்கிறார். ஆகவே, லஞ்சமற்ற, ஊழலற்ற, நிர்வாக தலையீடு இல்லாத, நீதிமன்றத்தில் குறுக்கீடு இல்லாத “உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்” என்ற லட்சியங்களில் உயிரை கொடுத்தாலும் , வசதியை இழந்தாகிலும், எதிர்ப்புகளை எதிர்த்து நின்று கடமைகளை நிறைவேற்றுவோம் என்பதை அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன். எங்களது பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள். அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

முதல் அமைச்சர் அறையில்… பின்னர், அரசு தலைமைச் செயலகம் உள்ள கோட்டைக்கு எம்.ஜி.ஆர். காரில் சென்றார். 11.15 மணிக்கு, முதல் அமைச்சருக்கான அறைக்குச் சென்றார். அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்றார். அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்ந்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.

எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும். ஜேப்பியார் “நெருக்கடி நிலை”யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது “மிசா”வில் கைது செய்யப்பட்டார்.

மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலையானபோது, அவரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது. 1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s