முதலமைச்சராகியதும் எம்.ஜி.ஆரின் முதல் செய்தி

First_news

தமிழக முதல்வரின் சிறப்பு செய்தி

என்னை வாழவைக்கும் தெய்வங்களே!

அமரர் அம்ணாவின் சீரிய கொள்கைகளான ஊழலற்ற, லஞ்சக் கொடுமைகளற்ற, “எல்லோரும் ஓர் குலம்”, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “எல்லோரும் ஓர் நிலை, எல்லோருக்கும் ஓர் விலை” என்ற அறவழியில் நல்லாட்சி அமைய உங்கள் ஆசியுடன் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கிறேன். உயர்திரு ஓமந்தூரார், மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா போன்ற மேதைகள் இருந்து ஆட்சி செய்த இடத்தில் உங்களை மட்டும் நம்பியே அமருகிறேன்.

அமரர் அண்ணாவின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் என்னை இதுவரை ஆதரித்துத் துணைநின்றது போல் இந்த மாபெரும் பொறுப்பினை நிறைவேற்றும் போதும் எனக்குத் துணை நிற்க வேண்டுமாய் தமிழகத்து மக்களாகிய உங்களைக் கைகூப்பி வேண்டுகிறேன்.

அன்பன்,
எம்.ஜி.ராமச்சந்திரன் 30-06-1977

 

*****

எனது முகநூல் நண்பர் நல்லதம்பி என்.எஸ்.கே அவர்கள் பிரபலங்களான என்.எஸ்.கே பற்றியும், எம்.ஜி.ஆர் பற்றியும் அவ்வப்போது பலரும் அறிந்திராத செய்திகளை பகிர்ந்து கொள்வார். சில நாட்கள் முன்பு அவர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக அமர்ந்ததும் தன்னை முதலமைச்சாராக்கிய தமிழக மக்களுக்கு வெளியிட்ட சிறப்பு செய்தியை பகிர்ந்திருந்தார். அவருக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

 

அதன் பிரதியைப் படித்த போது எம்.ஜி.ஆர் புதிய கட்சியொன்றை ஆரமித்து மக்கள் செல்வாக்கால் முதலமைச்சார் ஆகியிருந்த போதும், செருக்கின்றி காங்கிரஸ் தலைவரான ராஜாஜியும், ஓமந்தூரார் பற்றியும் குறிப்பிட்டுயுள்ளார். மக்களை தனக்கு துணையாக நிற்க வேண்டுமென கைகூப்பி வேண்டுகிறார். சிற்றூரில் தாசில்தாராக இருப்பவர்களே மக்களை மதியாமல் தன்னிச்சையாக தான் என்ற மமதையுடன் செயல்படுகின்ற காலத்தில், முதலமைச்சாரக உயர்ந்த போதும் அடக்கத்துடன் மக்களை மதித்து எம்.ஜி.ஆர் எழுதிய கடிதத்தினை படிக்கும் போது இப்படியெல்லாம் கூட மனிதர்கள் வாழ்ந்துள்ளார்களே என்றே வியப்பு மேலேழும்புகிறது. அதனால்தான் மக்கள் எம்.ஜி.ஆர் மரணிக்கும் வரை மன்னனாகவே வைத்துப் பார்த்துள்ளார்கள். இனி வரும் காலங்கள் இத்தகைய மனம் கொண்டோரை நாம் காணமுடியுமா என்றே தெரியவில்லை.

 

அன்புடன்

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

Advertisements

நடிப்பிற்கான தேசிய விருது பெற்ற முதல் தமிழன் நம் எம்.ஜி.ஆர்

சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதான பாரத் விருதினை தமிழ்நாட்டில் முதன் முதலாக பெற்றவர் நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். இந்தப் பொன்னான நாளில் மக்களின் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் எம்.ஜி.ஆரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விருதினைப் பற்றி பகிர்வதில் மகிழ்வு கொள்கிறேன்.

அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.

சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்ஷாக்காரன்” படத்தில் நடித்த எம்.ஜி.ஆர், சிறந்த நடிகருக்கான தேசிய விருது (“பாரத்”) பெற்றார். எம்.ஜி.ஆர். 1971_ம் ஆண்டில் குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள் ஆகிய 4 படங்களில் நடித்தார்.

“குமரிக்கோட்டம்”, கோவை செழியனின் “கேசி பிலிம்ஸ்” தயாரிப்பு. இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்தார். சொர்ணம் வசனம் எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத் தார். டைரக்ஷன் ப.நீலகண்டன். சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த “ரிக்ஷாக்காரன்” வரலாறு படைத்த படமாகும்.

படித்த இளைஞன் ஒருவன், ரிக்ஷாக்காரனாகி சமுதாயத் தொண்டனாக உழைப்பதுதான் படத்தின் மையக்கரு. நவரசங்களும் கொண்ட கதையை எம்.ஜி.ஆருக்கு ஏற்ற வகையில் சத்யா மூவிஸ் கதை இலாகா உருவாக்க, திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பன் அமைத்தார். வசனத்தை ஆர்.கே.சண் முகம் எழுத, டைரக்ஷனை எம். கிருஷ்ணன் கவனித்தார்.

இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக மஞ்சுளா நடித்தார். மற்றும், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், “சோ”, ஐசரி வேலன், பத்மினி, ஜோதிலட்சுமி, ஜி.சகுந்தலா, ஜெய குமாரி, விஜயசந்திரிகா ஆகியோர் நடித்தனர்.

29_5_1971_ல் வெளிவந்த “ரிக்ஷாக்காரன்” பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. சண்டைக்காட்சிகள், புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில் வாலி இயற்றிய, “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு”, “பொன்னழகை சிந்தும் பெண்மை”, “ஆணிப்பொன் தேர்கொண்டு”, “கடலோரம் வாங்கிய காற்று”, அவிநாசிமணி எழுதிய “கொல்லிமலை காட்டுக்குள்ளே” ஆகிய பாடல்கள் ஹிட்டாக அமைந்தன.

சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் 142 நாட்களும், கிருஷ்ணாவில் 142 நாட்களும், சரவணாவில் 104 நாட்களும் ஓடியது.

தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. தமிழ்நாட்டில் முதன் முதலாக பாரத் விருது பெற்றவர் எம்.ஜி.ஆர்.தான்.

தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு

அப்போது நான் ‘தாய்’ வார இதழில் உதவி ஆசிரியர். எம்.ஜி.ஆர். அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை அது. அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து. அப்போது எம்.ஜி.ஆர்தான் தமிழகத்தின் முதல்வர். அது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளை. எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு திங்கட்கிழமை. அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். ஆசிரியர் வலம்புரி ஜான் அறையிலிருந்த டெலிபோன் ஒலித்ததும், அவர் வரத் தாமதம் ஆகும் என்பதால் நான் போய் எடுத்துப் பேசினேன்.

எதிர்முனையிலிருந்து ஒரு குரல்

” நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்…ஆசிரியர் இருக்கிறாரா?” அந்த நொடி எனக்குள் லேசான அதிர்ச்சி. சுதாரித்துக் கொண்டு பதில் சொன்னேன்.

” இன்னும் வரலை சார்….”

” நீங்க யார் பேசறது?”

” நான் உதவி ஆசிரியர், கல்யாண்குமார்”

“சரி, கடந்த பொங்கல் தாய் சிறப்பு இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

என்னிடம் அதற்கான பதில் இல்லை. காரணம் நான் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவன். விளம்பர சம்பந்தமான விபரங்களை நான் அறிய வாய்ப்பில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு,

” ஒரு ஐந்து நிமிடம் எனக்கு நேரம் தந்தால் அதுபற்றி முழுவிபரங்களையும் விளம்பர மானேஜர் பத்மானாபனிடம் கேட்டுச் சொல்லிவிடுகிறேன்.. அவர் ஏற்கனவே வந்து விட்டார்..” என்றேன்.

“இல்லை ஆசிரியர் வந்ததும் என்னை அந்த விபரங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.” என்று நான் பதில் வணக்கம் சொல்லுமுன்னே போனை வைத்துவிட்டார்.

ஓ! திரையில் பார்த்துப் பிரமித்த ஒரு மனிதரிடம் போனில் பேசிவிட்டோம்! பிரமிப்பாகத்தான் இருந்தது எனக்கு அந்த வாரம் முழுக்க!

சற்று நேரத்தில் ஆசிரியர் வந்ததும் விபரத்தைச் சொன்னேன். அவரும் உடனடியாக அவர் கேட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு திரும்ப எம்.ஜி.ஆரிடம் பேசினார்.

விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. மறுநாள் அலுவலகம் வந்த ஆசிரியர் இன்னொரு புது விஷயத்தைச் சொன்னார்.

முதல் நாள் என்னோடு பேசுவதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆசிரியர் வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார். ஆனால் அப்போதுதான் ஆசிரியர், அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.

அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:

” ஹலோ.. யாருங்க பேசறது?” இது வேலைக்காரச் சிறுமி.

” நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்”

அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!

“அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க”

“நீங்க யார் பேசறது?”

” நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.”

“உங்க பேரு என்ன?”

“லச்சுமி”

“எந்த ஊரு?”

“தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் “

“இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?”

“மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்”

“அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.”

“உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?”

“ம்ம்ம்… நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க”

“சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?”

“ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..”

“உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?”

“ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.”

“எப்ப ஊருக்குப் போகப்போற?”

“எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..”

“சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு”

“உங்க பேரு என்ன சொன்னீங்க?”

“எம்.ஜி..ராமச்சந்திரன்”

“மறுபடி சொல்லுங்க….”

“எம்.ஜி.ராமச்சந்திரன்”

அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!

இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள். ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.

அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.!

-கல்யாண்குமார்

நன்றி –

உதயம் வலைப்பூ

39.இளைய மகனுக்கு ஜோசியம் பார்த்த சத்திய தாய் மக்கள் திலகம் சொன்னவை

மக்கள்திலகம் அவர்கள் பேசும்போது மனிதனுடைய தலை எழுத்தை பற்றி அது எப்படி எந்த எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு என்ன என்ன நடக்கும் கணக்கு போட்டு சொல்லுபவர்களுக்கு தான் ஜோசியர் என்று சொல்லப்படுகிறது இந்த மாதிரி ஜோசியங்களை தன்னுடைய மகன்கள் பலன் எப்படி இருக்கின்றது வரும் காலம், அவன்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அந்த தாய் தெரிந்து கொள்வதில் மிக ஆர்வம் உள்ளவர். இந்த மாதிரியான காலகட்டத்தில் தன்னுடைய இளைய மகன் ராமச்சந்திரனுக்கு ஒரு பிரகாசான காலகட்டத்தில் தன்னுடைய இளைய மகன் ராமச்சந்திரனுக்கு ஒரு பரிகாசமான வாழ்க்கை ஏற்படும். மக்கள் திலகத்தின் ஜாதக பலன் எழுதப்பட்டு இருந்தது. ஜாதகம், ஜோசியம், சாமி கும்பிடுவது அந்த சாமிக்கு சிறப்பு பூஜை செய்து விரதம் இருப்பது. இப்படி எந்த விசயத்தில் ஒரு காலத்தில் ராமச்சந்திரனுக்கும் உண்டு. பிறகு, அவனுடைய வாழ்க்கையில் தாங்கி கொள்ள முடியாத சில சோதனை ஏற்பட்டது. அது தான்முதல் மனைவி தங்கமணி இறந்தது. அடுத்து இரண்டாவது மனைவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு படுக்கையில் நோயாளியாகியது. ஆனால், மக்கள் திலகத்திற்கு ஒரு பெரிய மனதிடத்தையும் நம்பிக்கையும்தான் எப்படியும் தான் வெற்றியை எட்டி பிடிக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு செயல்பட்டார்.

1958ல் அவருடைய சொந்த நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கால் உடைந்தது. இதைவிட ஒரு விசயம் மக்கள் திலகம் கூட ஒரு படத்தில் நடித்து கொண்டு இருந்த ஒரு பிரபல நடிகை கதாநாயகி நான் உங்களை உண்மையாகவே காதலிக்கிறேன். என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டது. அப்பதான் தன்னுடைய கிரகத்தைபற்றி ராமச்சந்திரன் அவர்கள் நினைக்கிறார். காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல என் வாழ்க்கையில் எவ்வளவோ சம்பவங்களை சந்தித்து நீந்தி கரை ஏறி சற்று நிம்மதியாக இருக்கிறேன். நான் உண்டு என் தொழில் உண்டு என்று இருக்கிறேன். எனக்கு மீண்டும் சோதனையா என்று நினைத்தார் மக்கள் திலகம் அவர்கள். ஆரம்பத்தில் இருந்து கடவுளிடம் எனக்கு புகழை மட்டும் கொடு வேறு எதுவும் வேண்டாம் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தார்.

தாயையும் தந்தையும் தெய்வமாய் நினைப்பவர் தந்தை தன்னுடைய மூன்றாவது வயதிலேயே இறந்துவிட்டார். அதன் பிறகு தந்தைக்கு தந்தையாகவும், தாய்க்கு தாயாகவும் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் என்னையும் என் அண்ணனையும் வளர்த்து வந்த என் தாய் சொல்லை தட்டாமல் மதித்து வந்தோம். எங்களுடைய ஒவ்வொரு வளர்ச்சிகளையும் கண்டு எங்கள் தாய் பெருமை படுவார். தந்தைக்கும், தாய்க்கும் செய்யும் கடமைகளை எங்கள் தாய்க்கு தவறாமல் செய்து வந்தோம். இதோடு எங்களுக்கு குருவாக இருந்தவர்களை வணங்காமல் இருப்பதும் இல்லை. அவர்களுக்கு ஏதாவது நன்றி கடன் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் இருப்பது இல்லை.

38.சார் நீங்கள் எது வரை படித்து உள்ளீர்கள்.

சார் நீங்கள் எது வரை படித்து உள்ளீர்கள். 1980-ல் முக்கிய நண்பர் கேட்கிறார்?

அதற்கு மக்கள்திலகம் அவர்களுடைய பதில், நான் 14வது வரை படித்துள்ளேன். ஆங்கிலம், தமிழ் இதைகேட்ட முக்கிய நபருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தார். இதை கவனித்து கொண்டு இருந்த மக்கள்திலகம் அவர்கள் என்ன சார் கேள்வியை கேட்டு விட்டு மெளனமாக இருக்கின்றீர்களே என்ன நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா என்ற உடன் அவர் சார் மன்னிக்கனும் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்டு இருக்கக்கூடாது. கேட்டு விட்டேன், என்று சொல்லி முடித்தார். உடனே மக்கள் திலகம் சார் நீங்கள் கேட்டது ஒன்றும் தப்பு இல்லை, ஒரு விசயத்தை மற்றவரிடம் தெரிந்து கொள்வதால் தவறு இல்லை. இப்போ இந்த விசயத்தைப் பற்றி நானே முழுவதையும் சொல்கிறேன். நான் மூன்றாவது தான் படித்தேன் என்று சொல்லுகிறார்.

அது தவறு நான் நான்காவது வரை படித்து உள்ளேன். அதற்கு மேல் படிக்க வசதி வாய்ப்பு இல்லை என்பது முழுக்க முழுக்க உண்மை. அதனால் நாடக கம்பெனிக்கு நடிக்க சென்றோம். கல்வி அறிவு என்பது பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து கிட்டு புத்தகங்களை படித்தால் மட்டும் அந்த அறிவு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. ஒரு மனிதன் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், எப்படியும், எங்கு இருந்தாலும் கற்றுக்கொள்ளலாம் ஒரு உதாரணம் சொல்கிறேன். பன்னிரண்டாவது வரை படித்த ஒரு மாணவன் ஒரு குற்றத்திற்காக அவனை 7 வருடம் ஜெயிலில் அடைக்கப்படுகிறான். அவன் ஜெயிலுக்குள் இருந்து கொண்டே என்ன படிக்கணுமோ அதை ஜெயில் அதிகாரிகளிடம் சொல்லி அனுமதி பெற்று ஜெயிலில் இருந்து விடுதலை ஆகிவரும்போது, படிப்பில்தேர்வு பெற்று ஜெயிலில் இருந்து விடுதலையாகி வரும்போது அவர் ஒரு வழக்கறிஞராக B.A. B.L., படிப்பில் தேர்ச்சி பெற்று விடுதலை ஆகி வெளியே வருகிறார். இது போல் என்னை போன்றவர்கள் அறையும், குறையுமாக படித்தவர்கள் நல்லா படிப்பு அறிவை பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு எனக்கு கிடைக்கும் நேரங்களில் இரவு நேரத்தில் வாத்தியார்களை வரவழைத்து கற்று கொண்டேன். 14வது படிக்கும் ஒரு மாணவன் படிக்க எழுத திறமை கொண்டவன் போல் நான் இப்போ இருக்கிறேன்.

மற்றும் ஒரு உதாரணம், தமிழ்நாட்டின் ஒரு பெரிய இந்திய அரசியல் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்அமைச்சராகவும் 10 ஆண்டுகாலம் இருந்தவர் பதவி வகித்தவர், கருமவீரர் காமராசர் அவர்கள் எத்தனாவது வரை அவர் கல்வி பயின்று உள்ளார் என்பது நாடு அறிந்த விஷயம். அதே போல் நானும் ஒருவன் என்று பெருமையாக சொல்லி கொள்ள விரும்புபவன். இதைவிட வேறு ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் கேளுங்கள் என்றார். உடனே, அவர் சார் நீங்கள் ஒரு தத்துவ மேதை எல்லாம் அறிந்த ஒரு மாமனிதர் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தான் தங்களிடம் இந்த கேள்வியை கேட்டேன். அதாவது நான் தங்களை மெதுவாக உங்களுடைய கல்வி அறிவை பற்றி தொட்டு பார்த்தேன்.

இதில் தாங்கள் பள்ளிக்கூடம் சென்று பயின்ற கல்வியை விட மிக அதிகமாக கற்று உள்ளீர்கள் அதாவது ஒரு உதாரணம் இப்போ நீங்க தமிழ் ஆங்கிலத்தை தடை இன்றி படிக்கிறீங்க. தமிழ் கொள்கைபடி தமிழை இலக்கியத்தோடு எழுதுகிறீர்கள். பேசுகிறீர்கள் இதை வைத்து பார்க்கும் போது சுமார் ஒரு பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் இலக்கியத்தோடு படித்தவராக உங்களை நாங்கள் நினைக்கிறோம். நீங்களே பலமுறை சொல்வீர்கள் “கற்றுது கை மண் அளவு கற்காதது கடல் அளவு”, இதே போல் நீங்கள் கற்றது கை அளவு அல்ல, கடல் அளவு ஆகும். உடனே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மறுத்து குறுக்கிடுகிறார். நீங்கள் என்னுடைய கல்வியை பற்றி இவ்வளவு ஆர்வத்தோடு பேசுவதால், நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். நானும் என் அண்ணனும் பள்ளிக்கூடம் சென்றுபடிக்கின்ற காலத்தில், பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லும் பாடங்களை மனதில் பதிந்து கொள்வோம். படிப்பறிவு எங்களுக்கு நல்லாவே இருந்தது. ஆனால், தொடர்ந்து எங்களால் படிக்க வசதி இல்லை, அந்த சூழ்நிலையில் தான் நானும் என் அண்ணனும் படித்தது போதும் ஏதாவது வேலை செய்வோம் என்ற எண்ணத்தோடு தான் நாங்கள் நாடக கம்பெனிகளில் நுழைந்ததோம். அப்படி நாடக கம்பெனிகளில் வேலை செய்யும் காலத்தில் நேரம் கிடைக்கும் போது ஏதாவது எங்களுக்குக் கிடைக்கின்ற புத்தகங்களை நாங்கள் படிக்க தவறுவது இல்லை எனது அண்ணன் சக்கரபாணி அவர்கள் இலங்கை கண்டியிலே ஆங்கில பள்ளியில் எனது தந்தையால் சேர்க்கப்பட்டு படித்தவர் மூன்றாவது வகுப்பு வரை படித்தவர். எங்கள் தந்தையார் பட்டபடிப்பு படித்தவர். ஆங்கிலம் அவர் கல்லூரியில் லக்சரராகவும் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாகவும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவர். இதை கருத்தில் கொண்டு தந்தையை போல் நாமும் எப்படியாவது கல்வியிலும் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டோம்.

அதன்படி நாங்கள் இருவரும் நாடக கம்பெனி சினிமா துறையிலும் பணி செய்து கொண்டு இருக்கும்காலத்தில் எங்களுக்கு நேரம் கிடைக்கின்ற போது இரவு வாத்தியார் வழியாக கல்வி பயின்றோம். அந்த விடா முயற்சிதான் இன்று எங்களுக்கு உறுதுணையாக உள்ளது என்று சொல்லி முடித்தார்.

37.தமிழ்நாட்டில் முதன் முறையாக சத்துணவு கொடுத்த நாயகன்

மக்கள் திலகம் அவர்கள் கும்பகோணத்தில் படிக்கின்ற காலகட்டத்தில், அன்றைய காலம் ஆங்கிலேயர் காலம், பள்ளிக்கூடத்தில் படிக்கிற ஏழைபிள்ளைகளுக்கு அன்றைய காலத்தில் உள்ள படிப்பு ஏட்டு சுவடி, பிறகு சிலைட்டு, மூன்றாவது புத்தங்கள் அப்படி இருக்கிற காலகட்டத்தில் கூட அரசாங்க செலவில் இவைகளை வாங்கி கொடுக்கமாட்டார்கள். பெற்றோர்கள் தான் சொந்த செலவில் வாங்கி கொடுக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் குடிதண்ணீர் பானையை கூட பிள்ளைகள் சொந்த காசில் தான் வாங்க வேண்டும். படிக்கின்ற நேரத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கூட இருக்காது. அந்த காலகட்டத்தை நினைத்து? மக்கள் திலகம் அவர்கள் தான் முதல் அமைச்சர் ஆன பிறகு இனிமேல் முன்போல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்ததை போல பள்ளி பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது! ஏற்கனவே காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக தமிழ்நாட்டில் இருக்கம் போது கிராமம் தோறும்பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். பிறகு, அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கம்பிள்ளைகளுக்கு பள்ளி கூட நாட்களில் மதிய உணவு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். அதைவிட மிக சிறப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஏழை குழந்தைகளுக்கும் சத்துணவு போட வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்தினார்.

சில மாதங்களில் இந்த குழந்தைகளுக்கு பள்ளிக்கூட நாட்கள் மட்டும் தான் உணவு கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்த முதல் அமைச்சர் அவர்கள் ஒருநாள் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து இப்படி கொடுக்கிறீர்கள் எல்லா நாட்களிலும் மதிய சாப்பாடு கொடுக்கவேண்டும் என்ற கேள்வியை கேட்கும்போது அன்றைக்கு கல்வி உயர் அதிகாரி திரு. வெங்கட சுப்பிரமணி அவர்களும், வருவாய் துறை அமைச்சரும், நீதி துறை அமைச்சரும் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து முதல் அமைச்சர் அவர்களிடம் பேசும் போது வாரம் 7 நாட்களும் மதிய சத்துணவு போட்டால் நிதி பற்றாக்குறை ஏற்படும் என்ற விளக்கத்தை கூறுகிறார்கள். இதற்கு முதல்வர் அவர்களுடைய பதில் அய்யா இந்த லீவு நாட்கள் என்பது பொதுவாக எல்லோருக்கும் உள்ளதுதான். அந்த லீவு நாட்களில் நாம் சாப்பிடாமல் இருப்பது இல்லை. எந்த செலவுகளையும் குறைத்து கொள்வதும் இல்லை. அரசாங்கத்தின் சாப்பில் சில விழாக்கள் கூட இந்த லீவு நாட்களில்தான் நாம் நடத்தி வருகிறோம். ஆனால் வயிற்றுக்கு பசிக்கு உணவு என்பது எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் தேவைபட கூடிய ஒரு விஷயம். அதனால், தமிழ் நாடு முழுவதும் ஏழை குழந்தைகளுக்கு மதியத்தில் சத்துணவு சாப்பாடு கொடுக்க வேண்டும் தயவு செய்து அரசாங்கத்தில் இதை விட ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு இந்த சத்துணவு நல்ல முறையில் தமிழ்நாடெங்கும் செயல்படுத்த வேண்டும். நான் இன்றைக்கு முதல் அமைச்சராக இருந்து கொண்டு ஏழை மக்கள் உடைய குறைகளை அறியாமல் நடந்து கொள்பவன் அல்ல. உங்களை போன்ற மற்ற அதிகாரிகளும் அமைச்சர்களும் எனக்கு உறுதுணையாக இருந்து செயல்படவேண்டும். இப்படி மக்கள் திலகம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்ற ஒரு முக்கியமான விஷயம் இது.

36.சோதனை

மக்கள் திலகம் அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு 1979ல் மதுரை மாவட்டம் சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருந்தபோது, நடந்த சம்பவம். மார்ச் மாதம் 3ம் தேதி அவரிடம் பதினைந்து வயதிலிருந்து மக்கள் திலகம் அவர்களின் தேவையான பணிகளை கவனித்து வந்தவர். சபாபதி என்பவர் வெளியூர்களுக்கு செல்லும் போது, கூடவே செல்பவர். இன்னும் சொல்லபோனால் மக்கள் திலகம் அவர்களுக்கு உதவியாளராக இருந்தவர். இப்படிபட்ட இவர் எப்போதுமே மக்கள் திலகம் அமர்ந்து செல்லும் காரில் தான் கூடவே செல்வார். இவர் மேலே குறிப்பிட்டு சொன்னபடி பழனியில் ஒரு பொதுநிகழ்ச்சியில் இரவில் கலந்து கொண்டு மதுரைக்கு திரும்பும் வழியில் அன்றைய தினம் மக்கள் திலகம் அமர்ந்து இருந்த காரில் இவருக்கு இடம் இல்லாததால் பின்னாடி வரும் காரில் ஏறி அமர்ந்து கொண்டார்.

முதல் அமைச்சர் காருக்கு முன்னும் பின்னும் போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்புக்கு போலீஸ் ஜீப் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு பின்னாடி சபாபதியும், சில அரசாங்க அதிகாரிகளும் அமர்ந்து வந்த கார் வழியில் ரோட்டில் நின்று கொண்டு இருந்த லாரிமீது மோதிகாரில் இருந்தவர்களுக்கு பலமாக அடிபட்டு இருக்கும் நேரத்தில் இந்த காருக்கு பின்னாடி வந்து கொண்டு இருந்த அரசியல்வாதிகள் கார்கள் சம்பவம் நடந்த இடத்தில் நிறுத்தி காரில் இருந்தவர்களை தன் கார்களில் அழைத்து கொண்டு மதுரை மத்திய அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

இதற்கு இடையில் மக்கள் திலகம் அவர்கள் மதுரையில் தான் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்த பிறகு, காரிலிருந்து இறங்கியவுடன் தன் உதவியாளர் சபாபதியை காணவில்லையே என்று சற்று நேரம் பார்த்துவிட்டு, தான் தங்கி இருக்கும் அறைக்கு வருகிறார். அங்கு உள்ள அரசாங்க விடுதியில் உள்ள அதிகாரிகள் அவர்களுடைய சாவியை எடுத்து வந்து அறையை திறந்து விடுகிறார்கள். அறைக்கு சென்ற பிறகு சபாபதி இன்னும் வரவில்லையே என்று மற்றவர்களிடம் கேட்கிறார். யாருக்குமே இதற்கு பதில் சொல்லமுடியாமல் சபாபதி காரை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கின்றார்கள். அது சமயம் ஒருகார் வந்து நின்றது. அந்த காரில் வந்த அரசியல்வாதிகள் வேகமாக இறங்கி தலைவர் இருக்கும் அறை எது என்று கேட்டுக்கொண்டு உள்ளே, சென்றவர்கள் மக்கள்திலகம் அவர்களிடம் போய் இந்த விபத்து நடந்த விஷயத்தை சொல்லி நாங்கள் எல்லோரையும் மதுரை மத்திய அரசு மருத்துவமனையில் சபாபதி உட்பட அனைவரையும் சேர்த்துள்ளோம், என்று சொன்னவுடன் பதட்டத்தில் மக்கள் திலகம் மனதுடிப்புடன் உடனே, அந்த மருத்துவமனைக்குச் சென்று தன் உதவியாளர் சபாபதியையும், மற்றவர்களையும் பார்க்கும் பொழுது சபாபதிக்கு காயங்கள் மிக அதிகமாக இருந்த நிலையில் சபாபதி படுக்கையில் உணர்வற்ற நிலையில் இருந்ததைப் பார்த்த மக்கள் திலகம் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். முக்கியமான டாக்டர்களிடம் இந்த விபத்தில் காயம் அடைந்த மூவரையும் நீங்கள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும். தேவையானால் சென்னையிலிருந்து மருத்துவர்களை அழைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, தான் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். வந்து தண்ணீர் குடித்துவிட்டு உணவு சாப்பிடாமல் படுத்துவிட்டார்.

அவருடைய வாழ்நாளில் 1954க்கு பிறகு வெளியூருக்கு செல்லும் போது, தனக்கு ஒரு உதவியாளர் இல்லாமல் செல்லமாட்டார். அப்படிபட்டவருக்கு 1979ல் தமிழ்நாட்டிற்கு அவர் முதல் அமைச்சராக இருந்து நாடெங்கும் நடக்கும் பொது, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வீர நடை போட்டு நடந்து கொண்டு இருந்த மாவீரனுக்கு “யானைக்கும் அடி சறுக்கும்” என்ற பழமொழி போல் அன்றுமக்கள் திலகம் அவர்களுக்கு இப்படி ஒரு சோதனை ஏற்பட்டு விட்டது. அடுத்த நாள் மதுரை மாவட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய பல நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, முதல் விமானத்தில் சென்னை வந்து சேர்ந்து விட்டார். சென்னை ராமாபுரம் தோடத்திற்கு வந்த பிறகு, அன்று முழுவதும் எங்கும் செல்லவில்லை. அடுத்து இரண்டு நாளில் சபாபதி இறந்து விட்ட செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்து சற்று நேரம் யாரிடமும் பேசாமல் இருந்துவிட்டார். பிறகு சபாபதி உடைய சடலத்தை மருத்துவ பக்குவத்துடன் சென்னைக்கு எடுத்து வர உத்தரவு இட்டார். அதன்படி, சபாபதியுடைய உடலை அ.இ.அ.தி.மு.க கட்சி தலைமை கழகத்தில் கொண்டு வந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அரசியல் மரியாதையுடன் அன்று மாலை மைலாப்பூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மக்கள் திலகம் அவர்கள் இது போன்ற எவ்வளவோ பேர்கள் சவ அடக்கத்துக்கு காரிலும், நடந்தும் சென்று உள்ளார். தன்னிடம் 1957ல் இருந்து 1979வரை தன் கூடவே இருந்து தனக்கு வேண்டிய பணிகளை செய்து வந்த ஒரு நல்ல உடன் பிறப்பை இழந்து விட்டோமே என்று மன வருத்தத்தோடு கண்ணீர் சிந்தலோடு சபாபதியுடைய உடல் அடக்கத்தின் உடலை குழியில் வைத்தபொழுது முதல் ஆளாக நின்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகிய மக்கள் திலகம் அவர்கள் மூன்று முறை கையில் மண்ணை அள்ளி குழியில் போட்டார். இது ஒரு சாதாரண விஷயம் அல்ல தன்னிடம் வேலைசெய்யும் எவ்வளவுதான் நல்ல வேலைக்காரனாக இருந்தபோதிலும் அவன் ஒரு வேலைக்காரன்தான் என்று நினைப்பவர்கள் உலகத்தில் அதிகம் பேர், ஆனால் மக்கள் திலகம் அவர்கள் அப்படி அல்ல. இது அவருடைய வரலாற்றில் ஒரு பெரிய அம்சம் ஆகும். இது போன்ற பல துன்பமான விஷயங்களை அவருடைய வாழ்க்கை நாட்களில் சந்தித்து உண்டு.