எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக நடித்த ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசனுடன் எம்.ஜி.ராமச்சந்திரன்

எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்த ஒரே படம் “முகராசி”. இதில், எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக ஜெமினி நடித்தார். 1965_ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “வல்லவனுக்கு வல்லவன்” படத்தில் ஜெமினிகணேசன் நடித்தார். வெற்றிகரமாக ஓடிய படம் இது.
ஜெமினி நடித்த “வீரஅபிமன்யு” பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம். இதில் ஜெமினிகணேசன் கிருஷ்ணனாகவும், ஏவி.எம்.ராஜன் அபிமன்யுவாகவும் நடித்தனர். தந்திர காட்சிகள் இதன் சிறப்பு அம்சம். கவிஞர் கண்ணதாசனின் “பார்த்தேன் ரசித்தேன்” என்ற பாடலுக்கு கே.வி. மகாதேவன் இசை மெருகூட்டியது.
ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடிக்க ஜெமினி நிறுவனம் தயாரித்த படம் “வாழ்க்கைப்படகு”. முதலில் வைஜயந்திமாலா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு கால்ஷீட் ஒத்து வராததால் பிறகு தேவிகா நடித்தார். நல்ல கதை அமைந்திருந்ததால் 100 நாள் ஓடிய வெற் றிப்படம்.
1965_ல் இந்தியா _பாகிஸ்தான் போர் நடந்தது. யுத்த நிதி திரட்டினார், பிரதமர் சாஸ்திரி. சென்னைக்கு வந்திருந்த அவரை ஜெமினிகணேசனும், சாவித்திரியும் சந்தித்தனர். சாவித்திரி, தான் அணிந்திருந்த நகைகளை யெல்லாம் கழற்றி சாஸ்திரியிடம் கொடுத்தார். சாவித்திரியின் தாராள மனப்பான்மையைப் பாராட்டினார், சாஸ்திரி.
தேவர் பிலிம்ஸ்சின் “முகராசி” படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் நடித்தார். இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான். நூறு நாள் ஓடிய படம்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் வேடத்தில் ஜெமினிகணேசன் வருவார். ஜெயலலிதா கதாநாயகி. சின்னப்பதேவர் தயாரித்த இப்படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கினார். இசை கே.வி.மகாதேவன். வசனம் ஆர்.கே.சண்முகம்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய “சித்தி” படத்தில் ஜெமினி நடித்தார். குடும்ப சித்திரம். முத்துராமன், பத்மினி, எம்.ஆர்.ராதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். இது 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
ஜெமினிகணேசன் _கே.ஆர்.விஜயா இணைந்து நடிக்க ஏவி.எம். உருவாக்கிய படம் “ராமு”. எம்.முருகன்_ குமரன் _ சரவணன் தயாரித்த இப்படத்தை ஏ.சி.திருலோக சந்தர் டைரக்ட் செய்தார். ஜாவர் சீதாராமன் வசனம் எழுத, எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைத்தார்.

எனக்கு குழந்தை இல்லையே – வருத்தம் கொண்ட எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் புகழுக்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த வலைப்பூவை தமிழ்மணம் நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டு தமிழ் மணத்தில் இணைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்@.

– சகோதரன் ஜெகதீஸ்வரன்.

குழந்தைகளுடன் எம்.ஜி.ஆர்

தனக்குக் குழந்தை இல்லை என்ற குறை, எம்.ஜி.ஆரின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. ஒரு சிலரிடம் மட்டும் அவர் மனம் விட்டுப் பேசுவார். அவர்களில், வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருவர். “அன்பே வா”, “பெற்றால்தான் பிள்ளையா”, “வேட்டைக்காரன்”, “தாய் சொல்லைத் தட்டாதே” உள்பட எம்.ஜி.ஆர். நடித்த 14 படங்களுக்கு வசனம் எழுதியவர்.

எம்.ஜி.ஆர். தன்னிடம் கூறியதை, பின்னர் ஒரு கட்டுரையில் ஆரூர்தாஸ் எழுதியுள்ளார். ஆரூர்தாஸ் குறிப்பிட்டிருப்பதாவது:-

“ஒரு நாள், ஒப்பனை அறையில், நாங்கள் தனித்திருந்த வேளையில் எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார்: “பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான்! அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கிறேன். இதெல்லாம் கடந்த காலத்தில். இப்போது, புகழின் உச்சியில் இருக்கிறேன். வசதிக்கு பஞ்சம் இல்லை. தினமும் என் வீட்டில் மூணு வேளையும் குறைஞ்சது அம்பது அறுபது இலைங்க விழுது. ஆனாலும் ரெண்டே ரெண்டு குறைங்களை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது.

முதலாவது, குழந்தை வாரிசு இல்லாத குறை! ”

அப்போது நான் இடைமறித்து, “ஏன்? பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க _வாரிசு இல்லை. அதனால் ஒரு குறையும் இல்லையே” என்றேன்.

“அப்படி இல்லை. நீங்க சொல்றது சரி இல்லை. காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்துனால குழந்தை இல்லை. ஆனா, எனக்கு ரெண்டு மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தைகூட பிறக்கலியே. `எந்த ஒரு புண்ணியவதியாவது என் குழந்தையை அவவயித்துல பத்து மாசம் சுமந்து பெத்து, என் கையிலே கொடுக்கமாட்டாளா அப்படிங்குற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.

ஜோதிடக் கலையில் நிபுணர்களான இரண்டு மூன்று பேர் ஒரே கருத்தைச் சொன்னார்கள். “இது பலதார ஜாதகம்! உங்கள் வாழ்க்கையில் பல பெண்கள் குறுக்கிடுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க. ஆனா அவங்க யாரும், உங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் கொடுக்கமாட்டாங்க. கொடுக்கவும் முடியாது” என்றார்கள்.

தன்னை குழந்தையை பாவிச்சிக்கும்படி `ஜானு’ (வி.என்.ஜானகி) எனக்கு ஆறுதல் சொல்லிச்சு. குழந்தையைப் பெத்துக்குடுக்க வேண்டிய மனைவியை, குழந்தையா நினைச்சுக்க முடியுமா என்ன?

என் அண்ணனுக்கு அத்தனை குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு எனக்கு ஒரே ஒரு குழந்தையைக்கூட குடுக்க மனசு வரலே பாத்திங்களா? என் உடம்புல ஓடுற அதே ரத்தந்தானே அவர் உடம்புலேயும் ஓடுது! பின்னே ஏன் இப்படி?

போகட்டும். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!

என்னுடைய இரண்டாவது குறை என்னன்னா, ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்துல கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியா பெரிசா ஒண்ணும் நான் படிச்சுத் தெரிஞ்சிக்கலே. அதுக்கு எனக்கு இளமையிலே வறுமையின் காரணமா வசதியும் வாய்ப்பும் இல்லாமல் போயிடுச்சி.

மத்தவங்க ஆங்கிலத்துலேயும், நல்ல தமிழ்லேயும் சரளமாகப் பேசி அரிய பெரிய கருத்துக்களை எடுத்துச் சொல்றதைக் கேக்கும் போதும், அண்ணா, கிருபானந்த வாரியார் இவங்களோட சொற்பொழிவைக் கேட்கும் போதும், என்னால அவங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைத்து எனக்கு நானே வருத்தப்படுவேன்.

ஆனாலும் எப்படியோ பேசிச் சமாளித்து, மத்தவங்களைச் சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும், குறை குறைதானே! அதிலேயும் பூர்த்தி செய்ய முடியாத குறை!

அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா, அதுலேயாவது, நான் பெரிய புள்ளைக்குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!”

இவ்வாறு எம்.ஜி.ஆர்.கூறியதாக ஆரூர்தாஸ் குறிப்பிட்டுள்ளார். எண்ணற்ற தமிழ் மக்கள் குழந்தையோடு மகிழ்ச்சியாக பொழுது கழிக்க நடித்தவரும், சரியான சட்டங்களை இயற்றி மகிழ்ச்சியை நிலை கொள்ள செய்தவருமான நமது எம்.ஜி.ஆரின் குறையை இறைவன், அடுத்தப் பிறவியில் நிச்சயம் நீக்கியிருப்பான்.

எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்!- எம்.ஆர்.ராதா கைது – மாலைமலர் செய்தி

“பெற்றால்தான் பிள்ளையா” படத்தொடர்பான தகராறில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். அவரை சுட்டு விட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்ட எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டார்.

1966_ம் ஆண்டில் அன்பே வா, நான் ஆணையிட்டால், முகராசி, நாடோடி, சந்திரோதயம், தாலி பாக்கியம், தனிப்பிறவி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய 9 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

“அன்பே வா” ஏவி.எம். தயாரித்து, மகத்தான வெற்றி கண்ட படம். இதில் அவருக்கு ஜோடி சரோஜாதேவி. முகராசி, தனிப்பிறவி ஆகிய இரண்டு படங்களும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டு படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.

ஆகஸ்ட் 18_ந்தேதியன்று “முகராசி”யும், செப்டம்பர் 16_ந்தேதி “தனிப்பிறவி”யும் வெளியாயின. அதாவது, ஒரு மாத இடைவெளியில், இரண்டு எம்.ஜி.ஆர். படங்களை சின்னப்ப தேவர் வெளியிட்டு, சாதனை படைத்தார். “முகராசி”க்கு ஆர்.கே.சண்முகம், “தனிப் பிறவி”க்கு ஆரூர்தாசும் வசனம் எழுதினர்.

முகராசியில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார். “நாடோடி”, பி.ஆர்.பந்துலு தயாரித்த படம். இதில் எம்.ஜி. ஆருக்கு ஜோடி சரோஜாதேவி.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய “நான் ஆணையிட்டால்…” பாடலையே தலைப்பாக வைத்து சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் படம் எடுத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. வசனத்தை வித்துவான் வே.லட்சுமணன் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். படத்தை சாணக்யா டைரக்ட் செய்தார்.

எம்.ஜி.ஆர். மாறுபட்ட வேடத்தில் நடித்த படம் “பறக்கும் பாவை”. இதில் சர்க்கஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடித்தார். ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி. ஆரின் ஜோடி சரோஜாதேவி. வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுத, ராமண்ணா டைரக்ட் செய்தார்.

ஸ்ரீமுத்துக்குமரன் பிக்சர்ஸ் சார்பில் வாசு தயாரித்த “பெற்றால்தான் பிள்ளையா” 6_12_1966_ல் ரிலீஸ் ஆயிற்று. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்த படம். கதை_ வசனத்தை ஆரூர்தாஸ் எழுத, இசை அமைத்தது எம். எஸ்.விஸ்வநாதன். டைரக்ஷன்: கிருஷ்ணன் பஞ்சு.

“பெற்றால்தான் பிள்ளையா” படத்தில், எம்.ஜி.ஆர். ஓர் அனாதை; குடிசையில் வசிப்பவர். அசோகன் வில்லன். அவர் சவுகார் ஜானகியை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி, குழந்தை பிறந்ததும் கைவிட்டு விடுவார். கேட்பாரற்று கிடந்த குழந்தையை எம்.ஜி.ஆர். எடுத்து வளர்ப்பார்.

எம்.ஆர்.ராதாவும் சிவாஜியும்

எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எதிர் வீட்டில், எம்.ஆர்.ராதா வசிப்பார். அவர் ஒரு வித்தைக்காரர். அவருடைய தங்கை சரோஜாதேவி. எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் காதல் ஏற்படுகிறது. கே.ஏ.தங்கவேலு, பொம்மை வியாபாரி. தன் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி, இவரிடம் சவுகார் ஜானகி கேட்டுக்கொள்வார். தங்கவேலுவும், போலீஸ்காரர் டி.எஸ்.பாலையாவும் சிரமப்பட்டுத் தேடி குழந்தையைக் கண்டு பிடித்து விடுவார்கள். ஆனால், குழந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட எம்.ஜி.ஆர்., அதைக் கொடுக்க மறுத்துவிடுவார்.

இதற்கிடையே அசோகன் ஒரு விபத்தில் கால் இழந்து, மனம் திருந்தி, சவுகார் ஜானகியிடம் போய்ச்சேருவார். குழந்தை யாருக்குச் சொந்தம் என்ற விஷயம், கோர்ட்டுக்கு போகும். “குழந்தை, பெற்றோருக்குத்தான் சொந்தம்” என்று கோர்ட்டு தீர்ப்பு கூறும்.

குழந்தையை, பெற்றோரிடம் எம்.ஜி. ஆர். கொடுக்கும்போது துயரம் மிகுதியால் கண்ணீர் வடிப்பார். குழந்தையைப் பெற்றுக்கொண்டு சவுகார் ஜானகி புறப்படும்போது, குழந்தை “அப்பா!” என்றபடி, எம்.ஜி.ஆரை நோக்கி தாவும். _ இதுதான் “பெற்றால்தான் பிள்ளையா” படத்தின் கதை. இந்தப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

12_1_1967 அன்று தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான “தாய்க்கு தலைமகன்” ரிலீஸ் ஆனது. இதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். வசனம் ஆரூர்தாஸ். இசை: கே.வி.மகா தேவன். டைரக்ஷன்: எம்.ஏ. திருமுகம்.

அன்று மாலை, “எம்.ஜி. ஆரை எம்.ஆர்.ராதா சுட்டு விட்டார்” என்ற செய்தி, எரிமலை வெடித்தது போல் வெளியாகியது. தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீ போல் இச்செய்தி பரவியது. மக்கள் உறைந்து போனார்கள்; சினிமா தியேட்டர்களும், கடைகளும் மூடப்பட்டன. பஸ்களும், ரெயில்களும் ஓடவில்லை. தமிழ்நாடே ஸ்தம்பித்தது.

நன்றி-

மாலைமலர்

ராஜகுமாரி – எம்.ஜி.ஆர் கதைநாயகனாக நடித்த முதல் படம்

ஜூபிடர் நிறுவனம் “ராஜகுமாரி” என்ற படத்தை தொடங்கியது. மாலதி, தவமணி தேவி ஹீரோயின்கள். சோமசுந்தரம், மொய்தீன் இணைந்து தயாரித்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி, வசனம் எழுதி இயக்கி இருந்தார். உதவி வசனம், முதல்வர் கருணாநிதி. ஹீரோவாக நடித்தது யார் தெரியுமா?

எம்.ஜி.ஆர்தான்.

முதன் முதலாய் கதாநாயகன்

ஜூபிடர் நிறுவனம் தயாரித்த பல படங்களில் சிறு வேடங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். தொடர்ந்து சிறு வேடங்களிலேயே நடிக்கிறோமே என அவர் வருத்தப்பட்டதில்லை. என்றாவது ஒருநாள் நாமும் கவனிக்கப¢படுவோம். மக்களால் அங்கீகரிக்கப்படுவோம் என எம்.ஜி.ஆர். நம்பினார். சினிமா மீதான ஆர்வம், தனது பணியில் கடும் உழைப்பு, நேர்மை இவைகள்தான் அவரை திடீர் ஹீரோவாக்கியது. பறக்கும் குதிரை பற்றிய
வித்தியாசமான படமிது. “ராஜகுமாரி” ரிலீசானபோது இயக்குநர், தயாரிப்பாளர்களைவிட எம்.ஜி.ஆர். படபடப்பாக இருந்தார். படம் மக்களுக்கு பிடிக்குமா? தன்னை ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்களா என பயந்தபடி இருந்தார். “ராஜகுமாரி” படம் ஹிட்டானது. எம்.ஜி.ஆருக்கு நல்ல பெயரை படம் பெற்றுத் தந்தது. ஆனாலும் அவருக்கு ஹீரோ வேடங்கள் தொடர்ந்து கிடைக்கவில்லை.

காந்தி மீது மிகுந்த பக்தி கொண்டவர் ஏ.கே.செட்டியார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காந்தியுடன் பழகிய அவர், பல்வேறு மாநிலங்களுக்கு காந்தி சென்றபோது அதை படம் பிடித்தார். காந்தியின் ஒரு லட்சம் மைல் பயணத்தை அவர் 100 கேமராமேன்களை கொண்டு படம் பிடித்தார். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கேமராமேன் விதம், அவர் இதை செய்தார். மூன்று ஆண்டுகளாக தயாரான டாக்குமென்ட்ரி படமிது. 50 ஆயிரம் அடியில் இந்த படம் உருவாகி இருந்தது. இதை 10 ஆயிரத்து 500 அடியாக ஏ.கே.செட்டியார் குறைத்தார். “அகிம்சா யுத்தம்” என்ற பெயரில் 1948ம் ஆண்டு நவம்பரில் இப்படத்தை ரிலீஸ் செய்தார். தா.நா.குமாரசாமி வசனங்களை எழுதியிருந்தார். ஏ.கே.செட்டியார், இயக்கம். டாக்குமென்ட்ரி படம் என்பதால் ரசிகர்களை இது கவரவில்லை.

சூப்பர் ஹீரோ - பாகவதர்

பாகவதர் நடித்து, தயாரித்து வந்த “ராஜமுக்தி” ரிலீசுக்கு தயாராகி வந்தது. இதில் பாகவதருடன் சேர்ந்து பின்னணி பாடியது எம்.எல்.வசந்தகுமாரி. இவர் நடிகை ஸ்ரீவித்யாவின் அம்மா. இளம் வயதிலேயே பல கச்சேரிகளில் பாடியவர். அவரது குரலை கேட்டு ரசித்த பாகவதர், அவரை பின்னணி பாட வைத்தார். இதில் ஹீரோயினாக நடித்தது பானுமதி. வி.என்.ஜானகி, செருகளத்தூர் சாமா, எம்.ஜ¤.ஆர்., பி.எஸ். வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி ஆகியோரும் நடித்தனர். இதில் பாகவதரின் நண்பரான என்.எஸ்.கே. ஏன் நடிக்கவில¢லை என பலரும் கேள்வி எழுப்பினர். வழக்கமாக பாகவதரின் அனைத்து படங்களிலும் அவர் இடம்பெறுவார். இதில் இல்லை. அதற்கு காரணம், “சந்திரலேகா” படத்துக்கு ஏற்கெனவே கால்ஷீட் ஒதுக்கியிருந்தார் என்.எஸ்.கே. அதனால் இதில் நடிக்க முடியவில்லை. பட ஷூட்டிங் நடக்கும்போதே பாகவதருக்கு வேண்டாதவர்கள் புரளியை கிளப்பிவிட்டனர். அதாவது, பாகவதரின் குரல் மாறிவிட்டது. பழைய இனிமை இல்லை என்பதுதான் அது.

ஆனால், இதையே படத்தின் விளம்பரத்துக்காக எதிர்மறையாக யோசித்தார் ஏவி.மெய்யப்ப செட்டியார். அவர் தயாரிக்காவிட்டாலும் இப்படத்தின் பாடல்களை வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார். வழக¢கமாக படம் ரிலீசாகும்போதுதான் அப்போது கிராம்போன் ரெக்கார்டுகள் வெளியாகும். ஆனால், “ராஜமுக்தி” ரிலீசுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே அதன் பாடல் ரெக்கார்டுகளை செட்டியார் வெளியிட்டார். பாகவதரின் குரலில் இருந்த இனிமை, துளியும் மாறவில்லை. பாடல் ரெக்கார்டுகள் விற்பனை சூடு பிடித்தது. பாடல்கள் ஹிட்டும் ஆனது. அதுவே படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டியது. ஆனால், கதை சரியில்லாததால் ஒரு மாதம் கழித்து ரிலீஸான இப்படம் ஓடவில்லை.

கே.ஜி. புரொடக்ஷன்ஸ் சார்பில் கிருஷ்ண கோபால் தயாரித்து இயக்கிய படம், இது நிஜமா? கதை மற்றும் இசை, வீணை எஸ்.பாலசந்தர். அப்போது பாலசந்தர் வீணை கற்றதில்லை. வெறும் பாலசந்தர் என்றுதான் அழைக்கப்படுவார். இதில் ஹீரோவாக நடித்ததும் அவரே. இரட்டை வேடம். அண்ணன், தம்பியாக நடித்தார். அவர் பணியாற்றிய முதல் படமிது. பிரபலமாக இருந்த இசை கலைஞி ராஜம், ஹீரோயின். டி.கே.பட்டம்மாளும் நடித்திருந்தார். படம் சக்கை போடு போட்டது. பாலசந்தருக்கு பாராட்டுகள் குவிந்தன. அவரது கதையமைப்பு பாணி பலருக்கும் பிடித்திருந்தது. இதனால் மும்பையை சேர்ந்த அஜீத் பிக்சர்ஸ் என் கணவர் படத்துக்கு வீணை பாலசந்தரை ஒப்பந்தம் செய்தது. அவர் மீது இருந்த நம்பிக்கை காரணமாக டைரக்ஷன் பொறுப்பும் பாலசந்தரிடமே ஒப்படைத்தனர். இசை, டைரக்ஷனுடன் எடிட்டிங் பணியும் அவரே மேற்கொண்டார். இதில் அவருக்கு ஜோடியாக நடித்தது இந்தி பட நாயகி நந்தினி. டி.கே. பட்டம்மாளும் நடித்திருந்தார். இந்த படமும் வெற்றி பெற, வீணை பாலசந்தர் பிரபலம் ஆனார்.

இந்த நேரத்தில்தான் தமிழ் சினிமாவின் மகா பட்ஜெட் படம் ரிலீசானது. 5 ஆண்டுகளாக உருவான படம் இது. படப்பிடிப்பு நடக்கும்போதே 3 மில்லியன் டாலர் செலவில் உருவாகும் படம் என விளம்பரம் செய்யப்பட்டது. அதாவது ரூ.30 லட்சம் செலவில். அப்போது எந்த படத்துக்கும் இவ்வளவு செலவு செய்யப்பட்டதில்லை. இந்த படம் பைனான்ஸ் பிரச்னையால் இடையில் ஷூட்டிங் நின்றது. அப்போது தயாரிப்பாளரின் அம்மாதான் படம் முழுமை பெற உதவினார்.

எம்.ஜி.ஆர் பானுமதி நடிப்பில் “மலைக்கள்ளன்” – ஒரு பார்வை

“மருதநாட்டு இளவரசி”க்குப்பின், “அந்தமான் கைதி”, “மர்மயோகி” ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இந்த இரண்டு படங்களும் 1951_ல் வெளிவந்தன. “அந்தமான் கைதி”யின் கதை, வசனம், பாடல்களை கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்தார். டி.கே.எஸ். சகோதரர்கள் மேடையில் நடித்த வெற்றி நாடகம். இதில் குணச்சித்திர வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். இப்படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது.

“மர்மயோகி” ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலிதேவி நடித்தார்.

“ராபிஹுட்” ஆங்கில படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட இப்படத்தில், கதாநாயகன் கரிகாலனாக எம்.ஜி.ஆர். பிரமாதமாக நடித்தார். “கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான்; தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்” என்று வசனம் பேசி, பல வீர தீரச் செயல்களைச் செய்தார்.

ஒரு கட்டத்தில், நாற்காலியை காலால் உதைத்து, அது தன்னிடமே வருமாறு செய்து, அதில் உட்கார்ந்து அஞ்சலிதேவியை சந்திப்பார். அக்கட்டம் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றது. சுருக்கமாகக் கூறினால், இந்தப் படத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் புகழ், மேலும் ஒரு படி உயர்ந்தது.

செருகளத்தூர் சாமா, மர்மயோகியாகத் தோன்றி, ரசிகர்களை பயமுறுத்தினார். அதனால் இப்படத்துக்கு “ஏ” சர்டிபிகேட் (“வயது வந்தோருக்கு மட்டும்”) கொடுக்கப்பட்டது. தமிழில் “ஏ” சர்டிபிகேட் பெற்ற முதல் படம் இதுதான்.

1952_ல், எம்.ஜி.ஆர். நடித்த “குமாரி”, “என் தங்கை” ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் “என் தங்கை” அருமையான படம். பிற்காலத்தில் சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த “பாசமலர்” எப்படி அண்ணன் _ தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டும் காவியமாக அமைந்ததோ, அது போன்ற உன்னதமான படம் “என் தங்கை.”

இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி கிடையாது. பார்வை இழந்த தன் தங்கையின் (ஈ.வி.சரோஜா) எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகியாக எம்.ஜி. ஆர். நடித்தார். பல சோதனைகளுக்குப் பின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமண ஏற்பாடுகள் செய்வார், எம்.ஜி.ஆர். கடைசி நேரம். எதிர்பாராதவிதமாக தங்கை இறந்து விடுவாள்.

தங்கையின் உடலை தோள் மீது போட்டுக்கொண்டு கடற்கரையில் நடப்பார், எம்.ஜி.ஆர். அவரைக் காப்பாற்றுவதற்காக பி.எஸ்.கோவிந்தன் தன் காதலியுடன் ஓடுவார். ஆனால், கடற்கரை சாலையில் நடக்கும் எம்.ஜி.ஆர், கடல் மணலில் வேகமாக நடப்பார். பி.எஸ்.கோவிந்தன் காப்பாற்றுவதற்குள், கடலில் இறங்கி விடுவார், தங்கையின் உடலுடன்!

இந்தக் காட்சியைப் பார்த்த பெண்கள் கதறினார்கள்; ஆண்கள் கண்கலங்கினார்கள். “மருதநாட்டு இளவரசி” போல இதிலும் எம்.ஜி.ஆருக்கு சாதாரண உடை. நாலு முழ வேட்டி, கட்டம் போட்ட சட்டை. படம் முழுவதும் இந்தத் தோற்றத்தில்தான் எம்.ஜி.ஆர். வருவார்.

பெண்களின் கண்ணீர் வெள்ளத்தில், வெற்றிநடை போட்ட படம் “என் தங்கை.” இதற்கிடையே, கருணாநிதி, எம்.ஜி.ஆர், டைரக்டர் காசிலிங்கம், பி.எஸ்.வீரப்பா ஆகியோர் சேர்ந்து “மேகலா பிக்சர்ஸ்” என்ற படக்கம்பெனியைத் தொடங்கினர்.

இந்த நிறுவனத்தின் முதல் படம் “நாம்”. இதில் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் இணைந்து நடித்தனர். (ஜானகி, கடைசியாக நடித்த படம் இதுதான்.) கதை_ வசனத்தை கருணாநிதி எழுதினார். எம்.ஜி.ஆர். “பாக்சர்” வேடத்தில் சிறப்பாக நடித்தார்.

பானுமதியுடன் எம்.ஜி.ஆர்

1954_ம் ஆண்டு ஜுலை 22_ந்தேதி வெளிவந்த படம் “மலைக்கள்ளன்”, எம்.ஜி.ஆரை “சூப்பர் ஸ்டார்” அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்தப்படம், கோவை பட்சிராஜா ஸ்டூடியோ தயாரிப்பு. பட்சி ராஜா அதிபர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு டைரக்டர் செய்தார். பொதுவாக பட்சிராஜா ஸ்டூடியோ அதிகப் படங்களைத் தயாரிப்பதில்லை. ஆனால் தயாரிக்கும் படங்கள் `சூப்பர் ஹிட்’ படங்களாக அமைவது வழக்கம். பாகவதர் நடித்த “சிவகவி”, பி.யு.சின்னப்பா நடித்த “ஆர்யமாலா”, “ஜகதலபிர தாபன்” ஆகியவை பட்சிராஜா தயாரிப்புதான்.

அதேபோல, “மலைக்கள்ள”னும், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படம் தயாரானதில் ஒரு சுவையான பின்னணி உண்டு.

“மலைக்கள்ளன்”, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். “பராசக்தி” வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. “மனோகரா” படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

“நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்” என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார்.

இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். “மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்” என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.

உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். “நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளனில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

(1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)

கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.

கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய_ இனிய நடையில் எழுதியிருந்தார்.

எம்.ஜி.ஆரும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.

மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகா தேவன், சந்தியா, சுரபி பால சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரராக வந்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.

மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை “மலைக்கள்ளன்” பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக்கதை தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் இந்தியில் திலீப்குமார் நடித்தார்.

எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே நடித்தனர். “மலைக்கள்ளன்” 6 மொழிகளிலும் மகத்தான வெற்றி பெற்றான்.

எம்.ஜி.ஆரின் கதாநாயகிகள் – பானுமதி

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் “ராஜ குமாரி” (1947). அதன் பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். என்றாலும் அவருடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வசூல் மன்னன் என்ற பெயரை வாங்கித்தந்த படம் “மலைக் கள்ளன்.”

கோவை பட்சிராஜா ஸ்டூடியோவில், ஸ்ரீராமுலு நாயுடு டைரக்ஷனில் உருவான இப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி பானுமதி. 22_7_1954_ல் வெளிவந்த இந்தப்படம், மகத்தான வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது.

எம்.ஜி.ஆரும், பானுமதியும் இணைந்து நடிப்பதற்கு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. எனவே “மதுரை வீரன்”, “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்”, “தாய்க்குப்பின் தாரம்” முதலான படங்களில் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடித்தார்கள். எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்த “நாடோடி மன்னன்” படத்திலும், பானுமதிதான் கதாநாயகி.

பானுமதியுடன் எம்.ஜி.ஆர்

கலைஞர் கருணாநிதி வசனம் எழுத, மேகலா பிக்சர்ஸ் தயாரித்த “காஞ்சித் தலைவன்” படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் இணைந்து நடித்தனர். இந்தப் படத்தின் தொடக்க விழாவில் அறிஞர் அண்ணா பேசுகையில், “நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் பானுமதி” என்று குறிப்பிட்டார்.

சிவாஜிகணேசனும், பானுமதியும் இணைந்து நடித்த முதல் படம் “கள்வனின் காதலி.” இது, “கல்கி” எழுதிய கதை. 1955_ல் வெளிவந்த படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது என்றாலும், சிவாஜி, பானுமதி இருவரும் போட்டி போட்டு நடித்தனர்.

இதன்பின், பானுமதியின் சொந்தப் படமான “மணமகன் தேவை”யில் சிவாஜி நடித்தார். தொடர்ந்து, “மக்களைப் பெற்ற மகராசி”, “ராணி லலிதாங்கி” முதலிய படங்களில் சிவாஜியும், பானுமதியும் நடித்தனர்.

அறிஞர் அண்ணா எழுதிய கதையான “ரங்கூன் ராதா”வை, மேலகா பிக்சர்ஸ் படமாக எடுத்தது. வசனத்தை கலைஞர் கருணாநிதி எழுதினார்.

இந்தப்படத்தில் கொடுமைக்கார கணவனாக சிவாஜிகணேசனும், சித்திரவதை அனுபவிக்கும் மனைவியாக பானுமதியும் நடித்தனர். `நடித்தனர்’ என்பதைவிட, அந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினர் என்பதே சரியாகும். அந்த ஆண்டின் சிறந்த நடிகராக சிவாஜியும், சிறந்த நடிகையாக பானுமதியும் இப்படத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது பெற்றனர்.

சிவாஜி _ பானுமதி இணைந்து நடித்த இன்னொரு நல்ல படம் “அம்பிகாபதி.” இது ஏ.எல்.எஸ். தயாரிப்பு. படம் மிகப்பெரிய வெற்றி பெறாவிட்டாலும், நடிப்பும், பாடல்களும் சிறப்பாக இருந்தன. “சதாரம்”, “கட்டிலா தொட்டிலா” உள்பட சில படங்களில், ஜெமினிகணேசனுடன் பானுமதி நடித்துள்ளார்.

பானுமதியின் நடிப்பு உன்னதமாக அமைந்த படங்களில் ஒன்று ஏவி.எம். தயாரிப்பான “அன்னை.” 1962_ல் வெளிவந்த இந்தப் படத்தை கிருஷ்ணன் _பஞ்சு டைரக்ட் செய்தனர். வசனம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

பானுமதி, குழந்தை இல்லாத தாயாக நடித்தார். இப்படத்தில் பானுமதியின் தங்கை சவுகார் ஜானகி. அவருடைய குழந்தையை பானுமதி எடுத்து வளர்ப்பார். தான்தான் அசல் தாய் என்பதை எந்த சமயத்திலும் வெளியிடக்கூடாது என்று சவுகார்ஜானகியிடம் சத்தியம் வாங்கிக்கொள்வார். பையன் பெரியவனான பிறகும், பானுமதியைத்தான் தாய் என்று நினைத்துக்கொண்டிருப்பான்.

பையனுடைய அசல் தந்தை இறந்து விடுவார். அந்த சமயத்தில், உண்மை வெளிப்பட்டு விடுமோ என்று பானுமதி தவியாய் தவிப்பார். தாய்ப்பாசம் என்ன என்பதை எடுத்துக்காட்டும் வகையில், பானுமதியின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. படம் பெரிய வெற்றி பெற்றது.

இதே கதையை, ஏவி.எம். இந்தியில் “லாட்லா” (செல்லமகன்) என்ற பெயரில் இந்தியில் எடுத்தார். பானுமதி நடித்த வேடத்தில் நிரூபாராய் நடித்தார். அந்தப்படம் தோல்வி அடைந்தது. காரணம் பானுமதியைப்போல் நிரூபாராயால் நடிக்க முடியவில்லை!

ஆரூர்தாஸ் கதை_ வசனம் எழுதிய “பத்துமாத பந்தம்” என்ற படத்தில், பானுமதியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர். நடிகைகளில் சொந்த ஸ்டூடியோ நடத்தியவர் பானுமதிதான். மகன் பரணி பெயரால் இந்த ஸ்டூடியோ இயங்கி வந்தது.

பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகிய தமிழக சூப்பர் ஸ்டார்கள் 5 பேருடன் இணைந்து நடித்தவர், பானுமதி ஒருவர்தான்.

திரை உலகில் மிகப்பெரும் சாதனையாளராக விளங்கி வரும் பானுமதி, “டாக்டர்” பட்டம் பெற்றவர். தமிழக அரசின் இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்துள்ளார். 1969_ல், மத்திய அரசு இவருக்கு “பத்மஸ்ரீ” விருது வழங்கியது.

தெலுங்கில் சிறந்த எழுத்தாளராகவும் பானுமதி விளங்கினார். “அத்தை காரு” என்ற இவருடைய நாவல் மிகப் புகழ் பெற்றது. பானுமதியின் குரல் மிகவும் இனிமையானது. தென்னாட்டு நடிகைகளில், கடைசி வரை பாடி நடித்தவர் பானுமதிதான்.

பானுமதியின் ஒரே மகனான பரணி, டாக்டராக அமெரிக்காவில் சில காலம் பணியாற்றினார். அப்போது அவரைக்காண அமெரிக்கா சென்ற ராமகிருஷ்ணா, அங்கு காலமானார். வடபழனியில் இருந்த பரணி ஸ்டூடியோ, இப்போது மருத்துவமனையாக மாற்றப்பட்டு விட்டது. அதை பரணி நிர்வாகிக்கிறார்.

நடிப்பு, பாட்டு, படத்தயாரிப்பு, டைரக்ஷன், கதை_வசனம் என்று பல துறைகளிலும் திறமை பெற்ற பானுமதி, அஷ்டாவதானி என்று போற்றப்படுகிறார்.

ஜானகியுடன் எம்.ஜி.ஆரின் காதலும் கல்யாணமும்

1950_ம் ஆண்டு வெளிவந்த “மருதநாட்டு இளவரசி”யைத் தொடர்ந்து, வி.என்.ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக எம்.ஜி.ஆர். ஏற்றார். “ராஜகுமாரி”க்குப்பிறகு, “அபிமன்யூ” என்ற படத்தை ஜுபிடர் பிக்சர்சார் தயாரித்தனர். இந்தப் படத்தில் எஸ்.எம். குமரேசனும், அவருடைய ஜோடியாக யு.ஆர்.ஜீவரத்தினமும் நடித்தனர்.

அபிமன்ïவின் தந்தை அர்ஜூனனாக எம்.ஜி.ஆர். நடித்தார். படத்தின் பிற்பகுதியில்தான் அவர் வருவார். எனினும், நடிப்பு சிறப்பாக இருந்தது. மற்றும் நரசிம்மபாரதி, எம்.ஜி. சக்ரபாணி, நம்பியார், கே.மாலதி, எம்.ஆர்.சந்தான லட்சுமி ஆகியோரும் நடித்தனர்.

“அபிமன்யு”வின் வசனங்களை கருணாநிதிதான் எழுதினார். என்றாலும், படத்தில் அவர் பெயர் இடம் பெறவில்லை. திரைக்கதை_ வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது. இந்தப் படத்தை எம்.சோம சுந்தரமும், ஏ.காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர்.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்து, லண்டனில் உள்ள பிரிவுகவுன்சில் (வெள்ளையர் ஆட்சியின்போது உச்சநீதி மன்றம்) வரை சென்று விடுதலையான எம்.கே.தியாகராஜ பாகவதர், “ராஜமுக்தி” என்ற படத்தை தயாரித்தார். படப்பிடிப்பு புனா நகரில் நடந்தது.

இதில் பாகவதரும், வி.என்.ஜானகியும் ஜோடியாக நடித்தனர். பாகவதருக்கு அடுத்த வேடத்தில், தளபதியாக எம்.ஜி.ஆர். நடித்தார். வில்லி போன்ற வேடத்தில் பி.பானுமதி நடித்தார். அவர் நடித்த முதல் தமிழ்ப்படம் இதுதான்.

ஜானகி ராமச்சந்திரன்! என்னே ஒரு பெயர் பொருத்தம்!

இந்தப்படத்தில் நடிக்கும்போது, எம்.ஜி.ஆரும், வி.என். ஜானகியும் முதன் முதலாக நேரில் சந்தித்துக் கொண்டனர். ஜானகியை எம்.ஜி.ஆர். ஏற்கனவே படத்தில் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணி போல ஜானகி இருந்தது அவருக்கு வியப்பளித்தது. நேரில் சந்தித்தபோது அசந்தே போனார். பார்கவியின் அசல் அச்சு போலவே ஜானகி காட்சி அளித்தார்.

இதன் காரணமாக, இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஒருவர் மனதில் ஒருவர் இடம் பெற்றனர். இதே சமயத்தில், ஜுபிடரின் “மோகினி” படத்தில் எம்.ஜி. ஆரும், ஜானகியும் ஜோடியாக நடித்தனர்.

1948 அக்டோபர் 9_ந்தேதி “ராஜமுக்தி”யும், அதே மாதம் 31_ந்தேதி “மோகினி”யும் ரிலீஸ் ஆயின. இதில் “ராஜமுக்தி” தோல்வி அடைந்தது. “மோகினி” வெற்றி பெற்றது.

பின்னர், கோவிந்தன் கம்பெனி தயாரித்த “மருதநாட்டு இளவரசி”யில், எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் இணைந்து நடித்தனர். மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, சி.கே.சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். கதை, வசனத்தை மு.கருணா நிதி எழுதினார். ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்தில் வி.என். ஜானகி மருதநாட்டின் இளவரசி. அவர், சாதாரண இளைஞனான எம்.ஜி.ஆரை காதலிப்பார். அவர் இளவரசி என்று எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. அதனால் அவரும் காதலிப்பார். எம்.ஜி.ஆருக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார், ஜானகி!

அரசருக்கு எதிராக, அரசனின் இளைய மனைவியின் சகோதரன் திட்டம் தீட்டுவான். அதை எம்.ஜி.ஆரும், ஜானகியும் சேர்ந்து முறியடிப்பார்கள். இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். ஒரு வேட்டி மட்டும் அணிந்து சாதாரண குடிமகனாக நடிப்பார். படம் முழுவதும் இந்த ஒரே உடைதான்!

கருணாநிதியின் வசனம் அருமையாக அமைந்தது. எம்.ஜி. ஆரும், ஜானகியும் சிறப்பாக நடித்திருந்தனர். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டைகள் ரசிகர்களைக் கவர்ந்தன. படம் வெற்றி பெற்றது.

மருதநாட்டு இளவரசி 1950_ல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, ஜானகியை தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்க எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். அதற்கு முன் மனைவியின் சம்மதத்தைப் பெற எண்ணினார்.

ஜானகியை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று, மனைவி சதானந்தவதியிடம் அறிமுகம் செய்து வைத்தார். சதானந்தவதியை, “அக்கா” என்றே அழைத்தார், ஜானகி. இருவரும் சகோதரிபோலவே பழகினார்கள்.

நாளடைவில், எம்.ஜி.ஆர். மனதில் ஜானகி இடம் பெற்றிருப்பதை சதானந்தவதி தெரிந்து கொண்டார். கணவரை ஒரு நாள் அழைத்து, “வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருந்து வருகிறேன். என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. என் தங்கையை (ஜானகி) நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

இதைக்கேட்டு எம்.ஜி.ஆர். கண்கலங்கினார். “நீ மனப் பூர்வமாகத்தான் சொல்கிறாயா?” என்று கேட்டார். “மனப்பூர்வமாகத்தான் கூறுகிறேன். ஜானகியை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஆனால், நானும், ஜானகியும் ஒரே வீட்டில் இருக்கவேண்டாம். அவளுக்குத் தனி வீடு பார்த்து குடிவையுங்கள்” என்றார், சதானந்தவதி.

மனைவியின் பூரண சம்மதத்துடன், ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார், எம்.ஜி.ஆர். பாகவதர்_ சின்னப்பா காலத்தில் பெரிய பாடல் ஆசிரியராகத் திகழ்ந்த பாபநாசம் சிவனின் அண்ணன் பி.ஆர். ராஜகோபாலய்யரின் மகள்தான் வி.என்.ஜானகி. (வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கமே வி.என்.ஜானகி)

எம்.ஜி.ஆர். சாதாரண வேடங்களில் நடித்து வந்த காலக்கட்டத்திலேயே அவர் கதாநாயகியாக புகழ் பெற்று விளங்கினார். எம்.ஜி.ஆரை விட அதிக சம்பளம் வாங்கி வந்தவர். எனினும், எம்.ஜி.ஆரை மணந்தபின் நடிப்பதை நிறுத்திவிட்டார். கணவரின் சாதனைகளுக்கு துணை நின்றார்.

எம்.ஜி.ஆருக்கு கிடைசிறப்பு விருதுகளும் பட்டங்களும்

நமது எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

எம்.ஜி.ஆர் ஐ.கே.குஜராலிடம் விருது வாங்குகிறார்

விருதுகள் –

1. பாரத் விருது – இந்திய அரசு
2. அண்ணா விருது – தமிழ்நாடு அரசு
3. பாரத ரத்னா விருது – இந்திய அரசு
4. பத்மஸ்ரீ விருது – இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
5. சிறப்பு டாக்டர் பட்டம் – அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
6. வெள்ளியானை விருது – இந்திய சாரணர் இயக்கம்.

திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் –

  1. இதயக்கனி – அறிஞர் அண்ணா
  2. புரட்சி நடிகர் – கலைஞர் மு. கருணாநிதி
  3. நடிக மன்னன் – சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
  4. மக்கள் நடிகர் – நாகர்கோவில் ரசிகர்கள்
  5. பல்கலை வேந்தர் – சிங்கப்பூர் ரசிகர்கள்
  6. மக்கள் கலைஞர் – காரைக்குடி ரசிகர்கள்
  7. கலை அரசர் – விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
  8. கலைச்சுடர் – மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
  9. கலை மன்னர் – நீதிபதி ராஜமன்னார்
  10. கலை மன்னன் – சென்னை ரசிகர்கள்
  11. கலை வேந்தர் – மலேசிய ரசிகர்கள்
  12. திரை நாயகன் – சேலம் ரசிகர்கள்

பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் –

1. கொடுத்து சிவந்த கரம் – குடந்தை ரசிகர்கள்
2. கலியுகக் கடவுள் – பெங்களூர் விழா
3. நிருத்திய சக்கரவர்த்தி – இலங்கை ரசிகர்கள்
4. பொன்மனச் செம்மல் – கிருபானந்த வாரியார்
5. மக்கள் திலகம் – தமிழ்வாணன்
6. வாத்தியார் – திருநெல்வேலி ரசிகர்கள்
7. புரட்சித்தலைவர் – கழகத் தோழர்கள்
8. இதய தெய்வம் – தமிழ்நாடு பொதுமக்கள்
9. மக்கள் மதிவாணர் – இரா.நெடுஞ்செழியன்
10. ஆளவந்தார் – ம.பொ.சிவஞானம்

நீதிதேவனை சுட்ட வழக்கு – எம்.ஜி.ஆர். மீது கொலை முயற்சி

மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற எம்.ஜி.ஆரை கொலை செய்வதற்காக சுட்ட எம்.ஆர்.ராதாவுக்கு மூன்று வருடம் மட்டுமே தண்டனை தந்து சட்டத்திற்கு அறிவே இல்லை என உலகிற்கு சொன்ன வழக்கு!. இறைவனின் ஆசியால் எம்.ஜி.ஆர் மரணத்தினை வென்று மக்களின் இதயத்திலும், தமிழ்நாட்டிலும் ஆட்சி செய்தமையை மறக்க இயலுமா,.

மருத்துவமனையில் வேட்பாளர் மனு தாக்குதல்

மருத்துவமனையில் வேட்பாளர் மனு தாக்குதல்

கொலை முயற்சி –

1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பினை பயன்படுத்தி எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடட்டார். பிறகு இராதாவே தன்னுடைய நெற்றிப் பொட்டிலும் தோளிலும் சுட்டுக்கொண்டார்.

மக்களின் வேண்டுதல்களாலும், அன்பினாலும் எம்.ஜி.ஆரின் உயிருக்கு பாதகமில்லை. எம்.ஆர்.ராதாவிற்கும் ஒன்றும் ஆகவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கொலை செய்ய முயன்றதன் பின்புலம் –

1. பெரியார் –

ஜூலை 1949ல் 72 வயதான பெரியார் 26 வயதேயான மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். ராஜாஜி அவர்களிடம் யோசனைக் கேட்டுவிட்டுதான் பெரியார் திருமணம் செய்து கொண்டார் எனவும் கூறப்பட்டது. ராஜாஜி காங்கிரஸ் காரர் என்பதை விடவும் பாப்பனர் என்றே எல்லா திராவிடத் தலைவர்களும் வருந்தனார்கள். திராவிடதின் தலைவன் என்று சொல்லிக் கொண்டு ஆரியர்களிடம் யோசனை கேட்டது சரியல்ல என கோசமிட்டார்கள். எனினும் பெரியார் தான் செய்தது சரியென்றே கடைசி வரை வாதாடினார். இந்த ஒழுக்கமற்ற செயலினால் வருத்தம் கொண்ட அண்ணாத்துரை, ஈ.வி.கே. சம்பத் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினர்.

“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று பெரும் படையே கிளம்பியது. அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும், பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது.

திராவிடக் கலகத்தில் பெரும் புள்ளியான எம்.ஜி.ஆர், “பணக்காரக் குடும்பம்” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடி விட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின.

2.எம்.ஆர்.ராதா –

எம்.ஆர்.இராதா மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.பெரியவர் என்கின்ற முறையில் எம்.ஜி.ஆர் அவர்கள் எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை. மற்றவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் சிறந்தவராக இருந்தார் எம்.ஜி.ஆர். பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது.

இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான ராதா, காமராஜரின் தனிப்பட்ட நண்பரும் ஆவார். தேர்தலில் வெற்றி பெற தி.மு.கவிற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர்களுடன் பெரியாரும், எம்.ஆர்.ராதாவும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். ராஜாஜியிடன் அறிவுரைக் கேட்டு பெரியார் நடப்பதும், காமராஜரின் நண்பர் என்ற முறையில் ராதாவின் நிலைபாடும் மிகவும் விமர்சிக்கப்பட்டது. பெரியார், காமராஜர் என பெரிய மனிதர்கள் சொல்லித் தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டார் என்று மக்கள் தெரிவிக்கப்பட்டது.

மூடிமறைத்தல் –

உண்மையான காரணம் மக்களுக்குப் போய் சேரக் கூடாதென்று எம்.ஆர்.ராதாவின் மேலேயே முழுப் பழியும் போடப்பட்டது. “பெற்றால்தான் பிள்ளையா” படத்தொடர்பான தகராறில் தான் எம்.ஜி.ஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா சுட்டார் என அவர் தரப்பில் சொல்லப்பட்டது. படத்தின் கதைப்படி கதாநாயகின் அண்ணனாகவே எம்.ஆர்.ராதா வந்தார், அசோகனே வில்லனாக நடித்தார்.

படத்தினை எடுக்கும் போது போலி துப்பாக்கிக்கு பதிலாக நிஜத்தினை யாரோ வைத்துவிட்டனர். அதனால் படத்தினை காட்சிப்படுத்துகையில் இந்த விபத்து நடந்துவிட்டது எனவும் சிலர் பரப்பினர். ஆனால் சம்பவம் நடந்தத போது “பெற்றால்தான் பிள்ளையா” படம் மிகவும் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை பார்க்க எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்கு வந்த போதுதான் சுட்டார்.

தண்டனை விவரம் –

முதலில் சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் அவர் இராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பின் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், இராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினர். ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர் நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார்.

அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், இராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் இராதா குற்றவாளியென முடிவு செய்தார். இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25, 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார். இராதாவின் வயது (57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதன்பின், வழக்கத்திற்கு மாறாக, வழக்கு விசாரணைக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. உச்சநீதி மன்றத்தில் இராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த இந்திய உச்சநீதி மன்றம் அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது.

எம்.ஜி.ஆர் நட்பே பாராட்டினார் –

சுடப்பட்ட நிகழ்விற்கு பின்னும் எம்.ஆர்.ராதாவை எம்.ஜி.ஆர் வெறுக்கவில்லை. எம்.ஆர்.ராதாவும், எம்.ஜி.ஆரும் எதற்சையாக ஒரு விமானத்தில் வர, எம்.ஆர்.ராதாவின் வருகையை தனது ரசிகர்களுக்கு தெரியாமல் செய்து எம்.ஆர்.ராதாவினை காப்பாற்றினார். ரசிகர்களுக்கு மட்டும் எம்.ஆர்.ராதாவின் வருகை தெரிந்திருந்தால் சங்கடங்கள் நேரும் என்ற எண்ணமே இதற்கு காரணம்.

தொடர்ந்து நாடகங்களில் நடித்தார் ராதா. ஒரு சமயம் ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் எம்.ஜி.ஆர் விசுவாசிகள் பயந்தனர். அதன் காரணமாக எம்.ஜி.ஆர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர். அப்போது எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரிடம் வருத்தம் தெரிவித்ததாகவும், தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறுகின்றனர்.

1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி எம்.ஆர்.ராதா இறந்தார். முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், ஒரு கலைஞனின் இறப்பிற்கு செல்ல முடிவெடுத்தார்.ஆனால் இம்முறை ராதாவின் உறவினர்கள் எம்.ஜி.ஆரை தடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர் செய்த அரசு மரியாதையையும் மறுத்துவிட்டனர்.